தீ விபத்தில் தப்பிய சிறுமி துணை ஆட்சியரான பயணம் | Veritas Tamil

ஜூலை 4, 2026: 2004-ஆம் ஆண்டு ஜூலை 16 அன்று காலை, ஒன்பது வயதுச் சிறுமியான S.S. ஜெனிபர் தன் நான்காம் வகுப்பு ஆசிரியரிடம் கேட்ட ஒரு சாதாரண அனுமதி, இறுதியில் அவளது உயிரையே காப்பாற்றும் என்று யாரும் நினைத்திருக்கவில்லை. "டீச்சர், அஞ்சு நிமிஷத்துல வந்துடுறேன்," என்று மெல்லக் கூறிவிட்டு, தன் வகுப்புப் பாடங்களை முடிப்பதற்காகத் தரைத்தளத்திற்குச் சென்றாள்.
அந்த ஐந்து நிமிடங்கள்தான் அவரது வாழ்க்கையைத் தீர்மானித்தன.

அடுத்த சில நிமிடங்களில், கும்பகோணம் ஸ்ரீ கிருஷ்ணா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியின் சத்துணவு சமையலறையிலிருந்து திடீரெனப் பரவிய தீ, ஒட்டுமொத்தப் பள்ளியையும் தன் கோரப் பிடிக்குள் இழுத்துக் கொண்டது. அன்றைய தினம் சத்துணவு அதிகாரிகளின் ஆய்விற்காக, மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் காட்டுவதற்காக, தரைத்தளத்தில் படித்துக் கொண்டிருந்த ஆங்கில வழி கல்வி மாணவர்களை, மேல் தளத்தில் இருந்த தமிழ் வழி கல்வி மாணவர்களுடன் ஒன்றாக அமர வைத்திருந்தனர்.

முறையான காற்றோட்டம், அகலமான வாசல்கள் அல்லது விளையாட்டு மைதானம் என எதுவுமே இல்லாத அந்த ஓலைக்கூரை கட்டிடம், ஒரு மரணக் கூண்டாக மாறியிருந்தது.
பள்ளியெங்கும் அபயக் குரல்களும் அலறல்களும் எதிரொலித்தபோது, ஜெனிபர் பக்கத்து வகுப்பறையில் இருந்த தன் தம்பியைப் பத்திரமாகத் தூக்கிக்கொண்டு வெளியாட்களின் உதவியோடு பாதுகாப்பாக ஓடி வந்தாள்.

அவர்கள் வெளியேறிய அடுத்த சில நொடிகளில், மேல் தளத்தின் கூரை ஒட்டுமொத்தமாகச் சரிந்து விழுந்தது. தமிழக வரலாற்றிலேயே மிகக் கொடூரமான அந்தத் தீ விபத்தில், ஜெனிபரின் நெருங்கிய தோழிகளான கார்த்திகா, ஷீபா மற்றும் அவளுடன் தினமும் ஆட்டோவில் பயணிக்கும் குழந்தைகள் உட்பட 94 பிஞ்சுயிர்கள் கருகி சாம்பலாயின.

உயிர் பிழைத்ததன் குற்ற உணர்ச்சி
தீ விபத்திலிருந்து ஜெனிபர் உடல் ரீதியாகத் தப்பித்தாலும், மன ரீதியாக ஏற்பட்ட வடுக்களில் இருந்து அவளால் அவ்வளவு எளிதாகத் தப்பிக்க முடியவில்லை. பல ஆண்டுகளாக, "நாம் மட்டும் உயிர் பிழைத்துவிட்டோமே" என்ற குற்ற உணர்ச்சி அவரை வாட்டி வதைத்தது.

"இறந்துபோன என் தோழிகளோட அம்மாக்கள் இப்போ என்னைப் பார்த்தாலும் கட்டிப்பிடிச்சு அழுவாங்க," என்று சொல்லும்போதே ஜெனிபரின் குரல் உடைகிறது. "'என் பொண்ணு இருந்தா உன் வயசுலதானே இருந்திருப்பா... நீ தப்பிச்சு ஓடிவரும்போது ஏன் அவளையும் கூட்டிக்கிட்டு வரல?'னு அவங்கள் கேக்குறப்போ என் மனசே நொறுங்கிப் போயிடும்."

'நான் ஏன் காப்பாற்றப்பட்டேன்? என் வாழ்க்கையின் நோக்கம் என்ன?' என்ற கேள்வி நீண்ட நாட்களாக அவர் மனதில் எதிரொலித்துக் கொண்டே இருந்தது.

