உண்மை பகர துணிவு தேவை, அது நமக்குத் தேவை! | ஆர்.கே. சாமி | VeritasTamil

24 ஜூன் 2024  
பொதுக்காலம் 12ஆம் வாரம் -  திங்கள்

திருமுழுக்கு யோவானின் பிறப்பு-பெருவிழா

எசாயா   49: 1-6                                                            
திருத்தூதர் பணிகள் 13: 22-26
லூக்கா  1: 57-66, 80


உண்மை பகர துணிவு தேவை, அது நமக்குத் தேவை!

   
முதல் வாசகம்.


இன்றைய முதல் வாசகமானது எசாயா நூலின் இரண்டாம் பகுதியில் இருந்து எடுக்கப்பட்டது. இச்சூழலில் யூதர்கள் பாபிலோனில் அடிமைகளாக உள்ளனர். சொந்த நாடான யூதேயாவுக்குத் திரும்ப விடுதலைக்கு ஏங்குகின்றனர்.  சாலமோன் கட்டிய இறைவனின் ஆலயமும் முற்றிலுமாக பாபிலோனியர்களால்  தகர்க்கப்பட்டது.  அவர்களுடைய சொந்த நாட்டிலிருந்தும், அவர்களுடைய கடவுளிடமிருந்து பிரிந்து வாடுகிறார்கள். கடந்த கால பாவச் செயல்களை எண்ணியும் புலம்புகிறார்கள். 

இக்காலக் கட்டத்தில் தான்  இறைவாக்கினர் எசாயாவின் வார்த்தைகள் அவர்களுக்கு நம்பிக்கை தருவதாக அமைகிறது. கடவுள் அவரது மீட்பரை அனுப்புவார் என்றும், அவர் இஸ்ரயேல் மக்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து, நீதியை நிலைநாட்டுவார் என்ற வாக்குறுதியை எசாயா வழங்குகிறார்.

எசாயா நூலின்  இந்த இரண்டாம் பகுதியில், இஸ்ரயேல் மக்கள் கண்டிப்பாக தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பிச் செல்வார்கள் என்றும், இழந்துவிட்ட   தங்களது நாட்டையும், ஆலயத்தையும் கட்டியெழுப்புவார்கள் என்றும், அவர்களுக்கு நம்பிக்கைச் செய்தி வழங்கப்படுகிறது.  

மேலும், முதல் வாசகத்தில் எசாயா தான் தாயின் வயிற்றில் இருந்தபோதே கடவுளால் அழைக்கப்பட்டார் என்று மொழிந்ததும்,    யாக்கோபை (இஸ்ரயேலை)  தம்மிடம் கொண்டு வரவும், சிதறுண்ட இஸ்ரயேலை ஒன்று திரட்டவும் கருப்பையிலிருந்தே ஆண்டவர் என்னைத் தம் ஊழியனாக உருவாக்கினார்; ஆண்டவர் பார்வையில் நான் மதிப்புப்பெற்றவன்; என் கடவுளே என் ஆற்றல் என்று எசாயா கூறுவதும்  திருமுழுக்கு யோவானுக்கும் பொருந்தும் என்பதால்,  எசாயா முன்னுரைத்த மீட்பராக வந்துள்ளவர் திருமுழுக்கு யோவான்தான் என்று யூதர்களில் சிலர் நம்பினர்.


இரண்டாம் வாசகம்.

அந்த நாட்களில், பவுல் கூறியதாவது:

கடவுள் சவுலை அரசர் பதவியிலிருந்து  நீக்கிவிட்டுத் தாவீதை  அரசராக ஏற்படுத்திபோது கடவுள் தாவீதைக்  குறித்து: ஈசாயின் மகனாகிய  தாவீதை எனக்குப் பிடித்த  ஒரு மனிதனாகக் கண்டேன்; அவன் நான் விரும்பியதையெல்லாம் நிறைவேற்றுவான்’ என்றார். பின்னர், தாவீதின் வழிமரபிலிருந்தே இயேசுவின் வருகையை அறிவித்தபடி மீட்பரை தோன்றச் செய்தார். 

