வறுமைக்கு முடிவு இல்லை | அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil

பணக்காரர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக, வறியவர்களின் எண்ணிக்கையும் பெருகிக்கொண்டே இருக்கும்.

இந்தியா வளமிகுந்த நாடு என்று சொன்னாலும் வறியவர்கள் அதிகம் வாழும் இடம் என்றுதான் சொல்ல முடியும். பசியின் கொடுமையால் மா விதைகளையும், எலிகளையும் தின்று உயிர்விட்ட விவசாயிகளையும், வறுமையால் தற்கொலை செய்துகொண்ட ஏழைகளையும் நம் நாட்டில்தான் பார்க்க முடிகிறது.

வறுமையால் தமது மகள்களையே ஏரில் பூட்டி நிலத்தை உழுத விவசாயியின் மனநிலை எப்படி இருந்திருக்கும்?

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம், சேஹோர் மாவட்டம், பசந்த்புர் பங்கிரி கிராமத்தைச் சேர்ந்தவர் சர்தார் கஹ்லா என்னும் விவசாயி. விவசாய நிலத்தை உழும் பணிக்குச் சொந்தமாக இவரிடம் காளைகள் இல்லை. வாடகைக்கு எடுக்கப் பணமும் இல்லை. இவர் செய்த செயல்தான் நம்மைத் துயரத்துக்கு உள்ளாக்கியுள்ளது. 14 வயது ராதிகா மற்றும் 11 வயது குந்தி என்னும் தம் இரு மகள்களையும் ஏரில் பூட்டி நிலத்தை உழுதுள்ளார். பிஞ்சுக் குழந்தைகளின் மனமும் உடலும் தங்கள் குடும்ப வறுமைக்கு ஒத்துழைத்தது.

படிக்கின்ற வயதில் பள்ளிக்குக்கூடச் செல்லமுடியாமல் மனதைக் கல்லாக்கிக்கொண்டு உழைக்கின்ற பிஞ்சு உள்ளங்கள் எத்தனை பேர்!

குளிர்சாதன அறையில் காலுக்கு மேல் கால் போட்டு, பாதி உணவை உட்கொண்டு மீதி உணவைக் குப்பைத்தொட்டியில் வீசி எறியும் மனிதர்கள் இருக்கும்வரை எப்படி வறுமையை ஒழிக்க முடியும்?

இன்றைய உலகில் ஏழை பணக்காரர்களின் இடைவெளி தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு வருகிறது. காரணம் எல்லாரும் சமமாக வாழ்வதற்குப் பலரும் விரும்பவில்லை.

எழுத்து 
அருட்பணி. ஜெ.ஞானசேகரன்.

Daily Program

Livesteam thumbnail