இயற்கை கடவுளின் கைவண்ணம் ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 29.08.2024

புத்தி சிந்திக்கின்றது.

மனம் அலைகிறது.

காது கேட்கிறது.

கண்கள் பார்க்கின்றது.

வாய் பேசுகிறது. 

மூக்கு நுகர்ந்து கொண்டே இருக்கிறது.

புலன்கள் செயல்பட்டுக்
கொண்டே இருக்கின்றன.

உடல் தான் 'நான்' என்று அறியாமையில் எண்ணிக் கொள்கிறது.

ஞாபகங்கள் வந்து வந்து போகின்றன.

இதயம் துடித்துக் கொண்டே இருக்கின்றது.

வயிறு பசித்துக் கொண்டே இருக்கிறது.

உணவு செரித்துக் கொண்டே இருக்கிறது.

நாளங்களில் இரத்தம் 
ஓடிக் கொண்டே இருக்கிறது.

சுவாசம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

உயிர்கள் விருப்புற்றும் வெறுப்புற்றும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றன.

வாழ்க்கை நகர்ந்து கொண்டே இருக்கிறது.

நதிகள் சதா சல சல என
ஓடிக் கொண்டே இருக்கின்றது.

காற்று அடித்துக் கொண்டே இருக்கிறது.

கடலில் அலைகள் அடித்துக் கொண்டே இருக்கின்றது.

காலங்கள் ஓடிக் கொண்டே இருக்கிறது.

எல்லாம் வளர்ந்து கொண்டே இருக்கிறது.

எல்லாம் அழிந்து கொண்டே இருக்கின்றது.

நேற்று இருந்ததோ 
இன்று இல்லை - இறப்பு.

நேற்று இல்லாததோ
இன்று உண்டு - பிறப்பு.

மாற்றமே இதன் சிறப்பு.

மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

இயற்கை இயல்பாக
இயங்கிக் கொண்டிருக்கிறது.
இயற்கை விதிகளுக்கு உட்பட்டு.

எல்லாம் சக்தியின் பரிமாணங்கள்.
எல்லாம் சக்தியின்
பரிணாமங்கள்.

நிலா சுற்றுகிறது.
பூமி சுற்றுகிறது.
சூரியன் சுற்றுகிறது.

நிலா பூமியைச் சுற்றுகின்றது.

பூமி தன்னையும் சுற்றி
சூரியனையும் சுற்றுகிறது.

ஒளி பட்ட பூமி பகலாகிறது.
ஒளி படா பூமி இரவாகிறது.

பூமி தன்னை முழுமையாகச் சுற்றிக் கொள்ளும் நேரமே
நாளாகிறது.

பூமி சூரியனை முழுமையாகச் சுற்றிக் கொள்ளும் நேரமே
வருடமாகிறது.

ஆகாய வெளியில் 
பூமி உலா!
அருகே நிலா!
சுடரும் ஒளிரும்
சூரியன்!
மின்னும் நட்சத்திரங்கள்!

நிலவை பூமி
ஈர்க்க.
பூமியை சூரியன்
ஈர்க்க.

பூமித் தொட்டிலில்
ஆகாயக் கட்டிலில்
உயிர்களின் வாழ்க்கை.

எல்லாம்
விண்வெளியில்.
எல்லாம்
வெட்டவெளியில்.

எண்ணற்ற நிகழ்வுகள்.
எண்ணற்ற மாற்றங்கள்.

மண்ணில் பிறந்த உயிர்கள்.
மண்ணிலேயே
எல்லாவற்றையும் பெற்று
மண்ணிலேயே 
எல்லாவற்றையும் விட்டு
மண்ணோடு மண்ணாக.

நாமும் இயங்குகிறோம்.
நம்மைச் சுற்றி இருப்பதும் இயங்குகிறது.

தூங்கிக் காண்பது 
கனவு.
விழிப்பில் காண்பது
வாழ்க்கை.

இரண்டுமே நிரந்தரமில்லை.

மாறுவது எல்லாம்
நிரந்தரமில்லை.

மாறாதது ஒன்றே 
நிரந்தரம்.

எல்லாவற்றையும் 
எல்லாம் வல்ல ஒன்று
இயக்குகின்றது.

எல்லாம் அதுவாகி 
எங்கும் அது இயங்குகின்றது.

எது அது...................????????

இறைவன் கிருபை.

இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் நம்பிக்கையும் அமைதியும் நிம்மதியும் கிடைக்க நிறைவாய் அருள் தாரும் எம் இறை இயேசுவே.

மரியே வாழ்க

 

சாமானியன் 
ஞா சிங்கராயர் சாமி 
கோவில்பட்டி