கையில் தவழும் பச்சிளம் குழந்தை | அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil

தொட்டிலில் படுத்து விளையாட வேண்டிய குழந்தைகள் இன்று குப்பைத் தொட்டியில் தூக்கி எறியப்படுகிறார்கள்.

தொப்புள் கொடியில் இரத்தம் உலர்வதற்கு முன்னதாகவே தெருவிலும், குப்பைத் தொட்டியிலும் வீசப்பட்டுப் பாலுக்காகவும், அம்மாவின் கதகதப்பான மடிக்காகவும் ஏங்கும் குழந்தைகளைப் பார்க்கும்போது கல்லான இதயமும் நிச்சயம் கனியும்.

நாமக்கல் மாவட்டத்துக்கு இடைப்பட்ட பகுதி சேந்தமங்கலம். இப்பகுதியின் அருகில்தான் மேரியம்மாள் நடத்தும் கருணை இல்லம் ஒன்று அழகாகக் காட்சியளிக்கின்றது. கைவிடப்பட்ட குழந்தைகளுக்கும், ஆதரவற்ற முதியோருக்கும் இந்தக் கருணை இல்லத்தின் வாசல் எப்போதும் திறந்தே இருக்கிறது.

பிறந்தவுடன் வேண்டாம் என்று குப்பைத் தொட்டியில் வீசப்படும் குழந்தைகளை, இவர்கள் எடுத்து வந்து பராமரித்து, அந்தக் குழந்தைகளை அரசிடம் ஒப்படைக்கும் பணியைச் சிறப்பாகச் செய்து வருகிறார் மேரியம்மாள்.

தமிழகத்தில் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும்போதெல்லாம், கையில் ஒரு கைக்குழந்தையுடன் தான் இவர் வருவார். இவ்வாறு கடந்த 21 ஆண்டுகளில் 80 குழந்தைகளைத் தொட்டில் குழந்தைத் திட்டத்தில் சேர்த்துள்ளார்.

குழந்தைகளோடு இவரது பணி முடிந்துவிடாமல், திக்கற்றவர்களாக விடப்படும் முதியோருக்குத் தமது வீட்டில் அடைக்கலம் கொடுத்துத் தமது இல்லத்தையே கருணை இல்லமாக மாற்றியுள்ளார். இவர்கள் இல்லத்தில் கண்தெரியாத மூதாட்டிகள், மன வளர்ச்சி குன்றிய மூதாட்டிகள் எனப் பலரும் இருக்கின்றனர்.

இவருக்குத் துணையாக இருந்து உதவி செய்துவருபவர்கள் இவரது கணவர் மைக்கேலும், மகன் சகாயமும்தான்.

சில உயர்ந்த மனிதர்கள் மற்றவர்களைவிட இன்னும் சிறியவர்களாகக் கருதிப் பணிவிடைப் புரிகிறார்கள்.

எழுத்து 
அருட்பணி. ஜெ.ஞானசேகரன்.