“ஒன்றிணைந்த பயணத்தின் வெற்றி உள்ளூர் திருஅவைகளின் வாழ்விலும் பணியிலும் உள்ளது” – கர்தினால் மரியோ கிரெச் | FABC | Veritas Tamil

ஒன்றிணைந்த பயணத்தின் செயலாக்கத்தை நடைமுறைப்படுத்துவது உரோமையிலிருந்து வழங்கப்படும் வழிகாட்டுதல்களால் மட்டும் வெற்றியடையாது; மாறாக, உள்ளூர் திருஅவைகளின் வாழ்விலும் மறைப்பணியிலும் அது வேரூன்றுவதன் மூலமே வெற்றியடையும் என்று, ஆயர் மாமன்றத்தின் பொதுச் செயலர் கர்தினால் மரியோ கிரெச் அவர்கள் வலியுறுத்தியுள்ளார். ஆசிய ஆயர்கள் திருஅவையின் ஒன்றிணைந்த பயணத்தை தங்களுடைய சொந்தப் பொறுப்பாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அவரது உரையின் மையச் செய்தியாக அமைந்தது.

ஜூலை 24 அன்று, ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் 12ஆவது நிறைவிறுதிப் பேரவையில் பங்கேற்ற பிரதிநிதிகளிடம் உரையாற்றிய கர்தினால் கிரெச் அவர்கள், “ஆயர் மாமன்றத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பாதைகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார். உலகளாவிய ஒன்றிப்புப் பயணத்தின் அடுத்த கட்டத்தில் புதுப்பித்தலின் மையமாக வத்திக்கான் அல்ல, உள்ளூர் திருஅவைகளே இருக்கின்றன என்று அவர் வலியுறுத்தினார்.

இந்த நடைமுறைப்படுத்தும் கட்டத்தின் மையப் பொருள் உள்ளூர் திருஅவை, அதாவது உங்கள் திருஅவைகளே” என்று கர்தினால் கிரெச் கூறினார்.

ஒன்றிணைந்த பயணம் என்பது உரோமையிலிருந்து இயக்கப்படும் ஒரு திட்டமாகக் கருதப்படக் கூடாது என்றும், மாறாக ஒவ்வொரு மறைமாவட்டத்திலும் வேரூன்ற வேண்டிய ஒரு வாழ்வியல் முறையாக இருக்க வேண்டும் என்றும் அவர் விளக்கினார். நற்செய்தி அறிவிக்கப்படும் இடமும், நற்கருணை கொண்டாடப்படும் இடமும், இறைமக்கள் ஒன்றிணைந்து பயணிக்கும் இடமுமான உள்ளூர் திருஅவைகளே இதன் அடித்தளமாகத் திகழ்கின்றன.

உலகளாவிய திருஅவையின் நிர்வாகப் பிரிவு மட்டுமல்ல உள்ளூர் திருஅவை” என்று இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் பார்வையை நினைவுகூர்ந்த அவர் கூறினார்.

திருஅவை மாமன்றத்தின் பொதுச் செயலராக தம்மை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நியமித்த பின்னர் தமக்குக் கிடைத்த முதல் கடிதங்களில் ஒன்றையும் கர்தினால் கிரெச் எடுத்துக்காட்டாகப் பகிர்ந்துகொண்டார். ஓர் ஆயர் எழுதியிருந்த அக்கடிதத்தில், “நாங்கள் வத்திக்கானின் ஆளுகைக்குட்பட்ட ஒரு சிற்றரசு அல்ல. நாங்கள் ஓர் உள்ளூர் திருஅவை. நாங்களே திருஅவை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தக் கடிதம் கத்தோலிக்கத் திருஅவையியல் குறித்த அடிப்படை உண்மையை வெளிப்படுத்துவதாக கர்தினால் கிரெச் கூறினார். ஒவ்வொரு உள்ளூர் திருஅவையும் குறிப்பிட்ட ஓர் இடத்தில் முழுமையாகத் திகழும் திருஅவையாகும். தங்களது சொந்தப் பண்பாட்டு மற்றும் மேய்ப்புப்பணி சூழலுக்கு ஏற்ப கிறிஸ்துவின் பணியை அவை முன்னெடுக்கின்றன.

