இயேசுவும் சமூக நீதியும் | அருட்பணி. பார்த்தசாரதி.நா சேச | Veritas Tamil

இயேசுவும் சமூக நீதியும்
மனிதர்கள் மாண்புடன் வாழ வழிகாட்டிய மாபெரும் மனிதருள் மாணிக்கமாய் திகழ்பவர் நம் தோழர் இயேசுவே. இயேசுவும் சமூக நீதியும் என்ற தலைப்பு என்னை அதிகம் சிந்திக்கத் தூண்டிய ஒன்றாக உள்ளது. ஆனால் இயேசுவின் வாழ்வையும், சமூக நீதியையும் இணைத்து சிந்தித்தால் எந்தவிதமான வேற்றுமைகளையும் காண முடியவில்லை. காரணம் இயேசு கிறித்து என்றால் சமூக நீதி, சமூக நீதி என்றால் இயேசு கிறித்துவே ஆவார். தான் வாழ்ந்த 33 ஆண்டுகளும் தனக்கென வாழாமல் தரணிக்காக வாழ்ந்து காட்டி உள்ளார். அவருடைய பிறப்பு முதல் இறப்பு வரை பல ஆயிரக்கணக்கான நீதி சார்ந்தப் பணிகளை நெஞ்சுக்கு நீதி என்ற ஒற்றைக் குறிக்கோளோடு வாழ்ந்துக் காட்டிச் சென்றுள்ளார். எனவே தான் உண்மைக்குச் சான்று பகரவே வந்தேன் என்று உரக்கச் சொல்லுகிறார்.
அவரின் வாழ்வில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய சமூக நீதிப் பாடங்கள் பல இருப்பினும் சிலவற்றை நினைவூட்டல் செய்ய விரும்புகிறேன்.
சமூகம் வேண்டாம் என ஓதுக்கும் மக்களை, வேண்டும் என்று அடையாளப்படுத்துவது.
குறிப்பாக கைம்பெண்ணின் காணிக்கை (மாற் 12:31). இருப்பதிலிருந்துக் கொடுப்பது அல்ல ஈகை, இருப்பதையெல்லாம் எந்தவித எதிர்ப்பார்ப்பும் இன்றி, படைத்த இறைவன் மீது ஆழமான இறைநம்பிக்கையுடன் கொடுப்பது தான் ஈகை மனம். விளம்பரம் தேடும் உலகில் அடுத்தவரின் விடியலுக்காக அன்றாடம் வீதியில் இறங்கி போராடும் நீதியே இயேசுவின் சமூக நீதி.
இரண்டாவது உலகமே உன்னை வெறுத்தாலும், பயன்படுத்தினாலும், தீர்ப்பிட்டாலும், மனிதரில் உள்ள மனிதத்தை அடையாளம் காணும் பண்பு இயேசுவின் பண்பு. அதற்கு மாபெரும் சான்று விபச்சாரத்தில் பிடிப்பட்டப் பெண், மன்னிக்கவும் விபச்சாரத்தில் பிடிப்பட்ட பெண் என்று இனி நாம் சொல்லாமல், விபாச்சாரத்திற்கு தள்ளப்பட்ட மனிதம் என்போம். இந்த விவிலியப் பகுதியில் இயேசுவின் மனித நேயம் இமயம் போல காணப்படுகிறது. இவ்வாறு வாழ்நாள் முழுவதும் விளிம்புகளை மையமாக்கிய அவரின் வாழ்வு சமூக நீதிக்கான முழுமையானப் பொருளைத் தருகிறது.
தோழர்களே! இயேசுவின் வழியில் சமூக நீதிப் பயணம் என்பதை விட,
இயேசுவின் விழியில் சமூக நீதி நிறைந்த பார்வைப் பெற்றவர்களாகவே
நாம் வாழ அழைக்கப்பட்டு இருக்கிறோம்.
சமூகம் சார்ந்தப் பணிகளுக்கு நம் விழிகளைத் திறப்போம்!
விடியல் காண்போம்!
எழுத்து
அருட்பணி. பார்த்த சாரதி .நா சேச
Daily Program
