24 மணி நேரம் | அருள்பணி. முனைவர் அ. பவுல்ராஜ் | Veritas Tamil
காலமும், நேரமும் இறைவன் நமக்கு அளித்த மாபெரும் கொடை. இறைவனின் இதயமாகிய இயற்கைக்கு அடுத்தபடியாக மதிக்கவேண்டியதும், போற்றவேண்டியதும் இந்தக் காலம்தான். திரும்பப்பெற முடியாத மிகப் பெரிய சொத்து. முனிவர் ஒருவர் தம் சீடர்களைப் பார்த்து, "வாழ்க்கை என்றால் என்ன?" என்று கேட்டார். ஒரு சீடர் எழுந்து, "எண்பது முதல் நூறு ஆண்டுகள் நலமோடு வாழ்வது" என்றார். முனிவர் “தவறு” என்று பதில் சொன்னார். வேறொரு சீடர், “அறுபது ஆண்டுகளாவது ஆசையின்றி வாழ்வது" என்றார். முனிவர் அதையும் தவறு என்றார்.
மற்றொரு சீடர் “நோய் நொடியில்லாத பெருவாழ்வு வாழ்வது" என்றார். முனிவர் இதையும் தவறு என்று கூறினார். இறுதியாக ஒரு சீடர், "வாழ்க்கை என்பது ஒரு மூச்சு" என்றார். முனிவர் அந்தப் பதிலை “சரி” என்று ஆமோதித்து அச்சீடரைப் பாராட்டினார். தொடர்ந்து விளக்கமளித்த முனிவர், வாழ்க்கை என்பது ஒரு மூச்சு. அது ஒரு நொடிப் பொழுதுதான். நமது வாழ்க்கை காலத்தால் ஆனது. காலத்தோடு நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும் நமது வாழ்வின் மதிப்பை உயர்த்துகின்றது. எனவே, வாழ்வு என்னும் மூச்சு நொடியில் அடங்கியிருக்கிறது. எனவே, இந்த நொடி மிக மிக உயர்ந்த மதிப்புடையது. அதனைச் சிறந்த முறையில் கையாள வேண்டும். ஒவ்வொரு நொடிப்பொழுதையும் கணக்கிட்டுச் செலவு செய்ய வேண்டும்.
இரயில்வே துறையில் ஒரு வேலையை விரும்பிய ஓர் இளைஞன் ஒரு கோடீஸ்வரரைச் சந்தித்து, தன்னை அவ்வேலைக்கு சிபாரிசு செய்யுமாறு கேட்டான். அக்கோடீஸ்வரர், "நாளை காலை சரியாக ஒன்பது மணிக்கு என்னை என் அலுவலகத்தில் சந்திக்க. வேண்டும்" என்று கூறி அனுப்பினார்.
இளைஞன் மறுநாள் காலை 9மணி 20 நிமிடத்திற்கு கோடீஸ்வரரின் அலுவலகம் சென்றான். ஆனால், அங்கே அவர் இல்லை. சற்று முன்தான் அவர் வெளியில் கிளம்பியதாக வாயில் காப்பாளர் பதில் சொல்லி அனுப்பினார். சில நாள்கள் சென்ற பின்பு ஒரு விழாவில் அந்த இளைஞன் கோடீஸ்வரரைச் சந்திக்க நேர்ந்தது. அப்போது அன்றொரு நாள் தான் அவரைச் சந்திக்க வந்தபோது அவரில்லை என்பதைப் பற்றிக் கூறினான். கோடீஸ்வரர் இளைஞரிடம், "உன்னை நான் ஒன்பது மணிக்கு வரச்சொன்னேன். நீ அப்போது வரவில்லையே" என்றார். “இருபது நிமிடங்கள்தானே தாமதமாக வந்தேன். அந்த இருபது நிமிடத்தில் என்ன நடந்துவிடப்போகிறது?" என்று மிகச் சாதாரணமாகக் கேட்டான். "அது சரி, 9 மணிக்கு வரவேண்டிய நீ இருபது நிமிடம் தாமதமாக வந்து என்னைச் சந்திக்க உனக்கு என்ன உரிமையிருக்கிறது? நேரம் என்பது மிகப் பெரிய சொத்து, என் சொத்தை நீ அவ்வளவு சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது" என்று கடிந்து கொண்டார். சில நிமிடத் தாமதங்கள் பல மாதங்களுக்கும், வருடங்களுக்கும் கூட கிடைக்கக்கூடிய வாய்ப்பைப் பெறவிடாமல் செய்துவிடுகின்றன.
சிந்திய நீர் பாத்திரத்திற்குத் திரும்பப் போவதில்லை. கடந்துபோன நேரமும் அப்படித்தான். ஏழை, பணக்காரர், உயர்ந்தவர், தாழ்ந்தவர் வித்தியாசமின்றி உலகில் அனைவருக்கும் சமமான ஒன்று உண்டு எனில், அது 24 மணி நேரம்தான். இந்த நேரத்தைச் சிறப்பாக உபயோகிக்கத் தெரிந்தவர்கள் வெற்றியடைகிறார்கள்.
நேரத்தை வாங்கவோ, விற்கவோ, இருக்கும்போது சேமித்து வைக்கவோ இயலாது என்பதால், அதைச் சரியான முறையில் உபயோகித்துக்கொள்ள வேண்டும். காலத்தை இழந்து விடுகிறவர் வாழ்க்கையை இழந்துவிடுகிறார். காலம் இறந்து போனாலும் நம்முடைய செயல்களால் வாழ்ந்துகொண்டிருக்க வேண்டும். வீணாக நேரத்தைக் கழிப்பவர்கள், நேரத்தைக் கடத்துபவர்கள், சோம்பேறிகள். சோம்பல் நாம் விழித்திருக்கும் போதே நம்முடைய நேரத்தைப் பறித்துக்கொள்கிறது. சோம்பல் உள்ளவர்கள் முள் இல்லாத கடிகாரம் போன்றவர்கள். ஓடினாலும் நின்றாலும் நேரத்தைக் காட்டப்போவதில்லை. அவர்கள் இருந்தும், வாழ்ந்தும் பயனில்லை. இருக்கின்ற நொடிப்பொழுதைக் கருத்தாய்ச் செலவிடுவோம்.
நிகழ்காலத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய இந்த நொடி, நம்மை உயர்த்திச் செல்லும் தொடுவான வசந்தம் மட்டுமல்ல, நிகழ்கால நீள் நிழல். எனவே, நாம் நேரத்திற்கு மரியாதை கொடுப்போம்.
"காலத்தை கருத்தாய் பயன்படுத்துபவர்
ஞாலத்தை தமதாக்கும் சிறந்தவர்”.
வாழ்க்கை நேரத்தினால் அளவிடப்படுகிறது. எனவே, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும், ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு நொடியின் துளியும் நம் வாழ்க்கையாகட்டும்.