இறைவனுக்காக வாழ்வை அர்ப்பணித்த ஒடிசா அருட்சகோதரி | Sr. Chandrika Pradhan | Veritas tamil

இந்தியாவின் தெற்கு மாநிலமான கேரளாவில், கார்மல் அன்னை சபையைச் (Congregation of the Mother of Carmel – CMC) சேர்ந்த அருட்சகோதரி சந்திரிகா பிரதான், மேலும் 56 அருட்சகோதரிகள் கடந்த மே 25 அன்று நிரந்தர வார்த்தைப்பாடு கொடுத்தனர். இதனை முன்னிட்டு, ஜூன் 13 அன்று அவரது சொந்த கிராமமான ஒடிசா மாநிலத்தின் கந்தமால் மாவட்டத்திலுள்ள சோமாகோட்டாவில் நன்றித் திருப்பலி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான நம்பிக்கையாளர்களும் நலன் விரும்பிகளும் கலந்து கொண்டனர்.

1995 ஆம் ஆண்டு நவம்பர் 16 அன்று ஜோசப் மற்றும் சால்மினா பிரதான் தம்பதியருக்கு பிறந்த அருட்சகோதரி சந்திரிகா, மூன்று பிள்ளைகளில் இளையவர் ஆவார். ஒடிசா மாநிலத்தின் கந்தமால் மாவட்டத்தில் அமைந்துள்ள சோமாகோட்டா என்ற கத்தோலிக்க கிராமத்தைச் சேர்ந்த இவர், கத்தக்–புவனேஸ்வர் உயர் மறைமாவட்டத்தின் இரக்க அன்னைப் பங்கில் வளர்ந்தவர்.

2013 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்புக் கல்வியை நிறைவு செய்த பிறகு, தனது ஊரைச் சேர்ந்த மற்றொரு இளம்பெண்ணுடன் கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள அங்கமாலிக்குச் சென்று, அங்குள்ள ஒரு துறவற மடத்தில் சமையல் மற்றும் இல்லப் பணிகளில் உதவி செய்தார்.

அங்கு கார்மல் அன்னை சபையினருடன் ஏற்பட்ட அறிமுகம் தனது துறவற அழைப்பை உணர உதவியது என்று அருட்சகோதரி சந்திரிகா தெரிவித்துள்ளார். இவரின் துறவற அழைப்பைக் குறித்து அவரது தந்தை ஜோசப் பிரதான் கூறுகையில், பங்கு வாழ்க்கையிலும் செபத்திலும் மகள் அதிக ஈடுபாடு காட்டியதன் மூலம் இறைவனுக்காக வாழ வேண்டும் என்ற விருப்பம் வளர்ந்ததாக தெரிவித்தார்.

தினசரி திருப்பலி, தனிப்பட்ட செபம் மற்றும் அருட்சகோதரிகளின் ஊக்குவிப்பு ஆகியவற்றின் மூலம் அவர் தனது அழைப்பை தெளிவாக உணர்ந்தார்” என்று கூறிய  அருட்சகோதரி சந்திரிகாவின் தந்தை, மேலும், பிறருக்குச் சேவை செய்த அனுபவம் பொறுமை, தாழ்மை, தாராள மனம் மற்றும் அன்பு போன்ற பண்புகளை வளர்த்ததாகவும், அவை துறவற வாழ்வைத் தேர்ந்தெடுக்க உதவியதாகவும் குறிப்பிட்டார்.

1866 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 அன்று புனித குரியாக்கோஸ் எலியாஸ் சாவரா மற்றும் இத்தாலிய கார்மேலைட் மறைப்பணியாளர் அருள்பணி லியோபோல்ட் பெக்காரோ ஆகியோரால் கேரளாவின் கூனம்மாவில் தொடங்கப்பட்ட கார்மல் அன்னை சபை, சீரோ-மலபார் திருஅவையின் முதல் உள்நாட்டு பெண்கள் துறவற சபையாகும்.

இன்று இந்தச் சபையில் ஏறத்தாழ  6,000 அருட்சகோதரிகள் உள்ளனர். அவர்கள் ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஓசியானியா உள்ளிட்ட 19 நாடுகளில் கல்வி, நலவாழ்வு, சமூகப் பணி, மேய்ப்புப்பணி மற்றும் பிற திருத்தூதுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Sister

ஒடிசா மாநிலத்தில் இச்சபை பாலசோர் மற்றும் முனிகுடா பகுதிகளில் தங்களது சமூகங்களை நடத்தி வருகிறது. தற்போது வடகிழக்கு இந்திய மாநிலமான மேகாலயாவில் பணியாற்றி வரும் அருட்சகோதரி சந்திரிகா, “கார்மல் அன்னை சபையின் அன்னை ஜெயா ரோஸ் எனக்கு ஊக்கம் அளித்தார் என்றும், அதன் மூலம் படிப்படியாக என் துறவற அழைப்பை உணர்ந்தேன் என்றும் இந்த அரிய அழைப்பிற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்” என்றும்  கூறினார்.

2019 ஆம் ஆண்டு தனது முதல் வார்த்தைப்பாட்டை கொடுத்த அருட்சகோதரி சந்திரிகா, இந்த ஆண்டு நிரந்தர வார்த்தைப்பாட்டை அளித்து கார்மல் அன்னைச் சபையின் நிரந்தர உறுப்பினராக இணைந்தார்.

இதனையொட்டி சோமாகோட்டாவில் நடைபெற்ற நன்றித் திருப்பலியில் மறையுரை ஆற்றிய அருள்பணி மைக்கேல் பெஹேரா அவர்கள், “இறைவன் சாதாரண நிகழ்வுகளின் வழியாகவே தனது திட்டங்களை நிறைவேற்றுகிறார் என்றும்சமையல் சேவைக்காக கேரளா சென்ற இளம் பெண்ணை, தமது மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட துறவற வாழ்வுக்கு அழைத்தது அவரது செயல்பாட்டின் சான்றாகும்” என்றும்  எடுத்துரைத்தார்.

பிறருக்குச் செய்யப்படும் சேவைப் பணிகள் பல நேரங்களில் ஒருவரின் இறையழைப்பைக் கண்டறியும் பாதையாக அமைகின்றன” என்றும் அவர் வலியுறுத்தினார்.