கிறிஸ்துவில் நாம் சகோதர சகோதரிகள்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
8 அக்டோபர் 2025
பொதுக்காலம் 27ஆம் வாரம் – பதன்
யோனா 4: 1-11
லூக்கா 11: 1-4
கிறிஸ்துவில் நாம் சகோதர சகோதரிகள்!
முதல் வாசகம்.
மீண்டும் ஒருமுறை, மனித எண்ணங்களுக்கும் கடவுளின் எண்ணங்களுக்கும் இடையிலான வேறுபாட்டை நாம் காண்கிறோம். முதல் வாசகத்தில், யோனா அறிவித்தபடி கடவுள் நினிவேயையும் அதன் மக்களையும் அழிக்க மாட்டார் என்பதை அறிந்து யோனா கோபப்படுகிறார்.
நினிவே மக்களுக்கு அவர்களின் பாவத்தின் காரணமாக அழிவு தீர்ப்பு கடவுளிடமிருந்து வரும் என்று யோனா எதிர்பார்த்தார், ஆனால் அவர்கள் யோனாவின இறைவாக்கைக் கேட்டு, மனந்திரும்பியதைக் கண்டு, கடவுள் அந்த நகரத்தை விட்டுவிடுகிறார். கடவுளின் இரக்கம், நீதி அல்லது பழிவாங்கல் பற்றிய மனித கருத்துக்களுடன் எவ்வாறு வேறுபட்டது என்பதை இந்த வாசிப்பு எடுத்துக்காட்டுகிறது.
அந்த ஆமணக்குச் செடி ஒரே நாளில் முளத்து, வளர்ந்து, யோனாவுக்கு நிழல் தந்து, மறுநாள் அழிந்துபோன சம்பவம் கடவுளின் ஆற்றலுக்கு அடையாளமாக உள்ளது. அந்த ஓர் ஆமணக்கு செடியின் அழிவைக் கண்டு வருந்தும் யோனா, கடவுள் நினிவே மக்களைக் காப்பற்ற முனைந்ததைக் கண்டு கோபப்படுகிறார்.
யோனாவின் குறுகிய எண்ணத்திற்குக் கடவுள் சவால் விடுகிறார். கடவுள் அவரது பெரிய திட்டத்தை அறிவார், மேலும் மனமாறும் பாவிகளுக்கு கடவுள் தம் இதய வாசலைத் திறக்கிறார். கடவுள் அவர்தம் இரக்கத்திற்குப் பெயர் பெற்றவர் என்பதை யோனா ஒப்புக்கொள்கிறார், ஆனால் அது தனக்கும் ‘தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள்’ (யூதர்கள்) மீது மட்டுமே இருக்க வேண்டும் என்று அவர் நம்புகிறார், நினிவே மக்களைப் போன்ற பிற இனத்தார் மீது அல்ல என்பது அவரது குறுகியப் பார்வையாக உள்ளது.
நற்செய்தி.
நற்செய்தியில், இயேசு தம்முடைய தந்தையுடன் உரையாடுவதில நேரத்தைச் செலவிட்ட பிறகு, அவருடைய சீடர்கள் இயேசுவிஇடம் எப்படி இறைவேண்டல் செய்ய வேண்டும் என்று கற்றுக்கொடுக்கும்படி கேட்கிறார்கள். அவர் கடவுளை "தந்தை" என்று அழைக்கும் ஓர் இறைவேண்டலை அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறார்.
இந்த மாதிரி இறைவேண்டலில் முக்கிய குறிப்புகள் ஒன்றே: 1) கடவுளை "அப்பா" என்று அழைப்பது; 2) மண்ணகத்தில் கடவுளின் திருவுளத்தையும் ஆட்சியையும் நாடுவது 3) தினசரி வாழ்வாதாரத்திற்கான வேண்டுதல்; 4) நாம் மற்றவர்களுக்கு எவ்வாறு மன்னிப்பை வழங்குகிறோம் என்பதன் அடிப்படையில் மன்னிப்புக்கான விண்ணப்பம்; 5) "சோதனையிலிருந்து" காப்பாற்றப்பட வேண்டும் என்ற விருப்பமும் இந்த மன்றாட்டில் இயேசு இணைத்துத் தருகிறார்.
சிந்தனைக்கு.
கடவுளின் இரக்கத்தையும், அவரது இரக்கத்தை ஏற்றுக்கொள்வதில் நாம் எதிர்கொள்ளும் சவால்களையும் அத்துடன், கடவுள் யார்?, அவரை நோக்கிய நமது இறைவேண்டல் எப்படி அமைய வேண்டும் என்பதையும் சிந்தித்து உணர்ந்திட இன்றைய வாசகங்கள் நம்மை அழைக்கின்றன.
