''இறைவா உமக்கே புகழ்" திருத்தூது மடல்: 10-ஆம் ஆண்டு நினைவுக் கொண்டாட்டம்! | Veritas Tamil
''இறைவா உமக்கே புகழ்" திருத்தூது மடல்: 10-ஆம் ஆண்டு நினைவுக் கொண்டாட்டம்!
சென்னை, ஆவடி, நவ. 14: ஆவடி, பருத்திப்பட்டு புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தில் மேனாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் எழுதப்பட்ட "இறைவா உமக்கே புகழ்" என்ற இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பற்றிய திருத்தூது மடல் வெளிவந்து 10 ஆண்டுகள் நிறைவின் நினைவாக மரக்கன்று நடும்விழா மற்றும் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
நம் பொதுவான இல்லமாகிய பூமிக்கோளத்தைப் பராமரித்தல் பற்றி, 2015-ஆம் ஆண்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தாம் வெளியிட்ட, "இறைவா உமக்கே புகழ்" எனும் திருமடல் வழியாகச் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவேண்டும் என்ற ஆவலை வெளிப்படுத்தினார். அதன் 10-ஆம் ஆண்டின் நிறைவை முன்னிட்டு சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தின் சார்பாக, பல இடங்களில் இயற்கை சார்ந்த நிகழ்வுகள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக, ஆவடி பருத்திப்பட்டு புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தில் அருள்தந்தை ரீகன் மனுவேல்ராஜ் தலைமையில் நடைபெற்ற மருத்துவ முகாம் மற்றும் மரக்கன்று நடும் விழாவில் பலரும் பங்கேற்றுப் பயன்பெற்றனர்.
'இயற்கையைப் பாதுகாப்போம்' என்பதை உணர்த்தும் விதமாக, பங்குத்தந்தை, மறைக்கல்வி மாணவ மாணவியர், திருத்தொண்டர், அருள்சகோதரர், இளைஞர், மறைக்கல்வி ஆசிரியர்கள் அனைவரும் இயற்கைப் பாதுகாப்பு குறித்த வாசகங்கள் எழுதப்பட்டிருந்த பதாகைகளை உயர்த்திப் பிடித்தவண்ணம் நிகழ்வில் பங்கேற்றனர். இந்நிகழ்வு இயற்கையைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்தும்விதமாக அமைந்திருந்தது.