பசித்தவருக்குப் புசிக்க உணவளி | அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil
பசியின் வேதனையை அனுபவித்தவரால்தான் இன்னொருவரின் பசியை உணர்ந்து போக்க முடியும்
ஆதரவற்றவர்கள் தெருத் தெருவாக, ஊர் ஊராக சுற்றித் திரிவதை எல்லா இடங்களிலும் பார்க்கமுடியும். ஆங்காங்கே ஒட்டிய வயிறுடன் ஒருவேளை உணவுக்காகப் பாத்திரம் ஏந்தி சுற்றித் திரிபவர்களைப் பல இடங்களில் பார்த்திருப்போம். அவர்கள்மேல் மனமிரங்கி உணவு வழங்கும் இரக்கக் குணம் கொண்டவர்கள் பலர் சமூகத்தின் திரைக்குப் பின்னால் உள்ளனர்.
உடுமலைப்பேட்டைப் பகுதியில் குப்பைகளைக் கிளறி அதில் கிடக்கின்ற உணவுப் பொட்டலங்களை, ஆதரவற்ற பலர் எடுத்து உண்டுகொண்டிருப்பதைப் பல முறை பார்த்த பாலமுருகன் அவர்களுக்கு உணவு வழங்க முன்வந்தார். நம் முன்னோர் நமக்குக் கற்றுத் தந்த தானம் அன்னதானம். பசித்தவருக்குப் புசிக்க உணவு கொடுக்கின்றபோது பசித்தவர் முகத்தில் ஒளிரும் மகிழ்ச்சியை அளவிடவே முடியாது.
தனியாளாக தினமும் 120 பேருக்கு இவரின் அன்னதானச் சேவை நீள்கிறது. அதிகாலையில் எழுந்து உணவு தயார் செய்து, அதைப் பொட்டலங்களாக மடித்து, தண்ணீர்ப் பாட்டிலையும் வைத்துக்கொண்டு இவரின் காலைப் பயணம் தொடங்குகிறது.
உடுமலைப் பேருந்து நிலையம், பழனி செல்லும் சாலை, பொள்ளாச்சி சாலை, ராஜேந்திர சாலை என நாலாப் பக்கமும் இவரது கை நீள்கிறது. ஆரம்பத்தில் வெறும் 20 பேருக்குத் தொடங்கிய அன்னதானச் சேவை தற்போது 120ஐத் தாண்டியுள்ளது. இவரின் தன்னலமற்ற சேவையை உணர்ந்து பலரும் தானாக முன்வந்து அரிசி, பருப்பு, காய்கறி போன்றவற்றை இலவசமாக வழங்குகின்றனர்.'
வறுமையும் பசியும் எவ்வளவு கொடுமையானது என்பதைப் புரிந்துகொள்ள இவர் தனது மகனையும் உதவிக்கு அழைத்துச் செல்கிறார். "அன்னதானச் சேவை எனக்குப் பிறகும் தொடரும். என் பிள்ளைகள் இச்சேவையைத் தொடர்வார்கள்” என்று நம்பிக்கைபடக் கூறுகிறார் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த பாலமுருகன்.
பசித்தவர்களுக்குத் தம் உணவைப் பகிர்ந்துகொடுப்பதைவிட வேறு எதை ஆண்டவர் நம்மிடம் கேட்கப்போகிறார்.
எழுத்து
அருட்பணி. ஜெ.ஞானசேகரன்.