தாய்க்கான தாஜ்மஹால் | அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது. இது காதலின் சின்னமாக உலகப் புகழ் பெற்றது. இக்கட்டடம் முகலாய மன்னனான ஷாஜகானால், இறந்து போன அவரது இளம் மனைவி மும்தாஜ் நினைவாக 22,000 பணியாள்களைக் கொண்டு கட்டிமுடிக்கப்பட்டது. தாஜ்மஹால் வடிவில் திருவாரூரில் உயிரிழந்த தாய்க்காக ரூ.5 கோடி மதிப்பில் நினைவு இல்லம் கட்டிய மகனின் செயல் உண்மையில் நம்மை நெகிழ வைக்கிறது.

திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட அப்துல் காதர், ஜெய்லானி பீவி தம்பதிக்கு நான்கு மகள்கள் ஒரு மகன். இவரது மகன் அம்ருதீன் ஷேக் தாவூதிற்குப் பதினொரு வயது இருக்கும் பொழுது அவரது தந்தை உயிரிழந்துள்ளார். இதனையடுத்து ஜெய்லானி பீவி தனது மகன், மகள்கள் ஆகியோரை நன்கு படிக்க வைத்துக் கரை சேர்த்துள்ளார்.

இதில் அம்ருதீன் ஷேக் தாவுது பி.ஏ. முடித்துவிட்டு தற்போது சென்னையில் தொழிலதிபராக இருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு தனது 72 வது வயதில் ஜெய்லானி பீவி உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். தாய் உயிரிழந்த நாள் முதல் அம்ருதீன் தாயின் நினைவலைகளால் தத்தளித்து வந்த நிலையில் இறந்த தனது தாய்க்குத் தாஜ்மஹால் வடிவில் நினைவு இல்லத்தைக் கட்ட வேண்டும் என்று முடிவெடுத்த இவர் இராஜஸ்தானில் இருந்து பளிங்கு கற்கள், தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு இங்கு உள்ள தொழிலாளர்களுடன் இணைந்து கடந்த இரண்டு ஆண்டுகளில் தாஜ்மஹால் வடிவில் ஒரு நினைவு இல்லத்தைக் கட்டியுள்ளார்.

ஓர் உறவின் இழப்பைப் பல உறவுகள் சேர்ந்தால்தான்
சரிசெய்ய முடியும். ஆனால்,
தாயின் இழப்பை யாராலும் ஈடுசெய்ய இயலாது.