புனித இஞ்ஞாசியார் திருவிழாவை முன்னிட்டு ‘மகத்தான மானுடம்’ திருமடல் குறித்த இருநாள் கருத்தரங்கை நடத்திய IDEAS நிறுவனம்

புனித இஞ்ஞாசியார் திருவிழாவை முன்னிட்டு, மதுரையைச் சேர்ந்த வளர்ச்சி, கல்வி, செயல்பாடு மற்றும் ஆய்வுகளுக்கான நிறுவனம் (IDEAS), ‘மகத்தான மானுடம்’ (Magnifica Humanitas) திருமடலை மையமாகக் கொண்ட இருநாள் கருத்தரங்கை அருள்சகோதரிகளுக்காக ஏற்பாடு செய்தது.

சமூகப்பணி மற்றும் கல்விப் பணிகளில் ஈடுபட்டிருந்த 11 துறவற சபைகளைச் சேர்ந்த 41 இளம் மற்றும் அனுபவமிக்க அருள்சகோதரிகள் இதில் உற்சாகத்துடன் பங்கேற்றனர். மேலும், IDEAS நிறுவனத்தின் 14 பணியாளர்களும், அருகிலுள்ள இயேசு சபை அருள்பணியாளர்களும் கருத்தரங்கில் இணைந்தனர்.

திருச்சி புனித பவுல் குருத்துவக் கல்லூரியின் அறநெறி இறையியலாளர் அருள்பணி தினகரன் மற்றும் தொகுப்பு இறையியலாளர் அருள்பணி சந்தியாகு ராஜா ஆகியோர், மகத்தான மானுடம் திருமடலின் கருத்துக்களையும், தமிழ்நாட்டின் இன்றைய சமூகச் சூழலில் அருள்சகோதரிகளுக்கும் சமூகப்பணியாளர்களுக்கும் அது வழங்கும் அழைப்பையும் விளக்கினர்.

கருத்தரங்கில் பங்கேற்ற SJL சபையைச் சேர்ந்த சகோதரி பாத்திமா அந்தோனி, “இந்த நிகழ்வுக்காக நான் ஒரு மாதமாகக் காத்திருந்தேன். செயற்கை நுண்ணறிவில் பலரும் ஆழமாக ஈடுபட்டுள்ள இந்தக் காலகட்டத்தில், ஏன் திருத்தந்தை இந்த திருமடலை வெளியிட்டார் என்பதை இக்கருத்தரங்கின் மூலம் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிந்தது. தொழில்நுட்பம் மனிதகுலத்திற்கும் சமூக நீதிக்கும் சேவை செய்ய வேண்டும்; மனித மாண்பை ஆதிக்கம் செலுத்தவோ அழிக்கவோ கூடாது என்ற சிந்தனையுடன் மாணவர்கள், ஆசிரியர்கள், அருள்சகோதரிகளை உருவாக்க விரும்புகிறேன்” என்று கூறினார்.

FSPM சபையைச் சேர்ந்த சகோதரி ரோசி, “IDEAS நிறுவனம் சமூக இயக்கங்கள், மகளிர் இயக்கங்கள் மற்றும் அருள்சகோதரிகளை இணைக்கும் பாலமாக விளங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் சமூகப்பணியில் ஈடுபட்டுள்ள அருள்சகோதரிகளையும், கத்தோலிக்கர் அல்லாத சமூகச் செயற்பாட்டாளர்களையும் ஒரே மேடையில் இணைத்து அனுபவப் பகிர்வை ஏற்படுத்துகிறது. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நிறுவனத்துடன் நான் இணைந்துள்ளேன். ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்வில் பங்கேற்பதன் மூலம் புதிய உற்சாகத்தையும், சமூகச் செயற்பாட்டாளர்களுடனான உறவையும் வலுப்படுத்திக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

விழாவின் ஒரு பகுதியாக IDEAS நிறுவனம் தனது சமூகப் பணிசார் கூட்டாளிகளை அழைத்திருந்தது. அரசு சாரா அமைப்புகளின் தலைவர்கள், வழக்கறிஞர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், பயிற்றுநர்கள், IDEAS பயிற்சிகளால் பயனடைந்தவர்கள் உள்ளிட்ட 45-க்கும் மேற்பட்ட குடிமைச் சமூக பிரதிநிதிகள், அவர்களில் ஒரு திருநங்கையும், இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இதன் மூலம் அருள்சகோதரிகள் சமூக அமைப்புகளின் பணிகளை அறிந்துகொள்ளவும், இரு தரப்பினரும் கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபடுவதற்கான வாய்ப்பையும் இந்த நிகழ்வு ஏற்படுத்தியது.

CIC சபையைச் சேர்ந்த சகோதரி இன்பென்டா, “தங்களது குடும்பப் பொறுப்புகளுக்கு மத்தியிலும், அருந்ததியர், கல் ஒட்டர், புதிரை வண்ணார் போன்ற மிகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக முழு அர்ப்பணிப்புடன் உழைக்கும் சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களின் சேவை என்னை ஆழமாகத் தூண்டியது. இம்மக்களுக்குச் சேவை செய்ய நானும் அழைக்கப்பட்டிருக்கிறேனே என்ற எண்ணம் எனக்குள் எழுந்தது” என்று பகிர்ந்துகொண்டார்.

IDEAS நிறுவனத்தின் தலைவர் மற்றும் இயக்குநரான அருள்பணி ஜோசப் சேவியர், “இந்தக் கொண்டாட்டம் அருள்சகோதரிகள் மகத்தான மானுடம் திருமடலை ஆழமாகப் புரிந்துகொள்ளவும், அவர்களை குடிமைச் சமூக அமைப்புகளுடன் இணைக்கவும் ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது. நிகழ்வின் முடிவில் ஒவ்வொரு பங்கேற்பாளரும் புதிய உற்சாகம், ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுடன் திரும்பிச் சென்றனர். இதுவே IDEAS நிறுவனத்தின் மறைப்பணியின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்” என்று தெரிவித்தார்.

 

Tamil Survey Popup Image