“ஒன்றிணைந்த திருஅவை என்பது தனித்துப் பயணிப்பதல்ல; ஒன்றிப்பில் வலுப்பெறுவதாகும்” – அருள்தந்தை ஜியாகோமோ கோஸ்டா | FABC | Veritas Tamil

ஆயர் மாமன்றத்தின் ஒன்றிணைந்த பயணம் என்பது உள்ளூர் திருஅவைகள் அதிக சுதந்திரம் பெறுவதைக் குறிப்பதல்ல; மாறாக, ஒன்றோடொன்று ஆழமான ஒன்றிப்பில் வளர்ந்து வலுப்பெறுவதைக் குறிக்கிறது என்று, ஆயர் மாமன்றத்தின் பொதுச் செயலகத்தின் ஆலோசகரான அருள்தந்தை ஜியாகோமோ கோஸ்டா, SJ அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஜூலை 24 அன்று ஜகார்த்தாவில் இடம்பெற்ற ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் 12ஆவது நிறைவிறுதிப் பேரவையில், “ஆயர் மாமன்றத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பாதைகள்” என்ற தலைப்பில் உரையாற்றிய அவர், ஒவ்வொரு உள்ளூர் திருஅவையும் தனது சொந்தச் சூழலில் ஒன்றிணைந்த பயணத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பைக் கொண்டிருந்தாலும், எந்த ஒரு மறைமாவட்டமோ அல்லது ஆயர் பேரவையோ தனித்துப் பயணிக்கக் கூடாது என்று வலியுறுத்தினார்.

திருஅவை என்பது சமூகங்களின் ஒன்றிப்பு” என்று குறிப்பிட்ட அவர், ஒன்றிப்பு என்பது வெறும் இறையியல் கருத்து மட்டுமல்ல; இறைமக்கள் ஒன்றிணைந்து வாழவும், மறைப்பணியை முன்னெடுக்கவும் அழைக்கப்பட்ட வாழ்வுமுறை என்றும் விளக்கினார்.

ஒவ்வொரு மறைமாவட்டமும் தனது பண்பாடு, வரலாறு மற்றும் மேய்ப்புப்பணி சூழலுக்கு ஏற்ப ஒன்றிணைந்த பயணம் எவ்வாறு வேரூன்ற வேண்டும் என்பதைப் பகுத்தறிய வேண்டும் என்றும், அதேவேளையில் தன்னிறைவு அல்லது தனிமை அடைவது இதன் நோக்கம் அல்ல என்றும் அவர் கூறினார்.

ஒவ்வொரு உள்ளூர் திருஅவைக்கும் தனித்துவமான கொடைகள், அனுபவங்கள் மற்றும் சவால்கள் உள்ளன. அதேபோல், பிற திருஅவைகளிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவையும் உள்ளன. எனவே, ஒன்றிணைந்த பயணம் என்பது ஆயிரக்கணக்கான மறைமாவட்டங்கள் தனித்தனியாக முன்னெடுக்கும் முயற்சிகளின் தொகுப்பு அல்ல; மாறாக, ஒருவருக்கொருவர் செவிமடுத்தல், உரையாடல் மற்றும் பகுத்தறிதல் வழியாக திருஅவைகள் ஒன்றையொன்று வளப்படுத்தும் பொதுவான பயணம் என்று அருள்தந்தை கோஸ்டா அவர்கள் எடுத்துரைத்தார்.

இதற்காக உள்ளூர், தேசிய, கண்ட அளவிலான மற்றும் உலகளாவிய நிலைகளில் நடைமுறைப்படுத்தும் செயல்முறை முன்னெடுக்கப்படுகிறது. இதன்மூலம் ஒவ்வொரு உள்ளூர் திருஅவையின் அனுபவங்களும் ஒட்டுமொத்த திருஅவையின் வாழ்வுக்குப் பங்களிக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் அழைப்பு விடுத்துள்ள “மேலும் நற்செய்திக்குரிய வாழ்வுமுறையை” முன்னெடுப்பதே முக்கியம் என்றும், இதில் யாருக்கு அதிக அதிகாரம் உள்ளது என்பதைக் காட்டிலும், ஒவ்வொரு அழைப்பும் பணியும் திருஅவையின் பொதுவான மறைப்பணியில் எவ்வாறு ஒன்றிணைந்து செயல்படுகின்றன என்பதே முக்கியமான கேள்வி என்றும் அவர் கூறினார்.

ஆயர்கள், குருக்கள், துறவிகள், பொதுநிலையினர், பங்குத்தளங்கள் மற்றும் மேய்ப்புப்பணி குழுக்கள் என அனைவரும் வெவ்வேறு பணிகளை ஆற்றினாலும், எவரும் தனித்துச் செயல்படுவதில்லை. ஒருவர் மற்றவருடன் ஒன்றிப்பில் இணைந்து திருஅவையின் பணிக்கு பங்களிக்கின்றனர் என்றும் அவர் விளக்கினார்.

குறிப்பாக, பல்வேறு பண்பாடுகள் மற்றும் சமயங்களைக் கொண்ட சமூகங்களில் கத்தோலிக்கர்கள் சிறுபான்மையினராக வாழும் ஆசியாவிற்கு இச்செய்தி முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் குறிப்பிட்டார். வேறுபாடுகளைத் தடையாகக் கருதாமல், ஒன்றிப்பு என்பது ஒரே மாதிரியான தன்மையைக் குறிக்காது என்பதை வெளிப்படுத்தும் வாய்ப்பாக அவற்றைக் காண வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

மேலும், கிறிஸ்தவ ஒன்றிப்பு உரையாடலும், சமயங்களுக்கு இடையிலான உரையாடலும் ஒன்றிணைந்த திருஅவையின் இயல்பான வெளிப்பாடுகள் என்று கூறிய அவர், உள்முகமாக செவிமடுக்கக் கற்றுக்கொண்ட திருஅவை, பிற கிறிஸ்தவ மரபுகளைச் சார்ந்தவர்கள், பிற சமயங்களைப் பின்பற்றுவோர் மற்றும் நன்மனத்தைக் கொண்ட அனைவருடனும் திறந்த மனதுடன் உரையாடுவதற்கு சிறப்பாகத் தயாராகும் என்றார்.

ஒன்றிணைந்த பயணத்தின் நடைமுறைப்படுத்தும் கட்டத்தில், உள்ளூர் திருஅவைகள் தனித்தனிப் பாதைகளில் செல்வது நோக்கமல்ல; மாறாக, ஒவ்வொன்றும் தன்னிடம் உள்ள கொடைகளைப் பகிர்ந்துகொண்டு, பிறரின் கொடைகளை ஏற்றுக்கொண்டு ஒன்றாகப் பயணிப்பதே நோக்கம் என்று அருள்தந்தை கோஸ்டா அவர்கள் வலியுறுத்தினார். பிளவுகளும் பிரிவுகளும் அதிகரித்து வரும் இன்றைய உலகில், உள்ளூர் திருஅவைகளுக்கிடையிலான இந்த ஒன்றிப்பே நற்செய்திக்கான திருஅவையின் வலிமையான சாட்சிகளில் ஒன்றாக அமையக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

Tamil Survey Popup Image