நம் குற்றம் நாம் அறிவதே மேன்மை! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

3 அக்டோபர் 2025
பொதுக்காலம் 26ஆம் வாரம் – வெள்ளி
பாரூக்கு 1: 15-22
லூக்கா 10: 13-16
நம் குற்றம் நாம் அறிவதே மேன்மை!
முதல் வாசகம்.
முதல் வாசகமானது, இணைத்திருமுறை நூல்களில் ஒரு பகுதியாக இருக்கும் பாரூக்கின் நூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இணைத் திருமுறை நூல்கள் என்பன எபிரேய அல்லது அரமாய மொழிகளில் எழுதப்படாமல், கிரேக்க மொழியில் எழுதப்பட்ட ஏழு நூல்களான தோபித்து, யூதித்து, 1 மக்கபேயர், 2 மக்கபேயர், சாமோனின் ஞானம், சீராக் மற்றும் பாருக் ஆகியன. இவை பாலஸ்தீனாவுக்கு வெளியே எழுந்தப்பட்டவை. எனவே, யூதர்களும் பின்னர் பிரிந்த சகோதர சபையினரும் இவை இறை ஏவுதலுக்கு உட்பட்டவை அல்ல என்று ஒதுக்கிவிட்டனர். கத்தோலிக்க திருஅவை இந்நூல்களும் தூய ஆவியின் ஏவுதலுக்கு உட்பட்டவை என்று ஏற்றுக்கொண்டது.
இந்த பாருக் நூலானது, இறைவாக்கினர் எரேமயாவின் செயலாராக இருந்த பாரூக்கு என்பவரால் எழுதப்பட்டது. பாபிலோனிலிருந்து நாடு திரும்பிய யூதர்கள், ஆண்டவருக்கு முன்பாக பாவம் செய்ததையும், அவர் மீது நம்பிக்கை இழந்ததையும், கடவுளுக்குக் கீழ்ப்படியாமல், அவருடைய குரலையும் கட்டளைகளையும் கேட்கத் தவறியதையும் ஒப்புக்கொள்கிறார்கள்.
ஆழ்ந்து கவனித்தால், கடவுள் அவர்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டு வந்ததிலிருந்து இன்றுவரை, அவர்கள் கீழ்ப்படியாமல் இருந்து, கடவுளின் குரலைப் புறக்கணித்து, வழிதவறிச் சென்றுள்ளனர். இதன் விளைவாக, கடவுள் அவர்களுக்கு "பாலும் தேனும் ஓடுகிற நாட்டை " வாக்குறுதியளித்திருந்தாலும், மோசே முன்னறிவித்த தீமைகளும் சாபங்களும் அவர்களைப் பற்றிக் கொண்டன.
கடவுள் அனுப்பிய இறைவாக்கினர் எல்லா எச்சரிக்கைகளிலும் அவர்கள் கடவுளுக்குச் செவிசாய்க்கவில்லை என்றும் மக்கள் ஒப்புக்கொள்கிறார்கள். அவர்கள் செய்த சிலைவழிபாடு மற்றும் சடங்கு காரியங்களை நினைத்து வருந்துகிறார்கள். எனவே இந்த வாசகம் ஒரு புலம்பலாக வெளிப்படுகிறது. கடவுளின் உண்மைத்தன்மை மற்றும் அறிவுறுத்தல் இருந்தபோதிலும், அவர்கள் ஒரு சமூகமாகவும் தனித்தனியாகவும் அவரை விட்டு விலகிச் சென்றுவிட்டார்கள் என்பதற்கான அவர்களின் ஒப்புதலையும் புலம்பலையும் இதில் காண்கிறோம்.
நற்செய்தி.
“கொராசின், பெத்சாய்தா, கப்பர்நாகும் ஆகிய இந்த நகரங்களுக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையை இயேசு கொடுக்கிறார். ஏனென்றால், அவருடைய வல்லமைமிக்க செயல்களைக் கண்ட போதிலும், அவர்கள் மனந்திரும்பவில்லை மற்றும் அவரில் நம்பிக்கை கொள்ளவில்லை. அவர் இந்நகர்களை உயர்ந்த தரத்தில் வைத்திருந்தார்.
தீர், சீதோன் போன்ற பிற இனத்தார் வாழும் நகரங்களில் இயேசு இத்தகைய வல்ல செயல்களை செய்திருந்தால் அந்த நகரங்கள் ஏற்கனவே மனந்திரும்பியிருக்கக்கூடும் என்று ஒப்பிட்டு வருந்துகிறார். அதிக வாய்ப்பும் போதனையும் வழங்கப்பட்டும் அவற்றை நிராகரிப்பவர்கள் மீது தீர்ப்பு கடுமையாக இருக்கும் என்று உணர்த்த, இவற்றுக்கு ‘ஐயோ கேடு’ என்றுரைக்கிறார்.
