கிறிஸ்துவில் தியாகமற்ற சீடத்துவம், சீடத்துவம் ஆகாது! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

4 அக்டோபர் 2025                                                                                                                  
பொதுக்காலம் 26ஆம் வாரம் – சனி

பாரூக்கு 4: 5-12, 27-29
லூக்கா  10: 17-24


கிறிஸ்துவில் தியாகமற்ற சீடத்துவம், சீடத்துவம் ஆகாது!


முதல் வாசகம்.
 

ஆண்டவராகிய கடவுளிடம் திரும்புபவர்களுக்கு இன்றைய வாசகங்கள் நல்ல படிப்பினையாக அமைந்துள்ளன.   நாடுகடத்தப்பட்டவர்களுக்கு கடவுள் அவர்களை தங்கள் தாயகத்திற்கு திரும்ப அனப்பி, அவர்களுக்கு நம்பிக்கை அளிப்பார் என்பதை பாரூக் நினைவூட்டி  திடப்படுத்துகிறார். 

சிறைப்படுத்தப்பட்ட பாபிலோனில் மனந்திரும்பிய பாவிகளை கடவுள் மீண்டும் கொண்டுவரும்போது, அவர்கள் அனுபவித்த துக்கமும் சோகமும் மகிழ்ச்சியாக மாறும் என்றும், அவர்கள் எருசலேம் ஆலயத்திலிருந்து (கடவுளின் வீடு) உடல் ரீதியாக விலகியிருந்ததால், அந்நிய நாட்டில்  இருக்கும் காலத்தில் பாவத்தின் தன்மையை அவர்கள் அறிந்துணர முடிந்தது.

அவர்களின்  பாவம்தான் அவர்களைக் கடவுளிடமிருந்து தனிமைப்படுத்தியது. அவர்களின் உள்ளம் பாலை நிலமானது.  நாடுகடத்தப்பட்டவர்கள் வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குத்   திரும்பிச் சென்று ஆலயத்தை மீண்டும் கட்டுவது போல, மனந்திரும்பிய பாவிகள் கடவுளின் இரக்கம் மற்றும் மன்னிப்பினால் மீண்டும் கடவுளின் உள்ளத்தில் குடியேற முடியும் என்று பாருக் விவரிக்கிறார்.


நற்செய்தி.

 
நற்செய்தியில், எழுபத்திரண்டு சீடர்களும் தங்கள் மறைத்தூதுரைஅனுபவங்களிலிருந்து திரும்பி வருகிறார்கள். அவர்கள் தங்கள் பணியின் போது அனுபவ அடையாளங்களைப் பற்றி உற்சாகமாக இருக்கிறார்கள். இயேசுவின் பெயரால் பேயை ஓட்டியதைப்பற்றி பெருமைப்பட்டுக்கொண்டனர்.

அதற்கு அவர், “வானத்திலிருந்து சாத்தான் மின்னலைப் போல விழக் கண்டேன். பாம்புகளையும் தேள்களையும் மிதிக்கவும், பகைவரின் வல்லமை அனைத்தையும் வெல்லவும் உங்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறேன்’ என்றுதோடு,  ‘ஆயினும் தீய ஆவிகள் உங்களுக்கு அடிபணிகின்றன என்பது பற்றி மகிழ வேண்டாம். மாறாக, உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப் பட்டிருக்கின்றன என்பது பற்றியே மகிழுங்கள்” என்றார். 


இந்த வெற்றிக்காக இயேசு இறைப்புகழ்பாடியதோடு, “என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார்.  தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார். தந்தை யாரென்று மகனுக்குத் தெரியும்; மகன் யாருக்கு வெளிப்படுத்த விரும்புகிறாரோ அவருக்கும் தெரியும். வேறு எவரும் தந்தையை அறியார்” என்று கூறினார்.

 
  
சிந்தனைக்கு.