யோனாவின் விரக்தி மனித வரம்பை வெளிப்படுத்துகிறது: அவர் தனது சொந்த நீதியை எதிர்பார்க்கிறார், மேலும், கடவுள் இரக்கம் காட்ட விரும்புபவர்களை அவர்கள் கடவுளின் இரக்கத்திற்குத் தகுதியற்றவர்கள் என்று முடிவு செய்கிறார். கடவுளின் நல்ல தீர்ப்பைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் புலம்புகிறார். யோனாவின் எண்ணம் கணவுள்னி எண்ணத்திற்கு எதிராக இருந்தது.
இயேசு தம்முடைய சீடர்களின் கவனத்தை மட்டுமல்ல, நம்முடைய கவனத்தையும், கடவுளுடன் நாம் எவ்வாறு தொடர்பு கொள்ள வேண்டும் என்பதில் திசைத்திருப்புகிறார். கடவுளை நம் தந்தை என்று அழைக்க நாம் அழைக்கப்படுகிறோம். இது மண்ணகத்தில் இயேசு கொணர்ந்த முக்கிய புரட்சியாகும். கடவுள் நம் அப்பா என்றால், நாம் ஒருவருக்கொருவர் சகோதர சகோதரிகள். இயேசு நமது முத்த சகோதரர் ஆவார். ஆகவேதான் திருஅவையில் ஏழை பணக்காரர், உயர்ந்தவர் தாழ்ந்தவர், நிறம், மொழி, , பட்டம் பதவி போன்ற வேறுபாடுகளுக்கு இடமளிக்கப்படுவதில்லை. சிலர் இயேசவை ‘இயேசப்பா’ என்று அழைக்கிறார்கள். கத்தோலிக்க நம்பிக்கை மற்றும் போதனையின்படி இது தவறு. இயேசுவும் கடவுளுக்கு மகன்தான். அவரை ‘அப்பா’ என்று அழைப்பதில் பொருளில்லை. இயேசுவை அப்பா என்றழைத்தால், அவர் கற்பித்த இந்த இறைவேண்டல் முற்றிலும் பொருளற்றதாகிவிடும்.
அடுத்து, இயேசு கற்பித்த இறைவேண்டலை ஒப்புவிப்பதானது நிபந்தனைக்கு உட்பட்டது. குறிப்பாக நமது அன்றாட வாழ்வாதாரத்திற்கு மட்டும் மன்றாட வேண்டும் என்பதோடு, கடவுள் நமது பாவங்களை மன்னிக்க நாம் முதலில் நமக்கு எதிராகக் குற்றம் புரிந்தோரை மன்னிக்க வேண்டும் என்பதை அறிவுறுத்துகிறது. இதற்குத் துணிவு வேண்டும். எனவேதான் திருப்பலியில், அருள்பணியாளர், ‘மீட்பரின் கட்டளையால் கற்பிக்கப்பட்டு, இறைப்படிப்பினையால் பயிற்சி பெற்ற நாம் துணிந்து சொல்வோம்’ என்று அழைப்புவிடுக்கிறார்.
அநேக வேளைகளில், நம் இதயத்தின் ஆழத்திலிருந்து இந்த இறைவேண்டலை ஒப்புவிக்க நாம் எளிதில் தவறிவிடுகிறோம். ஒவ்வொரு வார்த்தையையும் நம்முடையதாக ஆக்கி, விண்ணகத் தந்தையிடம் மிகுந்த நம்பிக்கையுடன் வழங்கினால் பலன் கிட்டும்.
எசாயா 55:8-ல், ‘என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல, உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல, என்கிறார் ஆண்டவர். எனவே, நமது வழிமுறையும் எண்ணமும் கடவுளின் எண்ணத்தோடு ஒத்திருக்க நாம் விரும்பி செயல்பட வேண்டும். யோனாவைப்போல் நாம் உலகம் சார்ந்த எண்ணத்தோடு இருந்தோமேயானால் சாத்தானின் பிடியில் சிக்குவோம்.
நிறைவாக, மண்ணகத்தில், குறிப்பாக நமது வாழ்வில் நமது விருப்பமும் எண்ணமும் அல்ல மாறாக, கடவுளின் ஆட்சி நிலைப்பெற நாம் இறைவேண்டல் செய்ய வேண்டும் என்று இயேசு கற்பிதததை நினைவில் கொள்வோம்.
இறைவேண்டல்.
விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே,
உமது பெயர் தூயது எனப் போற்றப் பெறுக.
உமது ஆட்சி வருக.
உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல,
மண்ணுலகிலும் நிறைவேறுக.
எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும்.
எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல,
எங்கள் குற்றங்களை மன்னியும்.
எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்.
தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும். ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452