குழித்துறை மாவட்டத்தின் யூபிலி ஆண்டு கொண்டாட்டம் - 2025 !| Veritas Tamil
குழித்துறை மறைமாவட்டம் யூபிலி ஆண்டு 2025-ஐ அர்த்தமுள்ள விதத்தில் சிறப்பாக கொண்டாட திட்டமிட்டது. கல்வி உதவி, மருத்துவ உதவி, திருமண உதவி, முதியவர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் என பல ஏழை, எளியவர்கள், நலிந்தவர்கள் பயன்பெறும் பல திட்டங்களை முன்னெடுத்தது. அதிலும் சிறப்பு திட்டமாக, குழித்துறை திருஅவை வீடற்ற எல்லோருக்கும் வீடு கட்டிக் கொடுக்கும் "வாழும் குடில் திட்டத்தை" முதன்மை பணியாக இந்த யூபிலி ஆண்டில் முன் வைத்தது. ஒரு பங்கிற்கு ஒரு வீடு என திட்டமிட்டு செயல்பட அழைப்பு விடுத்தது.
இத்திட்டத்திற்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் மறைமாவட்ட அருள்பணியாளர்கள், பங்கு அருட்பணிப்பேரவை நிர்வாகிகள், அடித்தள முழு வளர்ச்சி சங்க நிர்வாகிகள் மற்றும் இறைமக்கள் என அனைவரும் இணைந்து உழைத்தார்கள். தற்போது, இந்த யூபிலி ஆண்டில் குழித்துறை மறைமாவட்டத்தின் பங்கு சமூகங்கள் சுமார் நான்கு கோடி மதிப்பில் 51 புதிய வீடுகளை கட்டி கொடுத்துள்ளார்கள். 30 வீடுகளை பழுது நீக்கி பராமரித்தும் கொடுத்துள்ளார்கள்.
இதைக் குறித்து குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் கூறும்போது "மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என்ற இயேசுவின் வார்த்தைகளுக்கு செயல் வடிவம் கொடுத்ததாகவே இத்திட்டத்தின் வெற்றியை பார்க்கிறேன். அருள்பணியாளர்களும் இறைமக்களும் திட்டமிட்டு இணைந்து உழைத்துள்ளார்கள். ஏழைகளுக்கு வீடு கட்டி கொடுத்ததன் மூலம் இயேசுவுக்கே வீடு கட்டிக் கொடுத்ததாக உணர்கிறேன்.
இத்திட்டத்தின் பயனாளிகள் தேர்வில் சமயமோ பங்கு உறுப்பினர் என்ற உரிமையோ முதன்மையாக்கப்படவில்லை. யார் அதிக தேவையில் இருக்கிறார்கள் என்பதே முதல் தகுதியாக பார்க்கப்பட்டிருக்கிறது. இந்த வாழும் குடில் திட்டம் சமய எல்லைகளைக் கடந்து சமூக நல்லிணக்கத்திற்கு சாட்சியாக மாறியிருக்கிறது. சபை பாகுபாடுகளும் வேறுபாடுகளும் முன்னிலைப்படுத்தப்படும் இன்றைய சூழலில் சபை பாகுபாடு இன்றி பிற சபை சகோதர சகோதரிகளுக்கெல்லாம் குடில் வீடு திட்டம் அடைக்கலம் தந்துள்ளது. இதன் மூலம் எமது மறைமாவட்டம் கிறிஸ்தவ ஒன்றிப்புக்கு வாழும் சாட்சியாக திகழ்கிறது. இத்திட்டம் இந்த யூபிலி ஆண்டோடு முடிந்து விடவில்லை. எம் குழித்துறை மறைமாவட்டத்தில் இந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடற்றவர்கள் இல்லை எனும் நிலை வரும் வரை இத்திட்டம் தொடரும்.
இத்திட்டத்தின் பயனாளிகளில் ஒருவரான மாடத்தட்டுவிளை பங்கை சார்ந்த திருமதி. சொர்ணம் கூறும்போது எங்கள் ஒரே மகன் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு சமீபத்தில் இறந்துவிட்டார். நானும் என் கணவரும் முதிர்ந்த வயதில் கவனிப்பாரற்று ஆதரவற்ற நிலையில் மிகவும் சிதிலமடைந்த ஒரு பழைய வீட்டில் வாழ்ந்து வந்தோம். மழை பெய்தால் வீடு முழுவதும் ஒழுகும். வீடு எப்போது வேண்டுமானாலும் இடிந்து விடலாம் என்கின்ற நிலைமையில் இருந்தது. வீட்டுக்குள் சில நேரங்களில் பாம்பு கூட வந்து விடும். அப்படி ஒரு பாதுகாப்பற்ற நிலையிலிருந்தபோதுதான் பங்குத் தந்தையும் பங்குப்பேரவை நிர்வாகிகளும் வந்து பார்த்து எங்களுக்கு இந்த வீட்டை கட்டிக் கொடுத்துள்ளார்கள். இந்த உதவியை எங்களால் மறக்க முடியாது. ஒவ்வொரு நாளும் பயந்து பயந்து வாழ்ந்தோம். இப்போது நிம்மதியாக பயமின்றி மகிழ்வோடு இருக்கிறோம். கடவுளுக்கு கோடான கோடி நன்றி.
வெள்ளிகோடு பங்குத்தந்தை அருள்பணி. அலோசியஸ் அவர்கள் கூறும்போது, சூசைபுரம், வெள்ளிக்கோட்டினுடைய ஒரு கிளைப்பங்கு. 153 குடும்பங்களை மட்டுமே கொண்ட ஒரு எளிய பங்குச் சமூகம். ஆயருடைய அழைப்பைக் கேட்டு அவர்களாகவே முன்வந்து ஏழைக்கு ஒரு வீடு கட்டி கொடுப்போம் என்று சொன்னார்கள். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பங்கிலே நலிவடைந்த ஒரு குடும்பத்தை தேர்ந்தெடுத்தோம். குடும்ப தலைவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர். குடும்ப தலைவி தூய்மைப் பணியாளர். ஒரு மகள் 12 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கின்றாள். பங்குச் சமூகமே இணைந்து இந்த குடும்பத்திற்காக உழைத்தது. ஒவ்வொரு வீடாக உதவி கேட்டுச் சென்றோம். அனைவரும் இன்முகத்தோடு தங்களால் இயன்ற பங்களிப்பை அளித்தார்கள். அருகில் இருக்கின்ற கடைகளிலே சென்று பெயிண்ட், டைல்ஸ், கதவு, கட்டளை என்று உதவி கேட்டோம். அவர்களும் மனமுவந்து உதவினார்கள். இப்படி எங்கள் பங்கு மக்களுடைய தாராள உதவிகளாலும், அக்கம் பக்கத்து பிற சமய, சபை நண்பர்களுடைய ஒத்துழைப்பாலும் இந்த இல்லத்தை கட்டி முடித்தோம். கிறிஸ்து பிறப்பிற்கு முன்பாக ஆயர் அவர்கள் இந்த இல்லத்தை அர்ச்சித்து திறந்து வைத்தார்கள். அர்த்தமுள்ள கிறிஸ்து பிறப்பை, யூபிலி ஆண்டை கொண்டாடிய மன நிறைவை பெற்றிருக்கின்றோம். இதற்கு உதவிய அத்தனை நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.