சகோதர அன்பே இறையாட்சியின் அடையாளம்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
புனித பர்னபா - திருத்தூதர் நினைவு
திருத்தூதர் பணிகள் 11: 21b-26; 13: 1-3
மத்தேயு 5: 20-26
சகோதர அன்பே இறையாட்சியின் அடையாளம்!
இன்றை நாளை திருஅவை திருத்தூதர் பர்னபாவின் நினைவு நாளாகக் கொண்டாடுகிறது. பர்னபாவின் இயற்பெயர் யேசேப்பு என் அறிகிறோம். இவர் இயேசுவின் சீடர்களுள் (திருத்தூதர் அல்ல) ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது திருத்தூதர் பணிகள் 4:36இன் இவர் சைப்பிரசில் வாழ்ந்த யூதராவார். திருத்தூதர் பணிகள் 14:14 இவரையும் ஒரு திருத்தூதர் எனக்குறிக்கின்றது. இவரும் பவுலும் திருத்தூது பயணங்கள் மேற்கொண்டு யூத கிறித்தவர்களிடம் புறவினத்தாரான கிறித்தவர்களுக்காக பரிந்து பேசினர். இவர்கள் இருவரும் எருசலேம் சங்கத்தில் கலந்து கொண்டனர். பர்னபா மற்றும் பவுல் அனத்தோலியாவில் தொழுகைக் கூடங்களுக்கு வந்திருந்த புறிவினத்தார் பலரை மனந்திருப்பினர். இவர் கி,பி. 61-ல் சைப்பிரசில் இறந்தார் என்பது வரலாறு.
முதல் வாசகம்
இந்தப் பகுதியில், ஆண்டவரின் வல்லமையால் அந்தியோக்கியாவில் பலர் நம்பிக்கைக்கு வந்து இறைவனை ஏற்றுக்கொள்கிறார்கள். இதைக் கேள்விப்பட்ட எருசலேம் திருஅவை பர்னபாவை அங்கு அனுப்புகிறது. அவர் அங்குள்ள இறையருளின் செயல்களைக் கண்டு மகிழ்ந்து, அனைவரும் உறுதியான நம்பிக்கையுடன் ஆண்டவரில் நிலைத்திருக்க ஊக்குவிக்கிறார்.
பின்னர் பர்னபா, சவுல்வைத் தேடி தர்சுவிற்குச் சென்று, அவரை அந்தியோக்கியாவிற்கு அழைத்து வருகிறார். இருவரும் ஓராண்டு காலம் திருஅவையினருடன் இருந்து மக்களுக்கு போதிக்கிறார்கள். அங்கேயே இயேசுவின் சீடர்கள் முதன்முறையாக “கிறிஸ்தவர்கள்” என்று அழைக்கப்படுகிறார்கள்.
அதன்பின் அந்தியோக்கியா திருஅவையில் நோன்பும் இறைவேண்டலும் நடைபெறும்போது, தூய ஆவி பர்னபாவையும் சவுலையும் தனிப்பட்ட பணிக்காகத் தேர்ந்தெடுக்குமாறு அறிவுறுத்துகிறார். இறைமக்கள் நோன்பிருந்து இறைவேண்டல் வாயிலாக அவர்கள்மேல் கைகளை வைத்து, இறைபணிக்காக அனுப்பி வைத்தார்கள் என்று லூக்கா குறிப்பிடுகிறார்,
நற்செய்தி.
நேற்றைய தொடர்ச்சியான இன்றைய நற்செய்தியில், இயேசு, பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் கடைப்பிடித்த வெளிப்புற நீதியை விட உயர்ந்த நீதியைத் தமது சீடர்களிடம் எதிர்பார்க்கிறார். வெறும் சட்டத்தைப் பின்பற்றுவது மட்டுமல்ல, இதயத்தின் தூய்மையும் அன்பும் முக்கியம் என்பதை வலியுறுத்துகிறார்.
இங்கே, இயேசு, ஒருவர்மீது கோபம் கொள்வதும், அவமதிக்கும் வார்த்தைகளைப் பேசுவதும் கூடாது என்று விவரிக்கிறார். எனவே, இறைவனுக்கு காணிக்கை செலுத்துவதற்கு முன் சகோதரருடன் உள்ள பிணக்குகளைச் சமரசப்படுத்த வேண்டும் என்று போதிக்கிறார்.
