குறைகளிலும் நிறைவான வாழ்வு | அருட்சகோதரி ஜான்சி FBS | Veritas Tamil
குறைகளிலும் நிறைவான வாழ்வு
பிறரும் தவறக்கூடியவர்கள். எனவே மன்னிக்க வேண்டும். நானும் தவறக்கூடியவன் . எனவே மன்னிப்பு பெற வேண்டும் என்ற மனநிலை வளர வேண்டும்.
நாம் ஒவ்வொருவரும் தவறு செய்யக்கூடியவர்கள். நம்மில் யாருமே நூற்றுக்கு நூறு சதவிகிதம் Perfect என்று சொல்லிவிட முடியாது. நம் வாழ்வில் தவறுகள் நிகழ்வதை ஏற்றுக் கொண்டு அதிலிருந்து திருந்தி வாழ முயல வேண்டும். அதற்கு மாறாக நம்மிலும், பிறரிலும் குறைகளே இருக்கக்கூடாது என்று நினைத்தோமென்றால் நாம் மனிதர்களே இல்லை. நாம் செய்கின்ற ஒவ்வொரு காரியத்திலும் தவறுகளே நிகழ்ந்துவிடக்கூடாது என்று நினைத்தோம் என்றால் நம்மைப் போல் முட்டாள்கள் யாரும் இல்லை. நாம் எந்தவித தவறும் செய்யாமல் எல்லாமும் முழுமையாகவே இருக்க வேண்டும் என்ற மனப்பாங்கு (Perfectionisam) உள்ளவர்களாக வாழ நினைத்தோம் என்றால் மனநிம்மதியையும் மகிழ்ச்சியையும்தான் தொலைத்துவிடுவோம்.
குறையில்லாத வாழ்க்கையை நாம் வாழ்வதற்கான சாத்தியமில்லை. அதேபோல தவறுகள் இல்லாத வாழ்க்கை எதுவுமில்லை, தவறுகள் செய்யாமல் நம்மால் வாழவும் இயலாது என்பதை புரிந்து கொண்டு நம் வாழ்வில் நிகழும் ஒவ்வொரு தவறுகளையும் ஏற்றுக் கொண்டு அதிலிருந்து திருந்தி வாழ நம்மை பயிற்றுவிப்போம்.
நம்மில் எவரும் தேளை பிடித்து தோளில் போட்டுக் கொண்டு விளையாடுவதில்லை. கொடுக்கு உள்ளதிடம் யாரும் விருப்பு வைத்துக் கொள்வதில்லை. நெருப்பு உள்ள இடத்தை யாரும் நெருங்க நினைப்பதில்லை. நமது உள்ளத்தை மற்றவர்கள் நெருங்க வேண்டுமென்றால் நம்மிடம் அன்பு, கருணை, மன்னிப்பு, ஏற்றுக் கொள்ளுதல் அனைத்தும் இருக்க வேண்டும். இல்லையென்றால் நம்மையும் மற்றவர்கள் நெருங்கமாட்டார்கள். எனவே இதனைப் புரிந்து கொண்டு நல்ல குண நலன்களால் நம்மை நிரப்புவோம். மற்றவர்களைப்பற்றி குற்றம் குறை சொல்வதையும், தகராறு செய்வதையும் தவிர்க்க வேண்டும். பிறரும் தவறக்கூடியவர்கள்.
எனவே மன்னிக்க வேண்டும். நானும் தவறக்கூடியவன் . எனவே மன்னிப்பு பெற வேண்டும் என்ற மனநிலையை வளர வேண்டும் என்பதை மனதில் பதிப்போம். எனவே மற்றவர்களின் குறைகளை பெரிதுபடுத்தாமல் நாம் வாழ்கின்ற வாழ்க்கையை நிறைவாக வாழ நம்மை பயிற்றுவிப்போம். அதுவே நம்மை நிறைவுள்ளவர்களாக்கும் என்பதை உணர்ந்து மகிழ்வோடு வாழ்வோம்.