மணிப்பூரில் இடம்பெயர்ந்த கத்தோலிக்கர்களுக்கு புதிய பள்ளியினை வழங்கிய கேரளா அருட்தந்தை ! | Veritas tamil
மணிப்பூர் மாநிலத்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ள V. முன்பி பகுதியில், இன வன்முறையால் இடம்பெயர்ந்த குடும்பங்கள் மீண்டும் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள உதவும் முக்கிய முன்னேற்றமாக, இடம்பெயர்ந்தோர் (IDP) கத்தோலிக்க குடியேற்ற மையத்தில் புதிதாக கட்டப்பட்ட பள்ளி திறந்து வைக்கப்பட்டது.
இந்த பள்ளி தென்னிந்தியாவின் கேரளாவில் உள்ள Welfare Services Ernakulam அமைப்பின் நிர்வாக இயக்குநரும் செயலாளருமான அருட்தந்தை ஜோசப் கொலுத்துவெல்லில் அவர்களின் பங்களிப்பால் உருவானது.
புதிய கட்டிடத்தின் திறப்பு விழாவில் அவர் நேரில் கலந்து கொண்டார். அப்போது இம்பால் பேராய மறைமாவட்டத்தின் பேராயரின் பதில்குரு அருட்தந்தை வர்கீஸ் வெல்லிக்காக்கம் புதிய பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தார்.எளிமையானதாக இருந்தாலும், இந்த விழா அங்கு தற்போது வசித்து வரும் 76 குடும்பங்களுக்கு மிகுந்த அர்த்தம் கொண்டதாக இருந்தது. அந்த குடியேற்ற மையத்தில் உள்ள வீடுகள் இம்பால் பேராய மறைமாவட்டத்தின் ஆதரவிலும் கத்தோலிக்க நன்கொடையாளர்களின் உதவியிலும் கட்டப்பட்டன.
இந்த நிகழ்வில் சிங்க்நகாட் புனித தோமையார் பங்கின் பங்குத் தந்தை அருட்தந்தை மங், மூன்று அருட்சகோதரிகள் மற்றும் குடியேறிய சமூக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.சிறிய பாராட்டு நிகழ்ச்சியில் அருட்தந்தை மங், இடம்பெயர்ந்த குடும்பங்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றி பேசினார். அவர்களில் பலர் விவசாயம் அல்லது வணிகத்தில் முன் அனுபவமின்றி புதிய சூழலுக்கு தங்களைச் சீரமைத்துக் கொள்ள முயற்சித்து வருகிறார்கள். அவர்களின் மரியாதையையும் எதிர்காலத்தையும் மீட்டெடுக்க கல்வி முக்கிய அடித்தளமாக இருப்பதை அவர் வலியுறுத்தினார்.
அதே கருத்தைத் தொடர்ந்து அருட்தந்தை வர்கீஸ், தன்னிறைவு முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். வீடு அமைப்பதற்கான திட்டத்தின் ஆரம்ப காலத்தை நினைவுகூர்ந்து, “நிதி எங்கிருந்து வரும் எனத் தெரியாமல் நான் வாக்குறுதி அளித்தேன். இன்று அது நிஜமாகியுள்ளது; அது எங்களால் அல்ல, கடவுளால். நாம் பிரார்த்தித்து அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்” என்றார். மேலும் பெற்ற உதவியை மதித்து, பிறர்மீது சார்ந்து இருக்காமல் அதை நன்றாக பயன்படுத்த வேண்டும் என்று குடும்பங்களை ஊக்குவித்தார்.
தன் உரையில் அருட்தந்தை ஜோசப், Welfare Services Ernakulam அமைப்பில் ஆறு ஆண்டுகள் சேவை செய்த அனுபவத்தை பகிர்ந்து, மணிப்பூரின் இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவ முடிந்ததில் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்த பள்ளி குழந்தைகளின் எதிர்காலத்திற்கான முதலீடும் கஷ்டங்களின் நடுவே நம்பிக்கையின் அடையாளமும் என அவர் கூறினார். பெல்புவான் குடியேற்ற மையத்திற்கும் தாம் ஆதரவு வழங்கி வருவதாகவும், அங்கு தற்போது ஒரு தேவாலயம் கட்டப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
பள்ளி உருவாக சமூகத்தின் ஒற்றுமையும் ஒத்துழைப்பும் முக்கிய காரணமாக இருந்ததற்காக IDP சமூகத்தினருக்கு அவர் நன்றி தெரிவித்தார். மேலும் திட்டம் முழுவதும் தலைமைத்துவமும் ஆதரவும் வழங்கிய அருட்தந்தை வர்கீஸ் மற்றும் அருட்தந்தை மங் ஆகியோருக்கும் பாராட்டுத் தெரிவித்தார். இந்த பள்ளி குழந்தைகளை வலுப்படுத்தி சமூகத்திற்கு புதிய வாய்ப்புகளைத் திறக்கும் என்று கூறினார். மேலும் கேரளாவில் உயர்கல்வி தொடர விரும்பும் மாணவர்களுக்கு தொடர்ந்து உதவி வழங்கத் தயாராக இருப்பதாகவும் உறுதியளித்தார்.
அருட்தந்தை ஜோசப் கொலுத்துவெல்லில், எர்ணாகுளம்–அங்கமாலி பேராய மறைமாவட்டத்தைச் சேர்ந்த மறைமாவட்ட அருட்தந்தை ஆவார். தற்போது அவர் Welfare Services Ernakulam அமைப்பின் நிர்வாக இயக்குநரும் செயலாளருமான பணியில் உள்ளார். அவர் வணிக மேலாண்மையில் முதுகலைப் பட்டம் பெற்றவர். மேலும் திருச்சூர் மாவட்டம் பொங்கம் பகுதியில் உள்ள நைப்புண்யா மேலாண்மை நிறுவனத்தில் உதவி நிர்வாக இயக்குநராகவும் உதவி இயக்குநராகவும் முன்பு பணியாற்றியுள்ளார்.