அப்பா யோசேப்பு | அருள்பணி. முனைவர் அ. பவுல்ராஜ் | Veritas Tamil

விண்ணக இறைவனின் மகனை, மகனாகப் பெற்று கண்ணுக்குக் கண்ணாகக் காத்து வளர்த்தவர்; 
கன்னித் தாய்க்குக் கணவராகக் கிடைத்த கற்பின் சுடர்; மண்ணக மாந்தருக்கு நல்வழி காட்டுகின்ற மணிவிளக்கு.
அன்பும், அறனும் விளைகின்ற நல்ல நிலமாக
இன்பமும் அமைதியும் பூக்கின்ற எழில் பூந்தோட்டமாக 
தம் குடும்பத்தை அமைத்தவர்.
உலகின் அனைத்துக் குடும்பங்களுக்கும் முன்மாதிரியாக நிலவுகின்ற திருக்குடும்பத்தின் நிகரற்றத் தலைவர்.
குடும்பங்களின் பாதுகாவலர்.
இவர்தான் புனித யோசேப்பு.

அவரின் ஆழ்ந்த, அதிசயமிக்க, பன்முகத்தன்மைகளையும், உயர்குணங்களையும் எண்ணிப் பார்ப்போம். வலிமை மிகு அவரது ஆழ்ந்த அமைதியும், மற்றும் விரைவான, விவேகமான செயல்திறனும் வாய்திறந்து அவர் பேசியிருக்கக் கூடிய எச்சொல்லையும் விட உயர்வும், உண்மையும், உறுதியும் வாய்ந்தவை.

தொடக்கத்திலிருந்தே திருச்சபையின் மரியாவுக்கும், மகனுக்கும் அடுத்த பெருமைக்கு உரியவராக மக்கள் யோசேப்பையே போற்றினர். கருத்தோடு உலகை மீட்கத் திருவுளம் கொண்ட இறைமகனைக் கருத்தாங்கும் பெருமை மரியாவுக்கு என்றால், இருவரையும் தம் உழைப்பால் தாங்கிப் பேணும் படியாக இறைவன் தேர்ந்தெடுத்து உயர்த்தியது இவரைத்தான். விண்ணகத் தந்தையின் அடையாளமாகவும், அவரது பதிலாளியாகவும், எண்ணற்ற வகையில் திருக்குடும்பத்தை வழிநடத்திய இவர் குடும்பங்களின் பாதுகாவலர் மட்டும் அல்ல, முழுத்திரு அவைக்கும் பாதுகாவலர், இவருக்குப் பல முகங்கள் உண்டு.

இறைமகனின் வளர்ப்புத் தந்தை, 
கடமையுணர்வுள்ள கணவன்.
கிறிஸ்தவக் குடும்பங்களின் காவலர். 
சிறப்புமிக்கக் கல்வியின் காவலர்.
தொழில் புரிவோர்க்குத் துணைவர்.
திருஅவையின் மகத்தான புரவலர். 
நிம்மதியான இறப்புக்கு நிச்சயமான உத்தரவாதம். எல்லாவற்றிற்கும் மேலாகப் புனிதர்களின் புனிதர்.

வாழ்வின் எல்லாச் சூழ்நிலைகளுக்கும் தன்னை உட்படுத்தி வாழ்ந்தவர். இவரது வேண்டுதலால், கேட்கும் வரங்கள் எதுவும் இறைவனிடமிருந்து கிடைக்காமல் போனதில்லை. ஏனெனில் இவர் நாம் கேட்கும் வரங்களுக்காக, நமக்காக எப்போதும் இறைவனிடம் வேண்டுகிறார்.

லிஜி ஓர் இளம்பெண். இவள் சார்ந்திருந்த பங்கு ஆலயம் புனித யோசேப்பைப் பாதுகாவலராகக் கொண்டிருந்தது. எனவே, லிஜிக்கு புனித யோசேப்பின்மீது அதிக பக்தியும், ஈடுபாடும் இருந்தன. அவரை உரிமையோடு "அப்பா" என்றே அழைப்பாள். சிறு வயதிலிருந்தே புனித யோசேப்பினுடைய செபத்தைச் சொல்வதிலும் நவநாள் வழிபாடுகளில் ஈடுபடுவதிலும் எந்த விதிவிலக்கும் இல்லாமல் பக்தியோடும் இருந்தாள்.

