இளைஞர்களின் புரட்சிகரமான தவக்காலப் பயணம் ! | Veritas Tamil
தவக்காலம் என்பது வெறும் சடங்குகளுக்கான நேரமல்ல, அது தனிமனித மற்றும் சமூக மாற்றத்திற்கான களம் என்பதை மதுரை எல்லிஸ் நகர் புனித செபஸ்தியார் கோயில் இளைஞர் இயக்கம் மெய்ப்பித்துக் காட்டியுள்ளது. "விடுதலைப் பாதையில் விடியலை நோக்கி" என்ற முழக்கத்துடன், நான்கு வாரங்களாக நான்கு வெவ்வேறு தளங்களில் இவர்கள் முன்னெடுத்த விழிப்புணர்வு நிகழ்வுகள் ஒட்டுமொத்தப் பங்கையும் சிந்திக்க வைத்துள்ளது.
பங்குத்தந்தை அருள்பணி. ஜோக்கின் அவர்களின் வழிகாட்டுதலிலும், ஆசீர்வாதத்திலும் இந்தத் தவக்காலச் சிறப்புச் செயல்பாடுகள் எழுச்சியுடன் நடைபெற்றன.
வாரம் 1: உணவா? நஞ்சா? - ஆரோக்கியமான வாழ்வு
முதல் வாரத்தில், "நாம் உண்ணும் உணவே நமக்கு மருந்தாக இருக்க வேண்டும், நஞ்சாகக் கூடாது" என்ற கருத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அன்றாட வாழ்வில் நாம் சுவைக்காகப் பயன்படுத்தும் துரித உணவுகளில் உள்ள ஆபத்தான வேதிப்பொருட்கள் குறித்து இளைஞர்கள் ‘சார்ட்’ (Charts) வழியாகவும், விழிப்புணர்வுப் பாடல் மற்றும் நடனம் வழியாகவும் விளக்கினர். பாரம்பரிய மற்றும் மாற்று உணவுகளின் அவசியத்தை உணர்த்தி, ஆரோக்கியமான வாழ்விற்கு வழிகாட்டினர்.
வாரம் 2: அடுத்தது என்ன? - கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த குறுகிய பார்வையை மாற்றி, விரிந்த உலகைக் காட்டும் நோக்கில் இரண்டாம் வார நிகழ்வு அமைந்தது. அரசுப் பணிகள் மற்றும் பல்வேறு உயர் கல்வித் துறைகளில் இளைஞர்கள் தடம் பதிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர். பிள்ளைகளின் கனவுகளுக்குப் பெற்றோர் எவ்வாறு உரமிட வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.
வாரம் 3: மௌனசாட்சியல்ல 'மறைசாட்சி' - சமூக நீதி
மூன்றாம் வாரம், சமூக நீதிக்காகத் தன் வாழ்வைத் தியாகம் செய்த அருள்பணி. ஸ்டான் சுவாமி அவர்களின் வாழ்க்கை வரலாற்று நாடகம் அரங்கேறியது. அருள்பணி. நித்தின் பிரபு எழுதி இயக்கிய இந்த நாடகத்தில், பழங்குடியின மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுப்பது ஒரு கிறிஸ்தவனின் கடமை என்பது தத்துரூபமாகச் சித்தரிக்கப்பட்டது. அநீதி கண்டு மௌனமாக இருப்பதை விட, நீதிக்காகக் குரல் கொடுப்பதே உண்மையான இறைவாக்கினர் பண்பு என்பதை இளைஞர்கள் தங்கள் நடிப்பால் உணர்த்தினர்.
வாரம் 4: மெய்யுறு சிலுவைப் பாதை - ஆன்மீகத் தேடல்
தவக்காலத்தின் உச்சகட்டமாக, ஆண்டவர் இயேசுவின் பாடுகளைக் கண்முன்னே நிறுத்தும் "மெய்யுறு சிலுவைப் பாதை" தத்ரூபமாகக் காட்சிப்படுத்தப்பட்டது. கல்வாரிப் பயணத்தின் நேரடிச் சித்தரிப்பு, இறைமக்களின் இதயங்களில் ஆழ்ந்த ஆன்மீகத் தாக்கத்தை ஏற்படுத்தியது.
மாற்றத்தின் தூதுவர்கள்: அலைபேசியிலிருந்து ஆலயத்திற்கு!
"இளைஞர்கள் ஆலயத்திற்கு வெளியே நிற்பவர்கள்" என்ற பொதுவான பிம்பத்தை இந்த நிகழ்வுகள் உடைத்தெறிந்துள்ளன. கடந்த இரண்டு மாதங்களாகத் தங்கள் அலைபேசி மோகத்தைக் கைவிட்டு, சமூக மாற்றத்திற்காகத் தங்களை அர்ப்பணித்து,
நேரத்தை பயனுள்ள வகையில் செலவழித்து, ஆலயத்திலேயே தங்கிப் பயிற்சியில் ஈடுபட்ட இளைஞர்களின் உழைப்பு போற்றுதலுக்குரியது.
பாராட்டும் நன்றியும்:
இந்நிகழ்வுகள் சிறப்பாக அமையப் பின்னணியில் உழைத்த:
அருட்சகோதரி. சேசு மேரி (திருக்குடும்ப சபை அருட்சகோதரி) (இளம்பெண்களை ஊக்குவித்து வழிநடத்தியமைக்காக).
திருமிகு. சுவக்கின் (அழகிய சுவரொட்டிகளை வடிவமைத்துக் கொடுத்தமைக்காக).
தன்னார்வலர்கள், பெரியவர்கள் மற்றும் தாராளமாக நிதி உதவி செய்த நன்கொடையாளர்கள் அனைவருக்கும் பங்குத்தந்தை மற்றும் இளைஞர் இயக்கம் சார்பில் நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.
விடுதலைப் பாதையில் மாற்றத்தை நோக்கிப் பயணிக்கும் எல்லிஸ் நகர் புனித செபஸ்தியார் கோயில் இளைஞர் இயக்கத்தின் இந்தப் பயணம், மற்ற பங்குகளில் உள்ள இளைஞர்களுக்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது.
"மாற்றத்தின் விதை தூவப்பட்டுவிட்டது; இனி விடியல் வெகுதொலைவில் இல்லை!"