நிறைவாக, அவரது இந்த செய்தியை, தன்னுடனும் கடவுளுடனும் இணைக்கிறார். செய்தியை நிராகரிப்பது இயேசுவை நிராகரிப்பதற்குச் சமம் என்றும், இறுதியில் இயேசுவை நிராகரிப்பவர் அவரை அனுப்பியவரை நிராகரிப்பதற்குச் சமம் என்றும் முடிக்கிறார்.
சிந்தனைக்கு.
கொராசின், பெத்சாய்தா, கப்பர்நாகும் ஆகிய இந்த நகரங்கள் இயேசு அற்புதங்களைச் செய்த, கற்பித்த மற்றும் குணமளிப்பு செய்த நகரங்களில் அடங்கும். மற்ற பல நகரங்களை விட இந்த நகர மக்கள்தான் அவருடைய உடனிருப்பையும் வல்லமையையும் மிக நெருங்கிய வழியில் அனுபவித்தார்கள். ஆனால் அதன் பலனை இயேசு அவர்களிடையே காணவில்லை. ஒருவேளை, அவரது போதனை முட்செடிகள் மற்றும் பாறை மேல் விழுந்த விதைகள் போலாகியிருக்கும்.
இதற்குக் காரணம் இந்த நகரங்களில் வணிகம் பெருகி இருந்தது. எனவே மக்களின் வாழ்க்கை பொருளாதார வளர்ச்சியில் அதிக பரபரப்பாக இருந்திருக்கக்கூடும். எனவே, இவர்கள் இறைவனைக்கும் இறை போதனைக்கும் முக்கியத்தவம் அளிக்கவில்லை எனலாம். அனைத்துக்கும் மேலாக, அவர்கள் மத்தியில் நடமாடிய மெசியாவைக் கண்டுணரவில்லை. அவருக்குச் செவிசாய்க்கவில்லை. ஆகவே, பரிசேயர்களைப் போல் சாபத்தை வாங்கிக் கொண்டார்.
இயேசு, இவர்களுக்கு ஐயோ கேடு என்கிறார். இதை இன்று நமது அன்றாட மொழியில் சொன்னால், ‘நாசமாகப் போவீர்கள்’ எனலாம். பழைய ஏற்பாட்டில், ‘தீமையை நன்மை என்றும், நன்மையைத் தீமை என்றும் சொல்லி, இருளை ஒளியாக்கி, ஒளியை இருளாக்கி, கசப்பை இனிப்பாக்கி, இனிப்பைக் கசப்பாக்குகிறவர்களுக்கு ஐயோ கேடு! (எசா 5:20) என்று யூதர்களை எசாயா கண்டித்தார். மீக்கா இறைவாக்கினரும். ‘தங்கள் படுக்கைகளின்மேல் சாய்ந்து தீச்செயல் புரியத் திட்டமிட்டுக் கொடுமை செய்ய முயல்பவர்களுக்கு ஐயோ கேடு! (2:1) என்று சாபமிட்டார்.
முதல் வாசகத்தில் நாடு திரும்பிய யூதர்களில் பலர் கடவுளுக்கு எதிரகாச் செய்த குற்றங்களை நினைத்து வருந்தியதை கேட்டோம். தப்பு செய்தவன் திருந்தியாகனும், தவறு செய்பவன் வருந்தியாகனும். இவை இரண்டுக்கும் ஆளாகாத மனிதன் துன்புறுவான் என்பதை மறுப்பதற்கில்லை. பாவம் நமக்கு தனிப்பட்ட முறையில் தீங்கு விளைவிப்பது மட்டுமல்லாமல், மற்றவர்களுக்கும் பல்வேறு அளவுகளில் சேதத்தை ஏற்படுத்துகிறது. எனவே, நமது பாவம் மற்றவர்களுக்கு தெளிவான தீங்கு விளைவித்திருந்தால், நாம் கடவுளிடம் மனந்திரும்புவது மட்டுமல்லாமல், நமது மனந்திரும்புதலையும் துக்கத்தையும் மற்றவர்கள் பார்க்கும் விதத்தில் நாம் மனந்திரும்ப வேண்டும் என்பதை உணர வேண்டியது அவசியம்.
நம்முடைய பாவங்கள் நிமித்தம் கடவுள் இயேசுவை சிலுவைப் பலியை ஏற்கச் செய்தார். கடவுள் பாவத்தை எவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்கிறார் என்பதை இது எடுத்துரைக்கிறது. மேலும், பாவத்தையும் குற்றத்தையும் நாம் எவ்வளவு தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது. மனமாறிய நினிவே மக்கள் வாழ்வு பெற்றனர், மனம் மாறா இஸ்ரயேலர் அழிந்துபோயினர். காற்றுளுள்ள போதே தூற்றிக்கொள் என்பதற்கொப்ப, நாம் சபிக்கப்படும் முன் நம் வழியை மாற்றிக்கொள்வோம்.
இறைவேண்டல்.
என் இரக்கமுள்ள ஆண்டவரே, என் பாவத்திலிருந்து தினமும் மனந்திரும்பும் அருளை எனக்கு அருள்வீராக. ஆமென்.
ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
