நோம்புக்கஞ்சி ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 31.03.2025

நோம்புக்கஞ்சி
எங்கவூர்ல முஸ்லீம் மாருங்க
ரம்ஜான எதிர்பார்ப்பாங்களோ இல்லையோ
நாங்க எதிர்பார்த்து
காத்துக்கொண்டேதானிருப்போம்
பாய்க வீட்டுப் பிரியாணி கூட
அழைப்பிருந்தால் மட்டுமே
நாவு சுவைக்கும்
ஆனால் நோம்புக் கஞ்சிக்கு
அப்படியொரு வகைமையெல்லாம்
எப்போதும் கெடையாது
பச்சரிசி ருசியோடும்
ஏலம் இலவங்க மணத்தோடும்
அன்பான குணத்தோடு
ஊத்துவாக நம்மூரு பாய் மாருங்க
சாதி மதத்தையெல்லாம்
பள்ளிவாச வாசலிலேயே கலட்டி விட்டு
நேரான வரிசையில்
கையில் போசியோடும்
தீராத பசியோடும் காத்திருந்து வாங்கி வருவோம்
பள்ளிக்கூடக் குழந்தைகளும்
வயசான முதியோருந்தான்
கூட்ட எண்ணிக்கையில அதிகமாகயிருக்கும்
அதில்லாம தாய்மாரென்றால்
வரிசையில் முன்னுரிமையும் உண்டு
ரம்ஜான் மாசத்துல
பள்ளி வாசலச் சுத்திலும்
வடை பஜ்ஜிக் கடைகள் நிறைந்திருக்கும்
ஊருத் தெருவிற்குள்ளாரயும்
பலகார விற்பனை
படு ஜோராகப் போகும்
"வடைய ஒரு கடிக் கடிச்சிக்கிட்டு
நோம்புக் கஞ்சிய குடிச்சோமுண்டா
அட நாமதான் குடிச்சோமா
ஒரு போசிக் கஞ்சியையும்!" என வியந்து
வயிற்றைப் பார்த்து
உறுதிபடுத்திக்கொள்ளலாம்
இருபத்தி ஏழாம் நாள்
வயிறுத் தானாவே
அளவுல கொஞ்சம் பெருத்துக்கும்
ஏன்னா பிரியாணி கஞ்சி ஊத்துவாங்கனு
மூக்கு வேர்த்துக்கிட்டு
முன் சாய்ந்தரமே
கூட்டம் கூடிக் கெடப்போம்
இந்த ரம்ஜான் மாசத்துல
எங்கவூர் ஏழைகள் பலருக்கும்
ராத்திரி நேரச் சாப்பாடே
நோம்புக் கஞ்சியாத்தானிருக்கும்
அதனாலயே என்னவோ
ரம்ஜான் முஸ்லீம் பண்டிகையா
எங்கவூருல ஒருபோதும் தெரிஞ்சதில்ல
அதுவொரு ஊர்ப் பண்டிகையா
ஏழைகளின் பசி போக்கும் பண்டிகைதான்
இப்போது வரைத் தெரியுது.
சாமானியன்
ஞா சிங்கராயர் சாமி
கோவில்பட்டி
Daily Program
