தங்க வீடு | அருள்பணி. முனைவர் அ. பவுல்ராஜ் | Veritas Tamil
இயற்கையழகு நிறைந்த குன்றின்மேல் எவ்வித வசதியுமில்லாத, எளிமையான சிறிய வீடு. அந்த ஏழைக் குடும்பத்தில் சிறுமி ஒருத்தி இருந்தாள். அவள் கொஞ்சம் வளர்ந்தவுடன் தன் வீட்டின் எதிரே உள்ள சிறிய தோட்டத்தில் விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். அவ்வாறு விளையாடும்போது, தன்னுடைய தோட்டத்தின் வேலி வழியாக, எதிரே இருந்த குன்றின் உச்சியில் ஓர் அழகிய வீடு இருப்பதைக் கண்டாள். அந்த வீட்டின் கதவு, ஜன்னல்கள் அழகாக தகதகவென ஜொலித்தன. இத்தகைய தங்கக் கதவு, ஜன்னல்கள் கொண்ட அந்த வீட்டில் வாழ வேண்டுமென்று ஆசைப்பட்டாள். தன் ஏழைப் பெற்றோருடன் அதில் வாழ்வதாகவும் கனவு கண்டாள். அந்த வீட்டைப் பார்க்கும்போதெல்லாம் அந்த ஜொலிப்பு அவளைக் கவர்ந்துகொண்டேயிருந்தது. அவள் ஒரு இளம்பெண்ணாக வளர்ந்தவுடன், தைரியமும், பலமும் தன் வீட்டைவிட்டுத் தனியே செல்லக்கூடிய தற்பாதுகாப்புத் திறமையும் கூடவே வளர்ந்தது. ஒருநாள் தன் தாயிடம் சென்று தன்னுடைய இரு சக்கர மோட்டார் வாகனத்தில் மலைச் சரிவு வரை சென்று வர அனுமதி கேட்டாள். தாய் மறுத்தாள். வெகு நேரம் போராடியபின் அனுமதி கிடைத்தது. ஆனால், வெகுதூரம் செல்லக் கூடாது. வீட்டிற்கு அருகே சற்று தூரம் வரை மட்டுமே செல்ல வேண்டும் என தாய் எச்சரித்தாள்.
அந்த அழகிய நாள் வந்தது. அந்தப் பெண் தன் மோட்டார் வண்டியை எடுத்துக்கொண்டு பயணமானாள். தன் வீடு இருந்த குன்றிற்கும், எதிரே இருந்த குன்றிற்கும் இடையே பள்ளத்தாக்கு இருந்தது. பயணமான பெண், மலைச்சரிவு வரை வந்தாள். பள்ளத்தாக்குத் தடையாகத் தோன்றினாலும், அந்தத் தங்க வீடு கண்முன் வர, தைரியத்துடன் பயணம் தொடர்ந்து பள்ளத்தாக்கைக் கடந்து குன்றின் உச்சியை அடைந்துவிட்டாள்.
அளவிலா மகிழ்ச்சியுடன் அந்தத் தங்க வீட்டின் முன்னால் இருந்த தோட்டத்தின் வாயில் அருகில் வண்டியை நிறுத்திவிட்டு, அந்த வீடு நோக்கிச் செல்லும் பாதையில் விரைவாக ஓடி அவ்வீட்டை அடைந்தாள். அவ்வீட்டை நோக்கினாள். ஏமாற்றம் அடைந்தாள். அதிர்ச்சியில் உறைந்து நின்றாள். ஏனெனில், அந்த வீட்டின் கதவுகள், மிகவும் சாதாரணமாகவும், மங்கியும், அதிக அழுக்கும், தூசியும் படிந்ததாகவும் இருந்தன. மிகவும் வருத்தத்தோடு, மனமுடைந்த நிலையில் திரும்பி வந்து தன்னுடைய வண்டியை எடுத்தாள். அப்போதுதான் அது அவள் கண்களில் பளிச்செனப் பட்டது. மீண்டும் தன் பார்வையை உயர்த்திப் பார்த்தபோது, பள்ளத்தாக்கைக் கடந்து இருந்த அந்தக் குன்றின் உச்சியில் அமைந்திருந்த அந்த சிறிய வீட்டின் கதவு, சன்னல்கள் அழகாக தகதகவென மின்னின. வியப்பு மேலிட அப்போதுதான் உணர்ந்தாள். அந்த வீடு வேறு எதுவுமல்ல. இவ்வளவு நாள் தான் வசித்து வந்த எளிய வீடு என்பதை. இவ்வளவு நாள்கள் தான் அந்த வீட்டில்தான் வசித்து வந்திருக்கிறோம் என்பதை நினைத்து மகிழ்ச்சியடைந்தாள்.
அந்த வீட்டின் ஜொலிப்பிற்குக் காரணத்தை ஆராய்ந்தாள். சூரியனிடமிருந்து புறப்பட்டு வருகின்ற ஒளிக்கதிர்கள் அழுக்குப் படிந்த அந்தக் கதவு, ஜன்னல்களின்மேல் பட்டுத் தெறித்து, எதிரொளித்து ஜொலிக்கச் செய்கிறது. எனவே, ஜொலிப்பிற்குக் காரணம் சூரிய ஒளியே என்று உணர்ந்தாள். இவ்வளவு நாள் இந்த ஒளியை நான் உணராமல் இருந்திருக்கின்றேன் என்று வருந்தி, விரைவாகப் புறப்பட்டு வீடு வந்தடைந்தாள். நம்பிக்கை ஒளி அவள் உள்ளத்தில் படர, தன் பெற்றோருடன் தங்க வீட்டில் மகிழ்ச்சியாக வாழ ஆரம்பித்தாள்.
நமது வாழ்க்கையும், இந்த வீடு போன்றது. நமது இதயமும், ஆன்மாவும், ஐம்பொறி வாயில்களும் மிகவும் பழுதடைந்த நிலையில், அழுக்குப் படிந்து இருக்கிறது. அதன்மீது கிறிஸ்து என்னும் ஆதவனின் ஒளி படும்போதுதான், தன்னிலை அறிந்து, தூய்மையாகி அழகாக ஜொலிக்க முடியும்.
மரணப் படுக்கையில் இருந்தார் ஒரு முனிவர். அவரைச் சுற்றிக் கண்ணீருடன் சீடர்கள்.
"நீரே எம் ஒளி. உம் ஒளியில்தான் நாங்கள் இதுவரை நடந்து வந்தோம். நீர் இல்லாத வாழ்வு எங்களுக்கு இனி இருட்டுதான். இருளில் நாங்கள் வழி தடுமாறுவோமே, எங்கள் கதி என்ன ஆவது? வழி சொல்லுங்கள் குருவே" என்றனர்.
சீடர்களிடம் முனிவர் சொன்ன இறுதி வார்த்தைகள் இவை: "இருட்டு என்று கலங்காதீர்கள். நீங்களே விளக்காக மாறுங்கள்".
கிறிஸ்து உலகின் ஒளி. அவரது சாயலாகப் படைக்கப்பட்ட நாம் ஒவ்வொருவரும் அவ்வொளியின் பிரதிபலிப்புகள். எனவே, நாமும் ஒளியாயிருக்கிறோம். "நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்"
( மத்5 :13).
காரிருளைப் பழிப்பதைவிட,
சிறு திரியை ஏற்றுவதேமேல். அதைவிட திரியின் ஒளிப்பிழம்பாகச் சுடர்விடுவது
மேன்மையிலும் மேன்மையானது.