அடுத்து, மீட்பரின் வருகைக்கு ஆயத்தம் செய்ய முன்குறிக்கப்பட்ட யோவான்  மக்களிடம், மனம் மாறி திருமுழுக்குப் பெறுங்கள்’ என்று இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் பறைசாற்றியதை பவுல் அடிகள் நினைவூட்டுகிறார்.  


நற்செய்தி.


இன்றைய நற்செய்தி திருமுழுக்கு யோவானின்  பிறப்பு மற்றும் பெயரிடுதலைக் குறிக்கிறது.  வயதான எலிசபெத் ஓர் ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தது  உண்மையிலேயே மகிழ்ச்சியான செய்தி.  குழந்தைக்குப் பெயர் சூட்டும்போது, அக்குழந்தைக்கு அவனது தந்தை (செக்கரியா) அல்லது மற்றொரு குடும்ப உறுப்பினரின் பெயரால் அழைக்க வேண்டும் என்று உறவினர்கள் நினைக்கிறார்கள்.  இருப்பினும், எலிசபெத் குழந்தைக்கு யோவான்  என்று பெயரிட விழைகிறார்.  உறவினர் அதற்கு உடன்படாத நிலையில்  அவர்கள் ஊமையாக இருந்த செக்கரியாவுடன் தொடர்பு கொள்ளும்போது, “அவரும் யோவான் என்றே எழுதிக் காட்டுகிறார்.  செக்கரியா தனது செய்தியைத் தெரிவிக்கையில், ஒன்பது மாதங்களுக்கு முன்பு அவநம்பிக்கைக்காக கட்டப்பட்ட  அவரது நாக்கு விடுவிக்கப்பட்டது.  

உறவினர் அனைவும்  வியப்படைந்த வேளையில்  அவரோ கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்.  யோவான் வளர்ந்து, ஆவியில் திடம் பெற்று, இஸ்ரயேலருக்குப்   ஊழியம் செய்யத் தொடங்கும் வரை பாலைநிலத்தில் வாழ்ந்தார் என்று நற்செய்தி முடிவடைகிறது.

யோவான் என்னும் பெயர்  கிரேக்கத்தில்  ‘Ioannis’ என்றும், இலத்தினில் ‘Johannes' என்றும் உள்ளது. இதன் பொருள் ‘ஆண்டவரின் அருள்’ என்பதாகும். எனவேதான் இப்பெயர்  தமிழில் ''அருளப்பன்'' என்று அக்காலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது.  


 சிந்தனைக்கு.


 ஒவ்வொரு ஆண்டும் திருஅவை மூவரின் பிறந்தநாள்களை மட்டுமே  கொண்டாடுகிறது: அவர்கள், இயேசு (டிசம்பர் 25, இயேசுவின் தாய் மரியா (செப்டம்பர் 8, மற்றும் இயேசுவின் முன்னோடியாக விளங்கிய திருமுழுக்கு யோவான் 24 ஜூன்). இன்று இன்று திருஅவை  திருமுழுக்கு யோவானின் பிறந்தநாளைப் பெருவிழாவாகக்  கொண்டாடுகிறது. 

இயேசு வெளிப்படுத்தியது  போன்று திருமுழுக்கு யோவான்  மனிதராகப் பிறந்தவர்களுள் பெரியவராகவும் (மத் 11:11), எசாயா போன்ற  இறைவாக்கினர்கள் தாயின் கருவில் இருக்கும்பொழுது தேர்ந்து கொள்ளப்பட்டவர்களாக இருந்தாலும்,  திருமுழுக்கு யோவான் அவரது தாய் எலிசபெத்துவின்  கருவில் இருக்கும்போது தூய ஆவியினால் முற்றிலுமாக ஆட்கொள்ளப்பட்டவர் என்று லூக்கா நற்செய்தியாளர் விவரிக்கிறார் (லூக் 1: 41).  மேலும் இவருக்கு முன்பாகத் தோன்றிய   இறைவாக்கினர்கள் மெசியாவைக் குறித்து முன்னறிவித்த வேளையில், திருமுழுக்கு யோவான் மட்டுமே  “இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்” (யோவான் 1:29) என்று துணிவாக மீட்பருக்குச் சான்று பகர்ந்தார்.  ஆண்டவர் இயேசுவின் வருகைக்காக மக்களைத் தயாரித்துத் தனது பணியை நிறைவாகச் செய்து முடித்தார்.   
 
