அன்னை மரியாவின் இருதயம் – இறை அன்பின் பிரதிபலிப்பு! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
தூய கன்னி மரியாவின் மாசற்ற இதயம் -நினைவு
1 அரசர் 19: 19-21
லூக்கா 2: 41-51
அன்னை மரியாவின் இருதயம் – இறை அன்பின் பிரதிபலிப்பு!
முதல் வாசகம்.
இறைவனின் கட்டளையின்படி எலியா, சாபாற்றின் மகனான எலிசாவைச் சந்தித்து, தன் மேலங்கியை அவன்மேல் போடுகிறார். இதன் மூலம் எலிசா இறைவனால் இறைவாக்குப் பணிக்காக அழைக்கப்படுகிறார். எலிசா உடனே தன் எருதுகளையும் உழவுத் தொழிலையும் விட்டுவிட்டு, பெற்றோரிடம் விடைபெற அனுமதி கேட்கிறார். பின்னர் தன் எருதுகளை அறுத்து, உழவுக் கருவிகளை எரிபொருளாகப் பயன்படுத்தி விருந்து அளித்து, அனைத்தையும் விட்டுவிட்டு எலியாவைப் பின்தொடர்ந்து அவரது பணியாளராகச் சேவை செய்கிறார் என்று முதல் வாசகத்தில் அறிகிறோம்.
நற்செய்தி
இன்று தூய கன்னி மரியாவின் மாசற்ற இதயத்திற்கான நினைவு என்பதால் லூக்கா நற்செய்தியிலிருந்து சிறப்பு வாசகம் தரப்பட்டுள்ளது.
இயேசுவின் பெற்றோரான மரியாவும் யோசேப்பும் ஆண்டுதோறும் பாஸ்கா விழாவிற்காக எருசலேமுக்குச் செல்வார்கள். இயேசுவுக்கு பன்னிரண்டு வயதாகியபோது, விழா முடிந்து அவர்கள் வீடு திரும்பும்போது இயேசு எருசலேமிலேயே தங்கிவிட்டார். மூன்று நாட்கள் தேடிய பிறகு, ஆலயத்தில் மறைநூல் அறிஞர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த அவரைக் கண்டனர். அவருடைய ஞானத்தைக் கண்டு அனைவரும் வியந்தனர்.
மரியா சிறுவன் இயேசுவை நோக்கி, ‘ஏன் இவ்வாறு செய்தாய்?’ என்று கேட்டபோது, “நான் என் தந்தையின் பணிகளில் இருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?” என்று இயேசு பதிலளித்தார். பின்னர் அவர் பெற்றோருடன் நாசரேத்துக்குத் திரும்பிச் சென்று அவர்களுக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்தார். மரியா இச்சம்பவங்களையெல்லாம் தன் இதயத்தில் வைத்துக் கொண்டார் என்று நற்செய்தியளார் லூக்கா குறிப்பிடுகிறார்.
சிந்தனைக்கு.
இன்றைய நற்செய்தியைக் கூர்ந்து கவனித்தால், இயேசு தாம் ஏற்றுள்ள பணியை உணர்ந்திருந்தாலும், குடும்ப வாழ்வில் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்தார் என்பது தெளிவாகிறது. கடவுளின் திருவுளத்தைத் தேடுவதும், கீழ்ப்படிதலும், ஞானத்தில் வளர்வதும் நமக்கு முக்கியமானவை என்பதை இப்பகுதி எடுத்துக்காட்டுகிறது.
முதல் வாசகத்தில் எலிசாவிற்கான இறை அழைப்பை வாசித்தோம். இறைவனின் அழைப்பை ஏற்றுக்கொள்வது முழுமையான அர்ப்பணிப்பையும் பழைய வாழ்க்கையை விட்டுவிட்டு நம்பிக்கையோடு அழைப்புக்கேற்ற வாழ்வுக்கான அரப்பணிப்பையும் உணர்ந்துகிறது. எலிசா நமது நம்பிக்கை வாழ்வுக்கு சிறந்த எடுத்துக்கட்டாக தரப்பட்டுள்ளார்.
இன்று நாம் அன்னை மரியாவின் மாசற்ற இருதயத்தின் நினைவு விழாவைக் கொண்டாடுகிறோம். மரியாவின் இருதயம் என்பது இறைவன் மீது முழுமையான அன்பும், நம்பிக்கையும், கீழ்ப்படிதலும் நிறைந்த இருதயமாகும். அது முற்றிலும் மாசற்றது.
இன்றைய நற்செய்தியில் புனித லூக்கா, “இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் மரியா தம் இதயத்தில் வைத்துச் சிந்தித்துக் கொண்டிருந்தார்” (லூக்கா 2:19) என்று குறிப்பிடுகிறார். மரியா இறைவனின் வார்த்தையை வெறுமனே கேட்டவர் அல்ல; அதை தனது இதயத்தில் ஏற்று வாழ்ந்தவர். மகிழ்ச்சியிலும் துன்பத்திலும், புகழிலும் அவமானத்திலும், சிலுவையின் அடியிலும் அவர் இறைவனின் விருப்பத்திற்கு அடிபணிந்தார்.
மரியாவின் மாசற்ற இருதயம் நமக்கு மூன்று பாடங்களை கற்பிக்கிறது:
1. இறைவனின் வார்த்தையை இதயத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
2. எல்லா சூழ்நிலைகளிலும் இறைவனை நம்ப வேண்டும்.
3. அன்பும் இரக்கமும் நிறைந்த இதயத்துடன் பிறருக்கு சேவை செய்ய வேண்டும் என்பனவற்றை நம் இதயத்தில் பதிப்போம். அவருடைய பரிந்துரை நமது நம்பிக்கை வாழ்வுக்கு என்றும் துணைபுரியும்.
இறைவேண்டல்.
அன்னை மரியாவின் மாசற்ற இருதயமே, எங்கள் இதயங்களை எங்கள் ஆண்டவர் இயேசுவின் இருதயத்தோடு இணைத்து, இறைவனின் திருவுளப்படி வாழ துணைபுரிவீராக. ஆமென்.
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452