நாமே கடவுளின் ஆலயம் | ஆர்.கே. சாமி | VeritasTamil

5 பிப்ரவரி 2024, பொதுக்காலம் 5ஆம் வாரம் - திங்கள்
முதல் அரசர் 8: 1-7, 9-13                 
மாற்கு 6: 53-56
  
முதல் வாசகம்.
முதல் அரசர் நூலின் ஆறாவது அதிகாரத்தில் சாலமோன் அரசர் எருசலேமில் ஓர் ஆலயத்தைக் கட்டியதை அறிந்தோம்.  அதன் தொடர்பாக,  இன்றைய வாசகம் சாலமோன் கட்டிய ஆலயத்திற்குள்  உடன்படிக்கைப் பேழை கொண்டு வரப்பட்டதை விவரிக்கிறது.  இஸ்ரயேலரை நாற்பது ஆண்டுகளாக எகிப்திலிருந்து மீட்டு, பாலைநிலத்தின்  வழியாக வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு  வழிநடத்திய கடவுள், அவருடைய உடனிருப்பை   பகலில் மேகத் தூண்களிலும், இரவில் நெருப்புத் தூண்களிலும் வெளிப்படுத்தினார். மலைமீதும் அவரது உடனிருப்பு காணப்பட்டது.

இப்போது, சாலமோனின் திட்டத்தால், அதே உடன்படிக்கைப் பேழை தாவீதின் நகரிலிருந்து கொண்டுவரப்பட்டு, புதிதாகக் கட்டப்பட்ட ஆலயத்தின் கருவறைக்குள் வைக்கப்பட்டது. இதனிமித்தம் மேகங்களில் உறைந்த கடவுள் இப்போது  இறங்கி வந்து அவரது மக்கள் மத்தியில் உறையலானார்.  


நற்செய்தி
மக்கள் தங்களின் பல்வேறு நோய்களில் இருந்து குணமடைய இயேசுவிடம் திரண்டது பற்றிய மற்றொரு நிகழ்ச்சியை இன்று வாசிக்கிறோம்.   இயேசுவின் மேலாடையைத் தொட்டாலே போதும் நிச்சயம் குணம்பெறுவோம்  எற்று அவர்களில் பலர் நம்பினர்.  


சிந்தனைக்கு.
உடன்படிக்கையின் பேழை கடவுளா? அதனையா சாலமோனும்  இஸ்ரயேலரும் வழிபட்டனர்?  இல்லை, அது கடவுளின் தூய உறைவிடம்.  ஆலயத்தில்தான் கடவுள் இருக்கிறார் என்ற எண்ணத்தில்   உழன்ற நம் முன்னோரிலிருந்து நாம் வேறுபட்டிருக்கிறோம். நமது  உடல்தான்    தூய ஆவி தங்கும் கோவில் (1 கொரி 6:19). ஆலயத்தில் உறையும் கடவுளை முதலில் நம்மில் காண வேண்டும். நம்மில் உறைந்திருக்கும் கடவுள் ஒரு வினாடி கூட நம்மைவிட்டுப் பிரிவதில்லை என்ற  எண்ணத்துக்கு உரியவர்கள் நாம்.

சமூகமாகக் கடவுளை வழிபடுவதற்கு ஓர் இடம் தேவை என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனாலும், ஆலயத்திற்குச் சென்று வந்த பிறகு, கடவுள் அந்த ஆலயத்திலேயே இருக்கிறார் என்ற எண்ணம் தவறானது.   இயேசு ஓர் ஆலயத்துக்கு மட்டுமே அடித்தளமிட்டார். அது ஒரு கட்டடம் அல்ல. மாறாக,    திருத்தூதர்களை அடித்தளமாகக் கொண்ட திருஅவை.  

அடிப்படை திருஅவை சமூகங்களாக அல்லது அன்பியங்களாக நாம் ஒன்றுகூடி வாழும்போது, கடவுளின் உன்னத உறைவிடங்களாக திகழ்கிறோம். ஆலயத்தில் அனுபவிக்க இயலாத கடவுளை அன்பியத்தில் அனுபவக்க இயலும். இதை புனித பவுல் அடிகளின், ‘நீங்கள் கடவுளுடைய கோவிலென்றும் கடவுளின் ஆவியார் உங்களில் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா? ஒருவர் கடவுளின் கோவிலை அழித்தால் கடவுள் அவரை அழித்துவிடுவார். ஏனெனில், கடவுளின் கோவில் தூயது; நீங்களே அக்கோவில்’  (1 கொரி 3:16-17) என்ற படிப்பினையை நினைவில் கொள்ள வேண்டும். 

பாபிலோனியரும் உரோமையரும் எருசலேம் ஆலயத்தை இடித்துத்  தரைமட்டமாகினபோதும் யூதர்களை அழிக்க முடியவில்லை. ஏனெனில் ‘யாவே’ கடவுள் அவர்களில் குடிக்கொண்டிருந்தார். அவர்கள் ‘யாவே' கடவுளின் உறைவிடமாகத் திகழ்ந்தார்கள். இன்று நம் வசிப்பிடங்களிலும் ஆலயங்கள் உடைக்கப்படலாம், குண்டு வெடிப்பால் தகர்த்தப்படலாம், ஆனால் கடவுள் நம்மில் வாழ்வதால்,  நமது நம்பிக்கையை அழிக்க இயலாது.  

ஆகவே, திருப்பலிக்கும் இதர வழிபாட்டுக்கும். அருளடையாளக் கொண்டாட்டங்களுக்கும்  ஆலயத்தை நோக்கி ஓடினாலும், வாழும் இடத்தில் உள்ள கத்தோலிக்கச் சமூகத்திலும் குடும்பத்திலும் கடவுள் உறைந்திருப்பதை முதலில் ஏற்க வேண்டும். அடிப்படை திருஅவை சமூகம்  அல்லது அன்பியம் ஒரு கோயில். அதில் உயிர்த்த ஆண்டவர் இயேசு வாழ்கிறார். அதே இயேசுதான் ஆலயத்தில் நற்கருணையில் உள்ளார். 

இன்றைய நற்செய்தியில் இயேசுவை தேடி ஓடி வந்த கூட்டம் பல நன்மைகளைப் பெற்றது. அவ்வாறே, இயேசுவை மையமாகக் கொண்ட அன்பியத்தை நாடிச் செல்வோருக்கும் பல நன்மைகள் கிட்டும் என்பதில் ஐயமில்லை. 

இறைவேண்டல்.

அன்பு இயேசுவே, உமது மறையுடலாக உள்ள திருஅவையில் உம்மை ஆராதித்து வழிபடவும், நீர் என்னில் உறைந்திருக்கிறீர் என்ற நம்பிக்கையில் நிலைத்திருக்கவும் துணைபுரிவீராக. ஆமென். 

  
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452