அதற்கான விடை, விபத்து நடந்த சில வாரங்களிலேயே ஒரு கனிவான அதிகாரியின் வடிவில் அவளுக்குக் கிடைத்தது. அந்தப் பேரழிவிற்குப் பிறகு, தஞ்சாவூரின் புதிய மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்ற டாக்டர் ஜே. ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்கக் களமிறங்கினார். அவர் வெறும் குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்து உத்தரவிடாமல், அதிர்ச்சியிலிருந்த குழந்தைகளின் அருகில் அமர்ந்து, அன்போடு பேசி, நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கும் பயத்தைப் போக்கி அவர்களுக்கு ஆறுதலாய் நின்றார்.

கலெக்டர் ராதாகிருஷ்ணன், ஜெனிபர் மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஸ்ரீ மாதா மெட்ரிகுலேஷன் பள்ளியில் இலவச சீட், சீருடைகள் மற்றும் புத்தகங்களைப் பெற்றுத் தந்தார். அதோடு, அவர்கள் மன அழுத்தத்திலிருந்து மீளத் தேவையான உளவியல் ஆலோசனைகளுக்கும் ஏற்பாடு செய்தார்.

"அப்போதெல்லாம் மாவட்ட ஆட்சியர்னா என்ன வேலை செய்வாங்கன்னு எனக்குத் தெரியாது," என்று நினைவு கூர்கிறார் ஜெனிபர். "ஆனா, எங்களைப் பாதுகாக்கவும் எங்களோட காயங்களை ஆற்றவும் அவர் ஓடி ஓடி உழைச்சதைப் பார்த்தப்போதான், என் மனசுல சிவில் சர்வீஸ் கனவு விதைக்கப்பட்டது."

வறுமையுடனான நீண்ட போராட்டம்
கனவைக் காண்பது எளிது, ஆனால் வறுமையும் சமூகச் சூழலும் சூழ்ந்திருக்க அதைப் நனவாக்குவது ஒரு நெடிய போராக இருந்தது. கல்வியே தங்களை உயர்த்தும் ஒரே ஆயுதம் என்பதை உணர்ந்த ஜெனிபர், பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் 1094 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார். அவளது தோழிகள் அனைவரும் பொறியியல் படிப்புகளில் சேர்ந்தபோது, குடும்பப் பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக ஜெனிபரால் சென்னைக்குச் சென்று பி.எஸ்சி கணிதம் மட்டுமே படிக்க முடிந்தது.

அவளது தாய் சுஜாதா, அவளுக்குப் பெரும் அரணாக நின்றார். ஒரு தனியார் சீட்டு நிறுவனத்தில் வெறும் 3,000 ரூபாய் மாதச் சம்பளத்திற்கு வேலை செய்து, அந்தப் பணத்தைக் கொண்டு ஜெனிபரைச் சென்னையில் படிக்க வைத்தார். உறவினர்களும் அண்டை வீட்டாரும் திருமணப் பேச்சை எடுத்தபோதெல்லாம், "என் பொண்ணு பொருளாதார சுதந்திரத்தோட பெரிய வேலைக்குப் போகணும், அவளைப் படிக்க விடுங்க" என்று சுஜாதா உறுதியாக மறுத்துவிட்டார்.

சென்னை படிப்பிற்குப் பெற்றோரைச் சார்ந்திருக்க விரும்பாத ஜெனிபர், கோடம்பாக்கத்தில் குழந்தைகளுக்கு ஹோம் டியூஷன் எடுத்து, அதில் கிடைத்த 4,000 ரூபாய் வருமானத்தை வைத்துத் தன் போட்டித் தேர்வுப் புத்தகங்களை வாங்கினார். கொரோனா பேரிடர் காலத்தில், அவளது தந்தை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுப் படுத்த படுக்கையானபோது குடும்பத்தின் சேமிப்பு முழுமையாகக் கரைந்தது.
பொருளாதார ரீதியாக முடங்கிய அந்த இக்கட்டான சூழ்நிலையில், அவளது நண்பர்களும் பயிற்சி மையங்களும் கைகொடுத்தன. மனிதநேயம் ஐஏஎஸ் அகாடமி, அகில இந்திய குடிமைப் பணிகள் தேர்வுப் பயிற்சி மையம் மற்றும் சந்தோஷ் & சபரி ஐஏஎஸ் அகாடமியின் சபரி சார் போன்ற வழிகாட்டிகளின் உதவியோடு ஜெனிபர் தன் அயர்வற்ற உழைப்பைத் தொடர்ந்தார்.