2028ஆம் ஆண்டு நடைபெறவுள்ள திருஅவைப் பேரவையை நோக்கிய நடைமுறைப்படுத்தும் கட்டம், உலகெங்கும் உள்ள மறைமாவட்டங்களின் அர்ப்பணிப்பைச் சார்ந்துள்ளது என்று அவர் தொடர்ந்து வலியுறுத்தினார்.

ஜகார்த்தாவில் கூடியிருந்த ஆயர்களிடம் பேசிய அவர், அவர்கள் தனிநபர்களாக அல்ல, தங்களது உள்ளூர் திருஅவைகளின் வாழ்வியல் நம்பிக்கையையும் அனுபவத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மேய்ப்பர்களாக ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் நிறைவிறுதிப் பேரவையில் பங்கேற்றுள்ளனர் என்று குறிப்பிட்டார்.

ஓர் உள்ளூர் திருஅவை தனது பங்களிப்பை வழங்கத் தவறினால், அது உலகளாவிய திருஅவைக்கு இன்றியமையாத ஒன்றை இழக்கச் செய்கிறது” என்று அவர் கூறினார்.

ஒவ்வொரு மறைமாவட்டமும் தனித்துவமான கொடைகள், மேய்ப்புப்பணி அனுபவங்கள் மற்றும் பண்பாட்டு புரிதல்களைக் கொண்டுவருகின்றன. இவை அனைத்தும் ஒட்டுமொத்த திருஅவையின் ஒன்றிப்பை வலுப்படுத்துகின்றன என்றும் அவர் விளக்கினார்.

உலகளாவிய திருஅவையின் உயிர்த்துடிப்பு உங்கள் திருஅவைகளின் உயிர்த்துடிப்பிலேயே உள்ளது” என்று கர்தினால் கிரெச் கூறினார்.

இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் போதனைகளை அடிப்படையாகக் கொண்டு, கத்தோலிக்கத் திருஅவை என்பது பல உள்ளூர் திருஅவைகளின் ஒன்றிப்பாகும் என்று அவர் விளக்கினார். ஒவ்வொரு உள்ளூர் திருஅவையும் முழுமையான திருஅவையாகத் திகழ்ந்தாலும், மற்ற உள்ளூர் திருஅவைகளுடன் ஒன்றிப்பில் நிலைத்திருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நடைமுறைப்படுத்தும் கட்டத்தின் நோக்கம் புதிய ஆவணங்களை உருவாக்குவதில் மட்டும் இல்லை; மாறாக, மறைமாவட்டங்கள், ஆயர் பேரவைகள் மற்றும் கண்ட அளவிலான பேரவைகளுக்கு இடையே கொடைகளின் பரிமாற்றத்தை ஊக்குவிப்பதாகும் என்று அவர் கூறினார்.

புதிய ஆவணங்களை உருவாக்குவது முதன்மையான நோக்கம் அல்ல. ஒன்றிப்பை வலுப்படுத்தி, நமது மறைப்பணிக்கு ஆதரவளிக்கும் வகையில் கொடைகள் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குப் பாய்வதை ஊக்குவிப்பதே முக்கிய நோக்கம்” என்று அவர் தெரிவித்தார்.

தமது உரையின் நிறைவில், ஒன்றிணைந்த பயணத்தின் எதிர்காலம் தங்களது சொந்த மறைமாவட்டங்களிலேயே வடிவமைக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் ஆயர்கள் தங்கள் நாடுகளுக்குத் திரும்ப வேண்டும் என்று கர்தினால் கிரெச் அழைப்பு விடுத்தார். ஆயர் மாமன்றம் எதிர்நோக்கும் புதுப்பித்தல், ஆயர்கள், குருக்கள், துறவிகள் மற்றும் பொதுநிலையினர் இணைந்து செபித்து, செவிமடுத்து, பகுத்தறிந்து, மறைப்பணியில் ஒன்றாகப் பயணிக்கும் பங்குத்தளங்களிலும் உள்ளூர் சமூகங்களிலும் வளர்ச்சி பெறும் என்று அவர் கூறினார்.

Tamil Survey Popup Image