இறைவனைக் காண்போம் இயற்கையில் …. | அருட்சகோதரி ஜான்சி FBS | Veritas Tamil

நாம் ஒவ்வொருவரும் இறைவன் படைத்த படைப்புக்கள் அனைத்தின்மீதும் அன்பு செலுத்தி, அக்கறை கொண்டு வாழ வேண்டும் என்பதுதான் இறைவனின் விருப்பம். தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்வதே பற்றற்றநிலை. இதையே புத்தர் நான் என்னும் எண்ணம் விடுத்து நாம் என்னும் எண்ணத்தில் வாழ்வதே உண்மையான பற்று என்கிறார். ஏராளமான பொன்னிருந்தும், பொருளிருந்தும் எல்லாம் இழந்து இறைவனின் படைப்புகள் மீது தணியாத தாகம் கொண்டு, இயற்கையை தன் காதலியாக பாவித்துக் கொண்டு, இறைவனை முகமுகமாய் தரிசித்தவர் புனித அசிசி பிரான்சிஸ். நாமும் இயற்கையை நேசித்து வாழ்ந்தால் இறையாற்றல் நம்மில் வலுவானதாகவும், அவரது தோற்றம் மிகவும் அழகானதாகவும், அவரது அன்பு மென்மையானதாகவும், அவரது தாராளம் அளவு கடந்ததாகவும், அவரது இரக்கம் இதமானதாகவும் இருக்கும் என்பதை மனதில் பதிப்போம்.
நிரந்தரமான இறைவனில் நிலையாய் நிலைத்து நிற்பது இயற்கை மட்டுமே என்ற தாரக மந்திரத்தை புனித அசிசி பிரான்சிஸ் உள்ளொளியாக பெற்றதால்தான் இயற்கையின் அழகில் இறைவனை கண்டுகொண்டார். பொறுமையை இயற்கையிடம் இருந்தே கற்றுக்கொண்டார். இன்று உதித்த சூரியன் நாளையும் அதே திசையில் உதிக்கும். அதற்கு அந்த சூரியன் விலை கேட்பதில்லை. அதுபோல தான் இயற்கையும் நம்மிடம் எதையும் எதிர்பார்த்து நமக்கு கொடுப்பது இல்லை. இயற்கையில் காணப்படும் பொறுமை நம் மனித மனங்களில் மலர்ந்தாலே போதும். நமது மதிப்பீடுகள் இயேசுவின் மதிப்பீடுகளை பிரதிபலிக்கும் என்பதில் ஐயமில்லை.
ஒரு முதியவர் மலையின் உச்சியில் அதன் இனிமையை இரசிப்பதற்காகச் சென்றார். கீழே பள்ளத்தாக்கில் பலத்த புயல் வீசியது. அங்குள்ள மக்கள் தங்களுக்கு ஏதாவது நேரிடுமோ என்று நினைத்து ஓடி ஒளிந்தார்கள். கடவுளே, இந்தச் சீற்றத்தை நிறுத்து! என்று கதறினார்கள். ஆனால், முதியவர் மட்டும் எந்த அசைவும் இல்லாமல் அப்படியே அமர்ந்து அதன் தனிமையை இரசித்துக் கொண்டிருந்தார். அவர் காலடியில் இருந்த பாறைகள் உறுதியாய் நின்றன. புயல் அவரைச் சுழற்றிக் கடந்து சென்றது. புயல் ஓய்ந்தபோது, சூரியன் உதித்தது. வானம் மீண்டும் நீலமானது. முதியவர் மெதுவாக, புயல் என்பது இயற்கையின் சத்தம், மௌனம் அதன் உண்மை, பயம் கடந்து, அமைதியாய் இருப்பவர்களுக்கு மட்டுமே உச்சியில் உள்ள தெளிவு தெரியும் என்றார். அவர் கண்களை மூடினார். அவர் காலடியில் இப்போது உலகம் அமைதியாய் உறங்கிக்கொண்டிருந்தது. நாம் எதையும் இடையூறாக நினைக்கவில்லையென்றால் எதுவும் நமக்கு இடையூறாக இருக்காது. எனவே நாமும் எதையும் இடையூறாக நினைக்காமல் இறைவனின் அனைத்து படைப்புக்களையும் அன்பு செய்து வாழும் மனதை நமதாக்குவோம். அதுவே நம் வாழ்விற்கு வசந்தத்தை கொடுக்கும்.
எழுத்து
அருட்சகோதரி ஜான்சி FBS
Daily Program
