தாய்போலத் தேற்றுவார்

தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; எருசலேமில் நீங்கள் தேற்றப்படுவீர்கள் - எசாயா 66:13. ஆண்டவர் தாயினும் மேலாய் நம்மை அன்பு செய்கிறார். தாய் தேற்றுவதைப் போல நம்மை தேற்றுகிறார். நம்மில் பலர் நமக்கு அன்பு செலுத்த தாய் என் அருகில் இல்லையே என்றும், ஆதரவற்ற அனாதையைப் போல இருக்கிறேன் என்றும், கலங்குகிறோம்.  

"தாயின்  உதரத்திலிருந்தே உங்களைத் தாங்குபவர் நான், கருவிலிருந்தே உங்களைச் சுமப்பவர் நான்.  உங்கள் முதுமைவரைக்கும் நான் அப்படியே இருப்பேன்; நரை வயதுவரைக்கும் நான் உங்களைச் சுமப்பேன்; உங்களை உருவாக்கிய நானே உங்களைத் தாங்குவேன்; நானே உங்களைச் சுமப்பேன்; நானே விடுவிப்பேன் என்று ஆண்டவர் சொல்கிறார். 

பால்குடிக்கும் தன் மகவைத் தாய் மறப்பாளோ? கருத்தாங்கினவள் தன் பிள்ளைமீது இரக்கம் காட்டாதிருப்பாளோ? இவர்கள் மறந்திடினும், நான் உன்னை மறக்கவே மாட்டேன். இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை நான் பொறித்து வைத்துள்ளேன். உன் சுவர்கள் எப்பொழுதும் என் கண்முன் நிற்கின்றன.என்று ஆண்டவர் சொல்கிறார். நம்முடைய அம்மாகூட எல்லா வேளையிலும் நமக்கு ஆதரவாய் இருக்க முடிவதில்லை. நேரமும், தூரமும், காலமும் தாயின் அன்பை குறைக்கலாம். ஆனால் ஆண்டவர்  தேற்றுகிறது மட்டுமல்ல,  தேவைகளை சந்திக்கிறவராகவுமிருக்கிறார்.

ஆண்டவர் ஒருபோதும் நம்மை கைவிடமாட்டார். நம்முடைய துன்ப வேளையிலும், தனிமையின் வேளையிலும், புயலும், கடுங்காற்றும் நம்மேல் மோதுகிற வேளையிலும் அவர் நம்மோடிருப்பார், நம்மைத் தேற்றுவார்.

செபம்: ஆண்டவரே, தாயினும் மேலாய் என்னை அன்பு செய்பவரே உமக்கு நன்றி. ஆண்டவரே எனக்கென யாரும் இல்லையே, ஆறுதல் சொல்வார் ஒருவரும். இல்லையே என ஏங்கும் அனைவரையும் நீர் உம் அன்பால் நிறைத்து அவர்களுக்கு அன்பும் இரக்கமும் பாதுகாப்பும் பாதுகாப்பும் சமாதானமும் கிடைக்க அருள் புரியும். ஆமென்.