அவளுக்கு ஒரு குறை. அவளுடைய தந்தை மிகுந்த கோபக்காரர். எதற்கெடுத்தாலும் எரிச்சலோடு கத்திப் பேசுபவர். கோபத்தில் தன் நிலை மறந்து எதிரில் யார் இருககிறார்கள் என்ற உணர்வுகூட இல்லாமல் அடிக்கச் சென்றுவிடுவார். இவரால் வீட்டில் தினந்தோறும் பிரச்சனையாகவே இருந்தது. லிஜிக்கு இது பழக்கப்பட்டு இருந்தாலும், வளர வளரப் பயமும் படபடப்பும் கூடின. தன் அம்மாவின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்ற கவலையோடு தன் எதிர்காலமும் எப்படி இருக்கப் போகிறது என்ற கவலையும் அவளது மனதை அரித்துக்கொண்டே இருந்தது.

தன்னுடைய இந்தக் கவலைகளுக்கு வடிகாலாக புனித யோசேப்பை நாடினாள். அவள் சொன்ன செபம் இதுதான்:

"அப்பா, நீர் எவ்வாறு மரியாவுக்கு நல்ல கணவராக இருந்தீரோ, அதுபோல என் அப்பாவும், என் அம்மாவுக்கு நல்ல கணவராக இருக்கவேண்டும்.

நீர் எவ்வாறு இயேசுவுக்கு நல்ல அப்பாவாக இருந்தீரோ, அதுபோல என் அப்பாவும், எனக்கு நல்ல அப்பாவாக இருக்கவேண்டும்.

நீர் எவ்வாறு உமது குடும்பத்துக்குக் காவலராக இருந்தீரோ, அதுபோல என் அப்பாவும் எங்கள் குடும்பத்துக்கு நல்ல தலைவராக இருக்க வேண்டும்."

வழக்கம்போல அன்று அவளுடைய அப்பா வேலையிலிருந்து வீட்டிற்கு வந்தார். உள்ளே நுழையும் போதே கோபத்தோடே நுழைந்தார். காரணமின்றித் தன் மனைவியை அடித்து, பொருள்கள் அனைத்தையும் வீசியெறிந்து கத்தி ஆர்ப்பாட்டம் செய்தார். இதைப் பார்த்த லிஜி ஓடிப்போய் புனித யோசேப்பின் படத்தின் முன்பாக மண்டியிட்டு எப்போதும் தான் சொல்கின்ற செபத்தைச் சப்தமாக சொன்னாள்.

திரும்பத் திரும்ப அதையே சொல்லிக் கொண்டிருக்க அந்தச் செபம் அவளுடைய தந்தையின் காதில் விழுந்தது. வெறிநாய் போன்று இருந்த அவர் சாந்தமான செம்மறிபோல மாறினார். நேராகத் தன் மகளிடம் வந்து அவளுடன் சேர்ந்து மண்டியிட்டு அவரும் சேர்ந்து மன்றாடினார். மனம் மாறினார். அதிலிருந்து அவர் நல்ல அப்பாவாகவும், சிறந்த கணவராகவும் வாழ்ந்து வந்தார் என்று லிஜி கூறும்போது, "இதை எனக்குச் செய்து கொடுத்தவர் அப்பா யோசேப்புதான். அவர் நாமம் வாழ்க" என்று கண்ணீர் மல்க கூறினாள்.

ஆம்,
புனித யோசேப்பு கடமையுணர்வுள்ள கணவர் 
உன்னதமான வகையில் தன் மனைவி மரியாவை அன்பு செய்தார்; மதித்தார்.
கற்புத்திறம் மிளிர்ந்த தூய கணவராக வாழ்ந்தார்.
தன் மனைவியுடன் உள்ளத்தால் ஒன்றிணைந்து
உயர்ந்த வாழ்வு வாழ்ந்தவர்.
தூய உழைப்பால் மரியாவைக் காப்பாற்றியவர்.
எல்லாச் சூழல்களிலும் மரியாவுடன் இணைந்திருந்தவர்.