உனக்குத் தெரியாமலே | அருள்பணி. முனைவர் அ. பவுல்ராஜ் | Veritas Tamil
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் கால்வின் கூலிட்ஜ் அதிக நாள்கள் வெள்ளை மாளிகையை இருப்பிடமாகக் கொள்ளவில்லை என்பது பலர் அறிந்திராத ஒன்று.
வாரன் ஹேஸ்டிங்ஸ் அதிபராக இருந்தபோது இவர் துணை அதிபராக இருந்தார். வாரன் இறப்பிற்குப்பின் இவர் அதிபரானார். திருமதி. வாரன் தொடர்ந்து வெள்ளை மாளிகையில் இருக்க விரும்பியதால், கூலிட்ஜ் ஓர் உணவகத்தில் மூன்றாவது மாடியில் தங்கியிருந்தார். ஒருநாள் நள்ளிரவில் தன் அறைக்குள் யாரோ நடமாடுவதைக் கண்டார். அந்த நபர் மெதுவாக, தான் உடைகள் மாட்டியிருந்த இடத்திற்குச் சென்று உடைகளை அப்புறப்படுத்தி அவரின் கைக்கடிகாரத்தை எடுத்தார்.
"நீ அதை எடுக்கக் கூடாது என்பது என் விருப்பம்" என்று கூலிட்ஜ் திடீரென்று கூறினார். அலறிய திருடன், "ஏன்?" என்று கேட்டான்.
“அது மிகவும் முக்கியமானது. நீ அதை எடுத்து சன்னலின் அருகே சென்று, அதில் என்ன எழுதியிருக்கிறது என்று வெளிச்சத்தில் பார்" என்றார். 'கால்வின் கூலிட்ஜ்க்கு மேலவையின் நடுவரால் பரிசாகக் கொடுக்கப்பட்டது' என்னும் வாசகத்தைப் படித்து அதிர்ந்து போனான் திருடன்.
"நீங்கள் அதிபர் கூலிட்ஜா?” என்று கேட்டு அவர் உணவகத்தில் தங்கியிருப்பது பற்றி மிகவும் வியந்து போனான். “ஏன் தம்பி திருடுகிறாய்?” என கூலிட்ஜ் கேட்க, "நானும் என் நண்பனும் விடுமுறைக்குப் போன இடத்தில் என் பணம் முழுவதும் தீர்ந்து விட்டது. இப்போது மீண்டும் கல்லூரிக்குச் செல்லவும், விடுதிக்கு பணம் செலுத்தவும் என்னிடம் பணம் இல்லை. உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் இவற்றை எடுத்துக்கொள்கிறேன்" என்றான்.
கூலிட்ஜிடம் 80 டாலர் பணம் இருந்தது. அவர் அவனிடம், "திரும்பிப் போகவும், விடுதிக்கும் உனக்கு எவ்வளவு பணம் வேண்டும்?" என்று கேட்டார். அவன், “32 டாலர்” என்றான். "32 டாலர் பணத்தை நான் உனக்குக் கடனாகத் தருகிறேன். திரும்ப எனக்குக் கொடுத்துவிட வேண்டும்" என்றார்.
அந்த இனைஞன் அவருக்கு நன்றி தெரிவித்து விட்டுச் செல்கையில், "நில். நீ மிகவும் நல்லவன். உன்னிடம் மேலான நற்குணங்கள், திறமைகள் உண்டு. ஆனால், தவறான பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறாய். நன்கு யோசித்துப் பார், மேலும் நீ வந்த அதே சன்னல் வழியே திரும்பிச் செல். காவலாளிகள் அங்குமிங்கும் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்” என்றார். இந்த வார்த்தைகள் இதயத்தில் தைத்த அம்புபோல இருந்தது அந்த இளைஞனுக்கு. ஏனெனில் என்
அவனும் மனம் மாறி சமுதாயத்தில் சிறந்த மதிப்போடு வாழ்ந்தான். கூலிட்ஜ் இறப்பது வரை இந்தச் செய்தி வெளியிடப்படவில்லை. 1957ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் டைம் பத்திரிகையில் இதை வெளியிட திருமதி. கூலிட்ஜ் அனுமதி தந்தார். அதில் சிறப்புச் செய்தி என்னவென்றால், அந்த இளைஞன் 32 டாலர் பணத்தைத் திரும்பச் செலுத்திவிட்டதாகக் குறிப்பிட்டிருந்தார்.
நமக்குத் தெரியாமலேயே, நாம் அறியாமலேயே... அதிகமான நல்லவையும், திறமையும் நம்மிலே உண்டு. நாம் அவற்றைக் கண்டுபிடிக்க வேண்டும். அதனைக் கண்டுபிடிக்கத் தவறும்போது தவறான பாதையை தெரிந்துகொள்கிறோம். நமது வாழ்க்கையும் மாறிவிடுகிறது. நம்முள் இருக்கும் நல்லவற்றைக் கண்டுபிடிக்கக் கொஞ்ச நேரத்தைச் செலவழிப்போம்... சரியான பாதையைத் தேர்ந்தெடுத்துப் பயணிப்போம். இதில் சிலரின் அறிவுரைகள் நமக்குப் பயன்படலாம். அதனைக் கருத்தில்கொள்வோம்.