நமக்கான தீர்ப்பும் அண்மையில் உள்ளது! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

10 அக்டோபர் 2025                                                                                                                  
பொதுக்காலம் 27ஆம் வாரம் – வெள்ளி
 
யோவேல் 1: 13-15; 2: 1-2
லூக்கா  11: 15-26


நமக்கான தீர்ப்பும் அண்மையில் உள்ளது!
 
 
முதல் வாசகம்.

 
முதல் வாசகத்தில், பாலஸ்தீனத்தில் ஏற்பட்ட கொடும் வறட்சி, வெட்டுக்கிளிகள் விளைத்த அழிவு ஆகியவற்றைக் கடவுளின் நாளுக்கும் கடவுளின் நீதியை எதிர்ப்பவர்கள் மீது வரவிருந்த தண்டனைக்கும் முன்னடையாளங்களாக இறைவாக்கினர் கருதி, குருக்களையும் இதர பணியாளர்களையும்  சாக்கு உடை அணிந்து புலம்புமாறு யோவேல் இறைவாக்கினர் அழைக்கிறார். 

"ஆண்டவர் தீர்ப்பு வழங்கும் நாள்" சமீபமாயிருக்கிறது என்று யோவேல் வலியுறுத்தி யூதர்களை எச்சரிக்கிறார்: அது கடவுளிடமருந்து வரும் அழிவாக உள்ளது என்கிறார். நிகழவுள்ள அழிவுக் குறித்து மேலும் விவரிக்கையில், யோவேல் ‘அதுவோ இருளும் காரிருளும் கவிந்த நாள்; மப்பும் மந்தாரமும் சூழ்ந்த நாள்; விடியற்கால ஒளி மலைகள்மேல் பரவுவதுபோல், ஆற்றல்மிகு வெட்டுக்கிளிகளின் பெருங்கூட்டம் வருகின்றது; இதுபோன்று என்றுமே நிகழ்ந்ததில்லை; இனிமேல் தலைமுறை தலைமுறைக்கும் நிகழப்போவதும் இல்லை’ என்று முடிக்கிறார்.

நற்செய்தி.

இயேசு  பேய்களை விரட்டுகிறார். தைக் கண்ட சிலர் அவர் பேய்களின் தலைவனான பெயல்செபூலின் வல்லமையால் இதைச் செய்வதாகக் குற்றம் சாட்டுகிறார்கள்.     இயேசு பேயோடு கூட்டு சேர்ந்திருப்பதால்  அவருக்கு இந்த ஆற்றல் கிடைத்திருப்பதாக  சிலர் அவரை விமர்சித்தார்கள்.
இயேசு அவர்களின் குற்றச்சாட்டுகளை மறுத்து, கடவுளின் வல்லமை அவருக்குள் இருப்பதாகவும், அவர் கடவுளின் விருப்பத்தையே செய்கிறார் என்றும் கூறுகிறார் - அவரது தந்தையின் திருவுளப்படி  வாழ்பவர்கள்  அனைவரும் கடவுள் அரசின் ஒரு பகுதியாக உள்ளனர் எஃன்றும்,  இயேசு செய்வதை எதிர்ப்பவர்கள் அவருக்கும் அவருடைய தந்தைக்கும் எதிராக செயல்படுகிறார்கள் என இயேசு எடுத்தியம்புகிறார்.

தீய சக்திகளிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள் கடவுளுடன் நெருக்கமாக இணைந்திருக்க வேண்டும், இல்லையெனில் அவர்கள் தீய சக்தியால் இன்னும் அதிகமாக பாதிக்கப்படுவார்கள் என்றும் இயேசு எச்சரிக்கிறார்.

தொடரந்து, “தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் பாழாய்ப்போகும் என்பதால், பேய்களின் தலைவனான பெயல்செபூல் எப்படி மற்ற பேய்களை விரட்டுவான்’ என்ற கேள்வியை எழுப்புகிறார். தூய்மைப்படுத்தப்பட்ட பிறகும், "நமது வீடு" (நமது வாழ்க்கை, இதயம்) தொடர்ந்து பாதுகாக்கப்படாவிட்டால்,  விட்டு ஓடிய பேய்  மிகவும் சக்திவாய்ந்த முறையில் திரும்பும் என்கிறார்.

நிறைவாக, என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார்; என்னோடு இணைந்து மக்களைக் கூட்டிச் சேர்க்காதவர் அவர்களைச் சிதறடிக்கிறார் என்ற அறிவுறுத்தலோடு இயேசு இப்பகுதியை நிறைவு செய்கிறார்.

