இளைஞர் இயக்க பொதுக்குழு கூட்டத்தில் அரசியல் விழிப்புணர்வு!| Veritas Tamil

தொடர்ந்து கிறிஸ்தவர்களாக வாழ இளைஞர்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்: இளைஞர் இயக்க பொதுக்குழு கூட்டத்தில் அரசியல் விழிப்புணர்வு

கடந்த ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு கத்தோலிக்க இளைஞர் இயக்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் வரும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் குறித்தும் இயக்கமாக அதனை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம் என்றும் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து வந்த இளைஞர்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.

தமிழ்நாடு ஆயர் பேரவையின் இளைஞர் பணிக்குழுவின் ஒரு அங்கமாகிய தமிழ்நாடு கத்தோலிக்க இளைஞர் இயக்கத்தின் பொதுக்குழு கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 11) அன்று திருச்சி பிராட்டியூர் தமிழ்நாடு பொதுநிலையினர் உருவாக்க மையத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்பு காலையில் மேதகு ஆயர் நசரேன் சூசை அவர்கள் தலைமையில் மறைமாவட்ட இயக்குனர்கள் இணைந்து நிறைவேற்றிய பொங்கல் திருப்பலி நடைபெற்றது. திருப்பலிக்கான பாடல்கள் அனைத்தும் மக்களிசை பாடல்களாக அமைந்தது திருப்பலிக்கு மேலும் சிறப்பு சேர்த்தது.

பொதுக்குழு கூட்டத்தின் முதல் நிகழ்வாக இயக்கத்தின் கொடி ஏற்றப்பட்டு தொடர்ந்து இயக்க உறுதிமொழியும் இந்திய அரசியலமைப்பின் முகப்புரையும் வாசிக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற முதன்மை அமர்வில் தேர்தல் களமும் இளைஞர்களின் அரசியல் ஈடுபாடும் எனும் மையக்கரத்தில் மக்கள் கண்காணிப்பகம் (People's Watch) எனும் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளரான திருமிகு ஆசீர்வாதம் அவர்கள் கருத்துரை வழங்கினார்கள்.

கருதுரையின் போது, தான் எவ்வாறு கல்வி கற்று இந்த நிலைக்கு உயர்ந்தார் என்றும் தமிழ்நாடு அடைந்திருக்கும் வளர்ச்சியில் கிறிஸ்தவர்களின் பங்கு என்ன என்பது பற்றியும் விளக்கினார். மேலும் ஆதிக்க சாதியினரைத் தவிர மற்றவர்கள் படிக்கக்கூடாது என்கிற நிலையிலிருந்து நாம் அனைவரும் கல்வி கற்று முன்னேறியதற்கு இங்குள்ள அரசியல் களம் எவ்வாறு செயல்பட்டது என்று கூறி தற்போது நம்மை மீண்டும் பழைய பிற்போக்கு நிலைக்குத் தள்ள இங்குள்ள மதவாத கட்சிகள் எவ்வாறு முயற்சி செய்கின்றன என்றும் எடுத்துரைத்தார்.

மேலும் தமிழ்நாடு கத்தோலிக்க இளைஞர்கள் இப்படி ஒன்றாக சேர்ந்து ஒரு கூட்டம் நடத்துவது பல முற்போக்கான செய்திகளை பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சி அளிப்பதாகவும், அதேசமயம் வருகின்ற தேர்தலில் நாம் சரியாக நமது வாக்குரிமையை பயன்படுத்தவில்லை என்றால் இது போன்ற கூட்டங்களை நம்மால் நடத்த முடியாமல் போக அதிக வாய்ப்பு இருப்பதாகவும், இந்திய அரசியலமைப்பு நமக்கு அளித்துள்ள மத சுதந்திரம் உட்பட பல்வேறு உரிமைகளை நாம் இழக்க நேரிடும் என்றும் எச்சரித்தார்.

