அன்பு அனைத்தையும் தாங்கும் | அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil
பிறரை அதிகமாக நேசிப்பவர்கள் மட்டுமே அதிகம் காயப்படுகிறார்கள்.
2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மராத்திய மாநிலத்தில் பாராமதி நகரில் அறுபது வயதைத் தாண்டிய மூத்த குடிமக்களுக்கான ஓட்டப் பந்தயம் நடைபெற்றது. இப்போட்டியில் 66 வயதான லதா பாக்வான் கரே மூன்று கிலோ மீட்டர் ஓடி முதல் பரிசைத் தட்டிச்சென்றார். பந்தயத்தில் பலரும் ஓடுவதற்கான விளையாட்டு உடையுடன் தயாராக நின்ற நிலையில், லதா பாக்வான் கரே காலில் செருப்புகூட அணியாமல் தலையில், முக்காடுடன், ஒன்பது முழ சாரியை உடுத்தியபடி ஓடி முதல் பரிசைத் தட்டிச்சென்றார்.
வாழ்நாளில் வேகமாகக்கூட நடந்திராத லதாவால் எப்படி அதுவும், வெறும் கால்களோடு முதல் பரிசைப் பெற முடிந்தது என்று ஆராய்கின்றபோது, நோயுற்றிருந்த தம் கணவரைக் காப்பாற்ற வேண்டி மருத்துவச் செலவுக்காகவே ஓடியது தெரியவந்தது. “என் கணவரைக் காப்பாற்ற இதற்குமேல் எந்தத் தியாகத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்" என்று லதா அவர்கள் சொன்னது, அவர் தன் கணவர்மீது எந்த அளவுக்கு அன்பு வைத்திருக்கிறார் என்பதைப் புரியவைக்கிறது.
புல்டானா மாவட்டத்தில் பிம்ப்லி என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் லதா. இவரும் இவர் கணவரும் கடின உழைப்பாளிகள். இவர்களுக்கு மூன்று மகள்கள். எப்படியோ சிரமப்பட்டு மூன்று மகள்களுக்கும் திருமணம் நடத்தி வைத்தனர். அன்றாடம் 100 ரூபாய்க்கு வயல்களில் கூலி வேலை செய்து பிழைக்கும் ஏழைத் தம்பதியர் இவர்கள். திடீரென்று ஒருநாள் தம் கணவர் நோயினால் பாதிக்கப்பட, செலவுக்குக் கையில் பணமில்லை. அரசு மருத்துவமனைக்குத் தம் கணவரை அழைத்துச் சென்றார் லதா. மேலும் சில பரிசோதனைச் செய்வதற்காகத் தனியார் மருத்துமனைக்குச் செல்ல வேண்டியிருந்தது. அதற்கு 5000 ரூபாய் கட்டணம் தேவைப்பட்டது.
மிகுந்த வேதனையோடு மருத்துவமனைக்கு
வெளியே வந்த லதா தம்பதியினர், அருகில் இருந்த டீக்கடையில் வடை வாங்கிச் சாப்பிடுகிறார்கள். அவர்கள் வாங்கிய வடையைப் பொதிந்த தாளில்தான் மாரத்தான் பற்றிய விளம்பரம் இவரின் கண்களுக்குத் தெரிந்தது. கணவரின் உயிரைக் காப்பாற்றுவதற்காக ஓடினார் லதா. கணவரின் மீதுள்ள அன்பால் வெறுங்காலோடு ஓடிப் பரிசுப் பணத்தையும் பெற்றார் லதா.
உண்மையான அன்பு எதையாவது கொடுப்பதோ, வாங்குவதோ அல்ல. எது தேவையானதோ, அதை அந்த நேரத்தில் செய்வதுதான்.
எழுத்து
அருட்பணி. ஜெ.ஞானசேகரன்.