தமிழக ஆயர் பேரவையின் வன்மையான கண்டன அறிக்கை!| Veritas Tamil

பன்முகத் தன்மையின் அடித்தளத்தில் கட்டப்பட்ட ஒரு வலுவான சமூகம் இந்திய சமூகமாகும். பல்வேறு சமயத்தவர் இந்த மண்ணில் சகோதர சகோதரிகளாக வாழ்ந்து வருவது இந்திய சமூகத்தின் தனிப்பட்ட சிறப்பாகும். ஆனால் அண்மைக் காலங்களில் கிறிஸ்தவர்கள் உட்பட பல சிறுபான்மை சமூகங்கள் மீது நடைபெறும் தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள், பொய் வழக்குகள் போன்றவை நாட்டின் ஜனநாயக அடித்தளத்தைப் பற்றிய ஆழ்ந்த கேள்விகளை எழுப்புகின்றன. குறிப்பாக கிறிஸ்து பிறப்புக் காலத்தையொட்டியும் கிறிஸ்து பிறப்புப் பெருவிழா அன்றும் நம் நாட்டில் வட மாநிலங்களில் கிறிஸ்துமஸ் விழாக்களின் போதும் வழிபாட்டின் போதும் அமைதியான முறையில் வழிபட்ட மக்களைத் தாக்கிய நிகழ்வுகள் பேரதிர்ச்சியைத் தருகின்றன. இச்செயல்களை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.
இந்திய அரசமைப்பு சட்டம் குடிமக்கள் அனைவருக்கும் சமயச் சுதந்திரம், சமத்துவம் மற்றும் சம மரியாதையை உறுதி செய்கிறது. ஆயினும் பல்வேறு வடிவங்களில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்கள் இன்றளவும் தொடர்கின்றன. குறிப்பாக தேவாலங்களையும் ஜெப மண்டபங்களையும் சேதப்படுத்துதல், கிறிஸ்தவ வழிபாடுகளில் இடையூறுகளிலும் வன்முறையிலும் ஈடுபடுதல், அருள்பணியாளர்கள், துறவியர் சமயப் பணியாளர்கள் மீது உடல் மற்றும் மன தாக்குதல்கள், மதமாற்றம் என்ற பெயரில் பொய் வழக்குகள், காவல்துறை தொல்லைகள், கிறிஸ்தவ சமூக சேவை நிறுவனங்களின் மீது சந்தேகப் பார்வை, நிர்வாக ரீதியாக அழுத்தங்கள் கொடுத்தல் என்பவை போன்றவை தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

இப்படிப்பட்ட நிகழ்வுகள் பெரும்பாலும் ஊடகங்களில் முழுமையாக வெளிச்சம் பெறாமல் போகின்றன. ஆனால் சிறுபான்மையினரின் வாழ்க்கையில் அவை ஆழ்ந்த காயங்களை ஏற்படுத்துவதை நாம் காண முடியும். இந்தத் தாக்குதல்களுக்குப் பிண்ணணியாக தீவிர மதவாத அரசியல், மதமாற்றம் குறித்த தவறான பிரச்சாரம், மதமாற்ற எதிர்ப்புச் சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்துதல், சமூக ஊடகங்களில் பொய் தகவல்கள் மற்றும் வெறுப்புப் பேச்சுகள் பரப்புவது போன்றவை உள்ளன.

கிறிஸ்தவர்கள் மீது நடைபெறும் தாக்குதல்கள் அந்தச் சமூகத்தை மட்டும் பாதிப்பதில்லை. மாறாக அவை இந்தியச் சமூகத்தின் ஒற்றுமை, மக்களாட்சி என்னும் பண்புகளைப் பாதிக்கின்றன. குறிப்பாக இத்தகைய தொடர்தாக்குதல்கள், சிறுபான்மை சமூகங்களில் பயத்தையும் பாதுகாப்பற்ற உணர்வையும், சட்டத்தின் ஆட்சியிலான நம்பிக்கை குறைதல், மதங்களுக்கு இடையேயான உறவுகளில் விரிசல் போன்றவற்றிற்கும் காரணியாகிறது. இத்தகைய சவால்களுக்கு நடுவில் கிறிஸ்தவ சமூகம் பெரும்பாலும் அமைதியான, அரசமைப்புச் சட்டப் பாதையிலான பதில்களையே வழங்கி வருகிறது. சட்ட ரீதியான போராட்டங்களை முன்னெடுப்பதும், சமயங்களுக்கிடையேயான உரையாடல்களை முன்னெடுப்பதும், சமூக சேவையை மேலும் தீவிரப்படுத்துவதுமே இதன் பதிலாக அமைவது கிறிஸ்தவத்தின் மாண்பை சுட்டிக்காட்டுகிறது.

எனவே இந்தியாவில் கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல அனைத்துச் சிறுபான்மை சமூகங்களும் பாதுகாப்புடன் வாழ்வதற்காக, ஆளும் அரசுகள் அரசமைப்புச் சட்டத்தை உறுதியாக காக்க வேண்டும். காவல்துறையும் நிர்வாகமும் பாகுபாடு இன்றி செயல்பட வேண்டும். ஊடகங்கள் பொறுப்புடன் உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும். குடிமக்கள் வெறுப்பை அல்ல மனித நேயத்தையே தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் எல்லாரும் சமத்துவத்தோடும் சுதந்திரத்தோடும் சகோதரத்துவம் வாழுகிற ஒரு நாடாக இந்தியா திகழும்.

ஏனென்றால் மத சுதந்திரம் ஒரு சமூகத்தின் உரிமை மட்டும் அல்ல. அது இந்திய ஜனநாயகத்தின் உயிர் நாடி. எனவே, அமைதி, நீதி, பிறர் மீதான மரியாதை ஆகிய மதிப்பீடுகளே இத்தகைய சவால்களுக்கு நிலையான பதிலாக இருக்க முடியும். இந்திய நாட்டின் சகோதர சமயங்களை சார்ந்த குடிமக்களுக்குத் தமிழக ஆயர் பேரவை அன்போடு கேட்டுக் கொள்வதெல்லாம், வன்முறையைத் தவிர்த்து, வெறுப்பு அரசியலை நீக்கி, இந்த மண்ணில் அமைதியோடும் ஒற்றுமையோடும் வாழ உறுதி ஏற்போம் என்பதே.