சிந்திப்போம் சுயமாக! வளர்வோம் வளமாக! | அருட்சகோதரி ஜான்சி FBS | Veritas Tamil


நாம் ஒவ்வொருவரும் நமது திறமைகளை வளர்த்துக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற்ற பாதையை நோக்கி பயணிக்க வேண்டும் என விரும்புகிறோம். நாம் மட்டும் அல்லாது நமது தலைமுறையும் நன்றாக வாழ வேண்டும் என நினைக்கிறோம். அப்படி நினைப்பதோடு நின்றுவிடுவதில்லை. குழந்தை பிறந்தநாள் முதல் அந்த குழந்தை எந்தப் பள்ளியில் படிக்க வேண்டும், எதிர்காலத்தில் என்னவாக இருக்க வேண்டும் என்று எதிர்காலத்திட்டங்களை கணிப்பவர்களாக நாம் ஒவ்வொருவருமே செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. குழந்தைகள் படிக்கும் பள்ளியை தேர்வு செய்வது மட்டும் நமது பொறுப்பு என்று பல நேரங்களில் நினைத்துக் கொள்கிறோம். பள்ளியில் படிக்கும் குழந்தைகள் எத்தகைய கல்வியை பெறுகிறார்கள் என்று பார்க்க வேண்டிய கட்டாயமும் நம் அனைவருக்கும் உள்ளது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். பாடப்புத்தகத்தில் உள்ள பாடங்களை மனப்பாடம் செய்து மதிப்பெண்களை பெற்றால் மட்டும் போதும் என்ற மனநிலையை குழந்தைகளிடத்தில் அகற்றி, பரந்துபட்ட சிந்தனைகளை உள்வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை அவர்களின் உள்ளத்தில் பதிய வைப்போம்.


குழந்தைகள் சிறு வயதில் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு பெற்றோர்கள் தீர்வு காண்கிறோம். அவர்கள் வளர வளர தங்கள் வாழ்வில் எத்தனையோ பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள். அத்தகைய பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அவர்களே சுயமாக சிந்திக்க வேண்டும்;. எனவே பிரச்சனைகளை தீர்ப்பதற்கான மதிப்பீட்டுக் கல்வியை நாம் அவர்களுக்கு கற்றுக் கொடுக்க முன்வருவோம். பல சமயங்களில் நமது குழந்தைகள் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றுவிட்டால் அவர்கள் அறிவாளி என்று நாமே தவறாக நினைத்துக் கொள்கிறோம். அப்படி நினைப்பது தவறு என்பதை முதலில் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அறிவுடன் கூடிய நல்லொழுக்கத்தையும் நாம் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் ஒழுக்கம் இல்லாதவர்களாக வாழ்ந்து நாம் வாழும் சமூகத்தையும் ஒழுக்கமற்றதாக மாற்றி விடுவார்கள். எனவே முதலில் நமது குழந்தைகளுக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுத்து நல்ல சமுதாயம் படைக்க வழி செய்வோம். அதுவே நம்மை நல்வழிப்படுத்தும் என்பதை உணர்ந்து கொள்வோம். கல்வியுடன் கூடிய நல்லொழுக்கத்துடன் வளரும் குழந்தைகளே வாழ்க்கையில் வெற்றி வாய்ப்புக்களை அதிகம் பெறுகிறார்கள் என்ற உண்மையை உணர்ந்து செயல்பட்டு வாழ்க்கையில் வெற்றி பெற அவர்களை பயிற்றுவிப்போம். அதுவே நாம் அவர்களுக்கு கொடுக்கும் சிறந்த பரிசாக இருக்கட்டும். 
 

எழுத்து 

அருட்சகோதரி ஜான்சி FBS

Daily Program

Livesteam thumbnail