அமேசான் காடுகளில் பழங்குடி இனத்தைக் காக்கும் போராட்டம்! | Veritas Tamil

காட்டின் சகோதரர்கள்'

அமேசான் காடுகளில் பழங்குடி இனத்தைக் காக்கும் போராட்டம்!

அமேசான், அக். 28: அமேசான் மழைக்காடுகளில் கிராம, நகர,உலகம் சார்ந்த சமூகத்துடன் தொடர்பில்லாமல் வாழும் ஒரு பழங்குடி இனத்தைக் காப்பாற்றும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. சட்டவிரோதமாகக் காடுகளை அழித்து மரங்களை வெட்டுவதும் சுரங்கத் தொழில்களும் இவர்களின் வாழ்வாதாரத்தை ஆபத்துக்குள்ளாக்கி இருக்கிறது என்ற செய்திகள் வெளியாகி இருக்கிறது.

தென் அமெரிக்காவின் அமேசான் மழைக்காடு உலகின் மிகப்பெரும் உயிரியல் வளமிக்க பகுதியாகும். அந்தக் காடுகளில் இன்னும் சில பழங்குடி இனங்கள் நவீன அறிவியல் உலகிலிருந்து முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டு வாழ்கின்றன. இவர்கள் "காட்டின் சகோதரர்கள்" என அழைக்கப்படுகின்றனர்.

அண்மைக்காலங்களில் காடுகளை அழித்தல், தங்கச் சுரங்கத் தொழில்கள், சட்டவிரோத வேட்டைகள் ஆகியவை இந்த இன மக்களின் வாழ்வு நிலையைக் கேள்விக்குறியாக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படிப் பல காரணங்களால் இவர்கள் வாழும் இடங்கள் அழிந்து வருவதாகவும், காடுகளைச் சார்ந்து உயிர்வாழும் அவர்களின் வாழ்வுநிலை குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனால், அங்குள்ள சில அரசு அமைப்புகள் மற்றும் உலகளாவிய மனித உரிமை அமைப்புகள் இணைந்து, இப்பழங்குடி இனங்களைப் பாதுகாக்க முயற்சி செய்து வருகின்றனர். அதேநேரம், அவர்களுடன் நேரடி தொடர்பு கொள்ளாமல், அவர்களின் நிலப்பரப்பை வெளிநாட்டு நுழைவுகளிலிருந்து பாதுகாப்பதே முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.

"காட்டின் சகோதரர்கள்" என அழைக்கப்படும் இந்தப் பழங்குடி இனத்தைக் காக்கும் முயற்சி உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இது, மனிதனும் இயற்கையும் இணைந்து வாழும் முக்கியத்துவத்தை மீண்டும் நினைவூட்டும் ஓர் உணர்வுப்பூர்வமான செயலாகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்