சிந்தனைக்கு.

முதல் வாசகத்தில், "ஆண்டவருடைய நாள் அண்மையில் உள்ளது" என்றும், பெரும் அழிவிலிருந்து காத்துக்கொள்ள குருக்களையும் மக்களையும்  நோன்பிருந்து, புலம்பி பாவ மன்னிப்புக்கு மன்றாடும்படி யோவேல் அழைத்ததை அறிந்தோம். நற்செய்தியிலோ, தீமையிலிருந்து விடுபடுவதற்கு மட்டுமல்ல, தீமை மீண்டும் நம்மை அண்டாதபடி நம்மை நாமே  பாதுகாப்பதற்கு நாம் அழைக்கப்படுகிறோம்.

அடுத்தவர் குற்றங்கள், பாவங்களைச் சுட்டிக்காட்டும் முன், நம் சொந்த வாழ்க்கையைப் பார்ப்பது முக்கியம். நம்மில் பெரும்பாலோர் "அதிகாரப் பசியுடன்" இருந்த காலங்களை நினைத்துப் பார்க்க வேண்டும். குறிப்பாக, குடும்பங்களில் சில கணவர்கள் ‘ தான் தலைவன்’ என்ற அதிகாரத்தில் மனைவிமார்களையும், பிள்ளைகளையும் ஆட்டிப்படைக்கும் கொடுமை இருக்கத்தான் செய்கிறது. சில குடும்பங்களில் மனைவிமார்களும் இப்படி நடந்துகொள்கிறார்கள். நம்மை நாம் திருத்திக்கொள்ளாவிட்டால், நமக்கும் "ஆண்டவருடைய நாள் அணமையில் உள்ளது" அதாவது, ஆண்டவர் நமக்கும் தீர்ப்பு வழங்கும் நாள் அண்மையில் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. 

நம் வாழ்க்கையில் ஆன்மீக வீழ்ச்சியை நாம் அனுமதிக்கும் பகுதிகள் ஏதேனும் உள்ளதா? நம் "உள்ளத்தை" நாம் தூய்மைப்படுத்தி  பாதுகாக்கிறோமா? என்று சிந்திக்க அழைக்கப்படுகிறோம். ஏனெனில், இயேசு தீய ஆவி திரும்பி வரும் என்று  எச்சரித்ததற்கு ஒப்ப, கிறிஸ்தவ வாழ்க்கைக்கு தொடர்ச்சியான இறைவேண்டல், ஒழுக்கம் மற்றும் தூய ஆவியார்க்குத்  திறந்த உள்ளம் தேவை. 

பேய் வலிமையானதாக இருக்கலாம், ஆனால் கிறிஸ்து அதைவிட பன்மடங்கு வலிமையானவர். அவருடைய உடனிருப்பு நம் வாழ்வில் உண்மையானது என்பதில் நம்பிக்கைகொள்ள வேண்டும்.  நம் இறைவனின் போதனைகளைப் பற்றி நாம் அலட்சியமாக இருந்துவிட்டால், அவருடைய இரக்கத்தில்  நிலைத்திருக்க முடியாது. நாம் அவருடன் இல்லையென்றால்,  நாம் உண்மையில் அவருக்கு எதிரானவர்கள் ஆவோம். "ஊளைக் கும்பிடு" கடவுளின் முன் எடுபடாது. 

நிறைவாக, ‘என்னோடு இணைந்து மக்களைக் கூட்டிச் சேர்க்காதவர் அவர்களைச் சிதறடிக்கிறார்’ என்கிறார் ஆண்டவர்.  இதன் பொருள்,  இயேசு கற்பித்த அனைத்தையும் தனிப்பட்ட முறையில் நம்புவது மட்டும் போதாது, நாம் அதை மற்றவர்களுக்கும் கற்பிக்க வேண்டும் என்பதாகும்.

இறைவேண்டல்.

மாட்சிக்குரிய என் ஆண்டவரே, என் வாழ்க்கையிலும்,  மற்றவர்களின் வாழ்க்கையிலும் உமது அரசைக் கட்டியெழுப்ப நீர் விரும்புகிறீர். நீர் எனக்குக் கற்பித்த அனைத்தையும் முழுமையாக ஏற்று,  உலகில் உமது அன்பிற்கும்  உண்மைக்கும் ஒரு சாட்சியாக வாழ என்னைத் திடப்படுத்துவீராக. ஆமென்.  
 


ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452