உலக ஆயர்கள் மாமன்றத்தின் புதிய திருஅவைச் சட்ட ஆணையம்! | Veritas Tamil

தற்போது நடைபெற்று வரும் உலக ஆயர்கள் மாமன்ற ஒன்றிணைந்த பயணத்தின் பின்னணியில், கீழைவழிபாட்டு முறை திருஅவைகளின் திருஅவைச் சட்டத் தொகுப்பில் (CCEO) திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்காக, உலக ஆயர்கள் மாமன்றத்தின் பொதுச் செயலகம் 'கீழைவழிபாட்டுத் திருஅவைச் சட்ட ஆணையம் (Eastern Canonical Commission) என்ற புதிய அமைப்பை நிறுவியுள்ளது.

பிப்ரவரி 20, வெள்ளியன்று இந்த ஆணையத்தின் முதல் கூட்டம் ஆயர்கள்  மாமன்றத்தின் தலைமையகத்தில் நடைபெற்றது. இலத்தீன் திருஅவைகளின் திருஅவைச் சட்டத்தில் கவனம் செலுத்துவதற்காக, கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பரில் திருஅவைச் சட்டம் சார்ந்த ஓர் ஆணையம் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்தக் கீழை வழிபாட்டு முறைத் திருஅவைகளுக்கான திருஅவைச் சட்ட ஆணையமானது, திருத்தந்தையின் தலைமையின்கீழ் இணைந்து செயல்படும் அதேவேளையில், தன்னாட்சி அதிகாரம் (Sui iuris) கொண்ட 24 கீழைவழிபாட்டு முறை திருஅவைகளின் தேவைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திருஅவைகள்  ஒவ்வொன்றும் தமக்கே உரிய தனித்துவமான பாரம்பரியங்கள், வழிபாட்டு முறைகள் மற்றும் நிர்வாக முறைகளைக் கொண்டுள்ளன.

மேலும், இந்தப் புதிய ஆணையமானது, பல்வேறு துறைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும், ஆயர்கள் மாமன்றக் கொள்கைகளுக்கு  ஏற்ப சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தப் புதிய ஆணையம், சட்ட நூல்களுக்கான துறை மற்றும் கீழைவழிபாட்டு முறைத் திருஅவைகளுக்கான துறையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கீழைவழிபாட்டுமுறை திருஅவைகளின்  திருஅவைச் சட்ட வல்லுநர்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேசுகையில் உலக ஆயர்கள் மாமன்றத்தின் பொது செயலாளர் கர்தினால் மாரியோ கிரேக் அவர்கள், "கீழை வழிபாட்டுமுறைத் திருஅவைகளின் திருஅவைச் சட்டத்தின் தனித்துவமான தன்மையை மதிக்கும் அதேவேளையில், கீழைவழிபாட்டு முறை மற்றும் இலத்தீன் திருஅவைகளுக்கு இடையிலான உறவுகளைக் கையாள்வதற்காக கடந்த 2024-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஆய்வுக்குழுவுடன் இந்த ஆணையம் நெருக்கமாக இணைந்து செயல்படும்" என்று வலியுறுத்தினார்.

2021-2024 உலக ஆயர்கள் மாமன்ற ஒன்றிணைந்த பயணத்தின் (synodal journey) முன்மொழிவுகளின் அடிப்படையில், குறிப்பாக, 2023-ஆம் ஆண்டின் தொகுப்பு அறிக்கை மற்றும் 2024-ஆம் ஆண்டின் இறுதி ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளின்படி, சட்ட வரைவு உரைகளைத் தயாரிக்கும் பணி இந்த ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தன்னாட்சி அதிகாரம் கொண்ட  திருஅவைகள், ஆயர் பேரவைகள் மற்றும் கத்தோலிக்க நிறுவனங்களிடமிருந்து இதற்கான கருத்துக்கள் மற்றும் பங்களிப்புகள் 2026, ஏப்ரல் 15-ஆம் தேதிக்குள் வரவேற்கப்படுகின்றன.

திருஅவைச் சட்ட நூல்களுக்கான திருப்பீடத் துறையின் செயலர் இந்த ஆணையத்தின் பணிகளைக் மேற்பார்வையிடுவார். மேலும், தற்போதைய கீழை வழிபாட்டு முறைத் திருஅவைகளின் திருஅவைச் சட்டங்களை காலத்திற்கேற்ப புதுப்பிப்பதில் அவர் கவனம் செலுத்துவார்.

நன்றி: வத்திக்கான் செய்திகள்