பிறகு நடைபெற்ற கலந்துரையாடலில் இளைஞர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த திரு. ஆசீர்வாதம் அவர்கள் மீண்டும் ஒருமுறை இங்கு உள்ள அரசியல் சூழலையும் அச்சுறுத்தலையும் நினைவுபடுத்தி வெறும் திரைக் கவர்ச்சியினால் மட்டும் ஒருவருக்கு வாக்கு செலுத்த கூடாது, மாறாக நம்முடைய இருப்பையும் உரிமையையும் பாதுகாக்கும் பொருட்டு நன்றாக சிந்தித்துப் பார்த்து வாக்களிக்க வேண்டும் என்று கூறினார். நாமெல்லாம் படிக்கக் கூடாது குறிப்பாக பெண்கள் பொதுவெளிகளில் பேசக்கூடாது என்றிருந்த நிலையை மாற்றியது நம் நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் தான். ஆனால் தற்போது அந்த சட்டமே பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறது எனவே இளைஞர்கள் போராடி பெற்ற இந்த உரிமைகளை பாதுகாக்க சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று கூறினார். மிக முக்கியமாக நாம் கிறிஸ்தவர்களாக தொடர்ந்து வாழ வேண்டுமானால் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய இளைஞர் பணிக் குழுவின் தலைவர் மேதகு ஆயர் நசரேன் சூசை அவர்கள் இளைஞர்கள் அதிகம் வாசிக்க வேண்டும் என்றும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது தற்போது என்ன புத்தகம் வாசிக்கிறீர்கள் என்று உரையாடும் அளவிற்கு வாசிப்பில் ஈடுபட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள். மேலும் 2026 ஆம் ஆண்டிற்காக தமிழ்நாடு கத்தோலிக்க இளைஞர் இயக்கம் வெளியிட்டுள்ள ஆண்டு திட்டத்தில் கவனம் செலுத்தவும் இயக்க கட்டமைப்பை வலுப்படுத்தவும் ஆவன செய்யுமாறு மறை மாவட்ட இயக்குனர்களுக்கும் இளைஞர்களுக்கும் அறிவுறுத்தினார்.

மிக முக்கியமாக தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு ஒத்த கருத்துடைய தோழமை இயக்கங்களோடு இணைந்து செயல்படவும் ஆயர் அவர்கள் அழைப்பு விடுத்தார்.

தொடர்ந்து பங்கேற்பாளர்கள் அனைவரும் மண்டல வாரியாக பிரிக்கப்பட்டு குழு கலந்துரையாடலில் ஈடுபட்டு எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் இளைஞர் இயக்கம் முன்னெடுக்க வேண்டிய செயல் திட்டங்களை அறிக்கையாக சமர்ப்பித்து பின்னர் தீர்மானமாக நிறைவேற்றினர்.

தொடர்ந்து மறைமாவட்டங்களில் புதிதாக பொறுப்பேற்றுள்ள நிர்வாகிகள் தங்களை அறிமுகம் செய்து கடந்த ஆறு மாத கால செயல்பாட்டு அறிக்கைகளை சமர்ப்பித்தனர்.

பிறகு அண்மையில் தமிழ்நாடு கத்தோலிக்க இளைஞர் இயக்கத்தால் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்ட பொங்கல் திருப்பலியின் தியான பாடலான "சாமி பெயர பாடிடுவோம்" எனும் பாடல் திரையிடப்பட்டது.

பிறகு இந்நாளின் மற்றொரு முக்கிய நிகழ்வான மாநில அளவிலான புதிய செயற்குழு மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. வழக்கமான தேர்தல் போல் அல்லாமல் தோழமை ஆட்சி முறையில் இந்த தேர்தல் நடைபெற்றது. பிறகு பணி பொறுப்பேற்பு உறுதிமொழி ஏற்றனர்.

தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக மாநில அளவில் சிறப்பாக செயல்பட்டு வந்த முன்னாள் செயற்குழு உறுப்பினர்களுக்கு நன்றி கூறி பரிசுகள் வழங்கப்பட்டன.

பொதுக்குழுவின் நிறைவாக புதிய செயலரால் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. பின்னர் புதிய தலைவர் நன்றியுரை கூற இயக்கத்தின் இயக்க பாடலோடு பொதுக்குழு இனிதே நிறைவுற்றது.