மேலும், எதிரியுடன் வழக்கில் இருக்கும்போது நீதிமன்றத் தீர்ப்புக்காகக் காத்திருக்காமல் உடனடியாக சமாதானம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறார். இதன் மூலம் மன்னிப்பு, ஒற்றுமை, நல்லுறவு ஆகியவை இறையாட்சியின் முக்கிய பண்புகள் என்பதை இயேசு எடுத்துக்காட்டுகிறார்.
சிந்தனைக்கு.
திருஅவையானது கடந்த ஈராயிரம் ஆண்டுகளாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பல போராட்டங்களுக்கிடையில் வளர்ந்து வருகிறது. இந்த வளர்ச்சியானது, இறைவனின் அருளாலும் நம்பிக்கையாளர்கள் ஒருவரை ஒருவர் ஊக்குவித்து ஒன்றித்திருப்பதாலும் இந்த வளர்ச்சி சாத்தியமாகிறது.
இன்றைய நற்செய்தியில் இயேசு, “தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கின்றவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்...” என்றதோடு, விரோத உள்ளத்தோடு செலுத்தப்படும் காணிக்கைகளை கடவுள் ஏற்பதில்லை என்று தெளிவாகச் சொல்கின்றார்.
முற்காலத்தில் கொலை செய்வது தண்டனைக்குரிய குற்றமாகப் பார்க்கப்பட்டது. இயேசுவோ கொலை செய்வது மட்டுமல்ல, சினம் கொள்வதும் பெரிய குற்றம்தான் என்கிறார். அன்றாட வாழ்க்கை அனுபவத்தில் நாம் பிறரோடு நல்லுறவோடு வாழ்வது கடினம்தான். ஆனாலும், மனம் அரிநுதால் மார்க்கம் உண்டு என்பதுபோல தூய ஆவியாரின் துணை கொண்டு நல்லுறவோடு நம்மால் வாழ முடியும். முயற்சி தேவை.
இன்றைய முதல் வாசகத்தில் பவுல், “ஆண்டவரின் ஆவியார் இருக்கும் இடத்தில் விடுதலை உண்டு” என்கிறார். தூய ஆவியாரால் நமக்கு விடுதலை அளிக்க முடியும்போது, நல்லுறவோடு வாழ்வதற்கும் ஆற்றல் அளிக்க முடியும். அனைவரோடும் ஒன்றிப்பது நமது தலையாயக் கடமை. நாம் பிரிந்து இருக்க வேண்டும் என்பதல்ல, இணைந்து இருக்க வேண்டும் என்பதே கடவுளின் விருப்பம். மதியாதார் தலைவாசல் மிதியாதே என்பது இறைமக்களுக்கு ஏற்ற ஒன்றல்ல. திருப்பலியில் நமது காணிக்கை ஏற்கப்பட வேண்டமாயின், மன்னிப்பும் அரவணைப்பும் இன்றியமையாதவை,
2026-ல் இந்த வாசிப்புகள் நமது வாழ்க்கைக்கு எவ்வாறு பொருந்தும்? எனும் கேள்வி தோன்றலாம். பர்னபாஸைப் போலவே, நாமும் நமது சொந்தக் குடும்பங்களிலும் பணியிடங்களிலும் "ஊக்கமளிக்கும் மகன்களாகவும் மகள்களாகவும்" இருக்க அழைக்கப்படுகிறோம். இறையருள் என்பது பதுக்கி வைக்கப்படவோ அல்லது சம்பாதிக்கப்படவோ வேண்டிய ஒரு பொருள் அல்ல; அது நமது வார்த்தைகள், பொறுமை மற்றும் இரக்கம் ஆகியவற்றின் மூலம் வெளிப்பட வேண்டிய ஒரு கொடை என்பதை மனதில்கொண்டு உறவுக்குப் பாலம் அமைப்போம்.
இறைவேண்டல.
ஆண்டவராகிய இயேசுவே, உம்மை வழிபடுவதற்கு முன் சகோதரர் சகோதரிகளோடு ஒற்றுமையுடன் வாழ அன்பு, மன்னிப்பு, நல்லிணக்கம் ஆகியவற்றில் நாள்தோறும் என்னை வளரச் செய்து, உமது நீதியின் பாதையில் என்னை தேற்றுவீராக. ஆமென்.
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452