சாம்பலிலிருந்து எழுந்த சாதனை
இந்த நீண்ட பயணம் பல ஏமாற்றங்களையும் தோல்விகளையும் கொண்டது. 2017 முதல் 2024 வரை, ஜெனிபர் ஏழு முறை கடினமான யுபிஎஸ்சி (UPSC) தேர்வை எழுதியும், இறுதிப் பட்டியலில் சில மதிப்பெண்களில் வாய்ப்பைத் தவறவிட்டார். இதற்கிடையில், டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்று, 'டெபுடி கமர்ஷியல் டேக்ஸ் ஆபீஸர்' (DCTO) வேலை கிடைத்தது.
அப்போதும் அவளது தாய், "உன்னோட இறுதி லட்சியம் ஒரு கலெக்டர் ஆகணும்ங்கிறதுதானே? அப்போ இந்த வேலையை விட்டுட்டுத் தொடர்ந்து படி, மத்த எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்," என்று அசாத்திய நம்பிக்கையைக் கொடுத்தார்.

தாயின் வார்த்தைகளை வேதமாகக் கொண்டு ஜெனிபர் மீண்டும் களமிறங்கினாள். அவளது விடாமுயற்சிக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக, டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் மாநில அளவில் 15-வது ரேங்க் பெற்று சாதனை படைத்தாள். தற்போது ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் உதவி இயக்குநராகப் (Assistant Director) பொறுப்பேற்க உள்ளார், இது துணை மாவட்ட ஆட்சியருக்கு (Deputy Collector) இணையான பதவியாகும்.

விபத்து நடந்து இருபத்தி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஜெனிபர் சமீபத்தில் டான்ஜெட்கோ தலைமையகத்தில் ஒரு நெகிழ்ச்சியான சந்திப்பை மேற்கொண்டார். அன்று தன்னை அணைத்து ஆறுதல் கூறிய அதே டாக்டர் ஜே. ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் அவர்களை, இன்று அவரே வியக்கும் வண்ணம் ஒரு சக அதிகாரியாக நேருக்கு நேர் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

"அசாத்திய துணிச்சலும் மன உறுதியும் கொண்ட ஜெனிபரைச் சந்தித்து வாழ்த்துவதில் பெருமையடைகிறேன். அந்தப் பேரழிவின் வடுக்களைத் நேரில் கண்ட எனக்கு, இன்று அவளை ஒரு அதிகாரியாகப் பார்ப்பது மிகுந்த நெகிழ்ச்சியை அளிக்கிறது." என்று டாக்டர் ஜே. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

ஜெனிபருக்கு இந்தத் தருணம், கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தன் மனதில் இருந்த அனைத்துக் கேள்விகளுக்கும், குற்ற உணர்ச்சிகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தது போன்ற ஒரு நிம்மதியைத் தந்துள்ளது. அன்று தான் ஏன் காப்பாற்றப்பட்டோம் என்பதற்கான முழு அர்த்தமும் இன்று அவளுக்கு விளங்கியுள்ளது.

"பின்தங்கிய சமூகப் பின்னணி, வறுமைனு பல காரணங்களால எங்களை மதிக்காத இந்தச் சமூகம், இன்னிக்கு என்னையும் என் அம்மாவையும் மதிக்குதுன்னா, அதுக்கு இந்தப் படிப்பு மட்டும்தான் காரணம்," என்று நம்பிக்கையுடன் புன்னகைக்கிறார் ஜெனிபர். "நான் ஒரு அதிகாரியா பொறுப்பேற்றதும், எந்தப் பள்ளியிலும் தீ விபத்து நடக்காதவாறு முறையான உள்கட்டமைப்பை உறுதி செய்வதே என் முதல் கடமை. இனி எந்தக் குழந்தையும் தீ விபத்தின் கொடூரத்தை எதிர்கொள்ளக் கூடாது."

கும்பகோணத்தின் சாம்பல் குவியலிலிருந்து எழுந்து, இன்று அதிகார வர்க்கத்தின் உயரிய நாற்காலியை நோக்கித் தன் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த இளம் துணை ஆட்சியர், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்குக் கூறும் அறிவுரை இதுதான்:

"ஜெயிக்கணும்னு உறுதியா முயற்சி பண்ணினா, இந்த பிரபஞ்சமே நமக்கு உதவி செய்யும். நம்பிக்கையை மட்டும் எப்பவும் விட்றாதீங்க!"

- அபிசேக் ராஜா அ

Tamil Survey Popup Image