திருமுழுக்கு யோவான் இயேசுவிற்கு உறவினர் மற்றும் இயேசுவுக்கு ஆறு மாதம் மூத்தவர். ஆனாலும், தன்னைத் தாழ்த்திக்கொண்டு 'எனக்குப் பின் வருபவர் எனக்கு முன்பே இருந்தவர். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக் கூட எனக்குத் தகுதியில்லை' என்று  தன்னை அடிமையாக முன்வைக்கின்றார். யூதர்கள் மத்தியில் தான் மிகப் பெரிய இறைவாக்கினராகக் கருதப்பட்டாலும், தனக்கென்று சீடர்கள் இருந்தாலும் தாழ்ச்சியில் மிளிர்கின்றார் யோவான்.
அடுத்து, 'வரவிருப்பவர் நீர் தாமே?' என்று தம்மிடம் வந்தவர்களிடம், 'ஆம்! நான்தான்!' என்று சொல்லியிருந்தால், யோவானுக்கு பேரும் புகழும் கிடைத்திருக்கும்.  மாறாக, அவர்  தான் மெசியா என்பதை மறுக்கின்றார். உண்மையுரைத்து,  இயேசவுக்கும் கடவுளின் திருவுளத்திற்கும் அடிபணிகிறார். திருமுழுக்கு யோவான் மட்டுமல்ல, அவரது பெற்றோர்களும் தன் மகன் இயேசுவுக்கு இணையற்றவர் என்பதை ஏற்று மகிழ்ந்தார்கள். அவர்களில் பொறாமை துளிர்விடவில்லை. 
திருமுழக்கு யோவான் தவமிருந்து பெற்ற பிள்ளை. வீட்டில் செல்லமாக வளர்த்து ஆளாக்கி, தங்களுக்குத் துணையாக வாழச் செய்திருக்கலாம். ஆனால், பாலைநிலத்தில் எளிமையான உணவு, மிக எளிய உடை என அவர் வழியில் விட்டுவிட்டார்கள் பெற்றோர்கள். இங்கே கடவுள் திருவுளத்திற்கு ஏற்ப வாழும் குடும்பத்தைப் பார்க்கிறோம். 
திருமுழுக்கு யோவான் ஒரு நேர்மையாளர். ஏரோதுவின் தவற்றைச் சுட்டிக்காட்டியதால் சிறைத்தண்டனைக்கும் மரணத்திற்கும் ஆளானார். ஏரோதுவின் மனைவியோடு  அவர் சமரசம் செய்துகொள்ள விரும்பவில்லை. அது பாவம் என்று விலகினார்.
நாம் இவ்வுலகில் பிறந்ததும் வளர்ந்ததும் ஒரு வலராறு அல்ல. இடைப்பட்ட காலத்தில் நாம் வாழந்த வாழுவுதான் நாம் விட்டுச் செல்லும் வரலாறாக நிலைக்கும். 
 

இறைவேண்டல்.

அன்பு இயேசுவே, ‘பெண்களின் பிறந்தவர்களில் யோவானைவிடப் பெரியவர் எவருமில்லை’ என்று திருமுழுக்கு யோவானைக் குறித்துச் சான்று பகன்றீரே, நானும் அவரைப் போல, உமக்குச் சான்றுபகரும்  முன்னோடியாக வாழ எனக்கு அருள்புரிய  உம்மை இறைஞ்சுகிறேன், ஆமென்.

  
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452