நற்செய்தியில் நாம் நமக்குரிய முக்கியமானதொரு செய்தியை அறிகிறோம். ஆம், இயேசு தம்முடைய சீடர்களுக்கு சாத்தானின்  மீது அதிகாரம் அளித்துள்ளதாக உறுதிப்படுத்துகிறார். அவரது சீடர்காளகிய நமது பணி சக்தியற்ற மனித முயற்சி அல்ல, மாறாக கிறிஸ்துவால் அதிகாரம் அளிக்கப்பட்டது என்பதாகும்.   தீமையின் மீதான கிறிஸ்துவின் வெற்றியில் நாம் பங்குபெற்றவர்களாக உலகில் பயணிக்கிறோம்.  வித்தியாசதான உலகில்  வித்தியாசமானவர்களாக வாழ நாம் பயிற்றுவிக்கப்பட்டுள்ளோம். இந்த சாத்தானுடனான போராட்டத்தில் வெற்றிபெற இறைவார்த்தையோடு,செபமாலையும் சிறந்த போர்க்கருவி என்பதை நினைவில் கொள்வோம்.

இயேசு தம் சீடர்களுக்குக் கூறியதைப்போல், "ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகின்றன" என்ற பெருமையில் அவர்களது மகிழ்ச்சியை வைக்காமல், அவர்களின் பெயர்கள் விண்ணக ஏட்டில் எழுதப்பட்டுள்ளன என்ற ஆழமான நம்பிக்கையில் மகிழ்ச்சியடையுமாறு அறிவுறுத்துகிறார். கிறிஸ்தவ நம்பிக்கையின் உண்மையான அடித்தளம் வெளிப்புற வெற்றியிலோ அல்லது அடையாளங்களிலோ இல்லை, மாறாக நமது நற்பணியால், கடவுளால் நாம் அறியப்பட்டு வருகிறோம் என்பதே இன்றியமையாதது. நமது நற்பணிக்கான கைமாறு மறுவுலகில் உண்டு என்பது திண்ணம். 

மேலும், இயேசு அவரை நேருக்கு நேர் கண்டறிந்த சீடர்களின் கண்கள் ஆசீர்வதிக்கப்பட்டவை என்று கூறுகிறார்.  இருப்பினும், இன்று அவர் நமக்கோ  இரட்டிப்பான ஆசீர்வாதத்தை வழங்குகிறார்.   ஏனெனில்,  நாம் அவரை உடல் வடிவில் பார்க்க இயலாதிருந்தும் அவரை ஆண்டவராக ஏற்று அவரது பணியை நிறைவேற்றுகிறோம்.

இந்த வெளிப்பாட்டில் நம்பிக்கை என்பது உண்மையை ஏற்றுக்கொள்வது மட்டுமல்ல, தந்தை , மகன், தூய ஆவிஆவியார் எனும் மூவொரு இறைவனின் அன்பான உறவில்  பங்கேற்பதன் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் நமக்கு எடுத்துரைப்படுவதை மனதில் கொள்வோம். சீடத்துவம் என்பது இலவசமானது அல்ல. சில சமயங்களில் அது மிகவும் விலைமதிப்பற்றதாகவும், சவாலானதாகவும் இருக்கும், அது நம்முடைய வாழ்க்கையின் தியாகத்தைக் கோருகிறது என்பதை நினைவில் கொள்வோம். கிறிஸ்துவில் தியாகமற்ற சீடத்துவம், சீடத்துவம் ஆகாது.

இறைவேண்டல்.

ஆண்டவரே, எனது சொந்த பாவத்தினால் எனது வாழ்க்கையில் எதிர்கொள்ளும்  தடைகளை நீர் உடைத்தெறிய மனத்தாழ்மையுடனும் மனந்திரும்புதலுடனும் உம்மை நாடுகிறோம். உமது  உண்மையுள்ள சீடராகவும், உமது திருஅவையில் சேவை செய்வதன் மூலம் உமது பணியாளனாகவும் தொடரந்து பயணிக்க என்னைத் திடப்படுத்துவீராக. ஆமென்.


ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452