அவர் சொல்லால் நாம் நலம் பெறுவோம்!| ஆர்.கே. சாமி | VeritasTamil

பொதுக்காலம் முதல் வாரம் –சனி
எபிரேயர்  4: 12-16                                                                                  
மாற்கு 2: 13-17 
 


 அவர் சொல்லால் நாம் நலம் பெறுவோம்!

முதல் வாசகம்


 எபிரேயருக்கு எழுதிய கடிதம், கடவுளின் வார்த்தையை ஆழமாகவும், துல்லியமாகவும், எலும்பு வரை வெட்டக்கூடிய கூர்மையான வாளாகவும் சுட்டிக்காட்டுகிறது. கடவிளின் வார்த்தையின் தன்மையை நாம் அறிய வருகிறோம்.   இங்கே ஆறு தன்மைகள் குறிக்கப்பட்டுள்ளது. கடவுளின் வார்த்தையானது:

1.    உயிருள்ளது
2.    ஆற்றல் உள்ளது
3.    இரு பக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது.
4.    ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுவக்கூடியது.
5.    எலும்பு மூட்டையும் மச்சையையும் ஊடுருவ வல்லது.
6.    உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்க வல்லது.

கசாப்புக் கடைக்காரனின் கத்தியோ பயனற்றதை எளிதில் அறுத்து நீக்கி விட்டு, சிறந்ததை மட்டும் விட்டுவிடும். அதிபோலவே,   கடவுளின் வார்த்தை மக்களின் வாழ்விலும் அதையே தீயதை நீக்கி நல்லதை நிலை நாட்டும் தன்மையுடையது. 

மேலும், இன்றைய வாசகத்தில் மற்றொரு செய்தியும் நமக்குத் தரப்பட்டுள்ளது. ஆம், படைப்பு எதுவும் கடவுளுடைய பார்வைக்கு மறைவாய் இபதில்லை.  அவருடைய கண்களுக்கு முன் அனைத்தும் மறைவின்றி வெளிப்படையாய் இருக்கின்றன என்பதால்,  கடவுள் ஒவ்வொருவரின் இதயத்தையும் பகுத்தறிந்து தெளிவாக அறிந்திருக்கிறார்.  யாராலும் கடவுளை ஏமாற்ற முடியாது.


நற்செய்தி.


நற்செய்தியில் இயேசுவை மீண்டும் கலிலேயா கடலோரப் பகுதியில் காண்கிறோம்.  இயேசுவின் வார்த்தைகளைக்  கேட்கவும் அவரைப் பார்க்கவும் எல்லாவிதமான மக்களும் கூடுகிறார்கள்.  பின்னர், இயேசு கடலோரம் பயணத்தைத் தொடரும்போது,  அல்பேயுவின் மகன் லேவி சுங்கச் சாவடியில் அமர்ந்திருந்ததைக் கண்டார்; அவரிடம், “என்னைப் பின்பற்றி வா” என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார் என்று மாற்கு குறிப்பிடுகிறார்.

 இவரே பின்னர் மத்தேயு என அடையாளம் காண்கிறோம். பின்பு அவருடைய வீட்டில் பந்தி அமர்ந்திருந்தபோது வரிதண்டுபவர்கள், பாவிகள் ஆகிய பலர் இயேசுவோடும் அவருடைய சீடரோடும் விருந்துண்டனர். இக்காட்சியைக் கண்ட  பரிசேயரைச் சார்ந்த மறைநூல் அறிஞர்கள் இயேசுவின் புதிய  சீடரிடம், “இவர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பதேன்?” என்று கேட்கவே,  இயேசு அவர்களுக்கான பதிலாக, “நோயற்றவருக்கு அல்ல, நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை. நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்” என்றார்.


சிந்தனைக்கு.

  இன்றைய மாற்கு நற்செய்தியில் லேவியின் இந்த அழைப்பைப் பற்றி அதிகம் கூறப்படவில்லை, இது மத்தேயுவின் நற்செய்தியிலும் (மத்தேயு 9:9) பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்தேயு என்றும் அழைக்கப்படும் லெவி, தனது சுங்கச் சாவடியில் வரி வசூலிக்கும் தொழிலைச் செய்து கொண்டிருந்த வேலை அழைக்கப்பட்டார். இந்த முதல் சீடர்களை இயேசு அழைக்கும் போது, அவர்கள் அனைவரும் வெறுமனே, வெட்டியாய் ஊர் சுற்றிக்கொண்டிருக்கவில்லை. வாழ்வாதாரத்திற்கு ஏதோ ஒரு தொழிலைச் செய்துகொண்டிருந்தார்கள். அங்கே அவர்களுக்கென்று வருமானத்திற்கு தொழில் இருந்தது. அவற்றை விட்டு இயேசுவைப் பின்தொடர்ந்தனர். அவர்கள் பாவிகளாக இருந்திருக்கலாம். இயேசுவை ஏற்ற மாத்திரத்தில் அவர்கள் வாழ்வில் மாற்றம் ஏற்பட்டது.

  மத்தேயு இயேசுவைப் பின்செல்ல கடவுளின் அருளே காரணமாக இருந்திருக்க வேண்டும். இயேசுவின் வார்த்தை அவரது  ஆன்மாவில்  "சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட தெளிவை" உருவாக்கி இருக்கக்கூடும்.  எனவே, மத்தேயு தனது முந்தைய வாழ்க்கையை கைவிட்டு இந்த புதிய வாழ்க்கையை தழுவிக்கொள்ள கடவுள் தன்னை அழைக்கிறார் என்பதை உணர்ந்தார்.  அவர், நீண்ட நேரம் இயேசுவோடு விவாதித்தார்  என்ற குறிப்புகள்  இல்லை. அவர் பின் விளைவுகளைப் பற்றி கணக்குப் போடவில்லை. 

இங்கே மற்றொரு விடயத்தையும் நாம் சிந்திக்க வேண்டும்? ஏன் மத்தேயுவை கடவுள் அழைக்க வேண்டும். வரி வசூலிப்பவர் உரோமையர்களின் பணியாள்கள். இவர்கள் மக்களின் வெறுப்புக்குள்ளானவர்கள். இவர்களை மக்கள் பாவிகளாவும் விமர்சித்தனர். எனவே, இத்தொழிலை விட்டு விலக வேண்டும் என்றும் மத்தேயு  தனக்குள் நினைத்து சஞ்சலத்துக்குள்ளாகி இருக்கலாம்.   இத்தருணத்தில்,  கடவுள் இவருக்கு அமைதி அளிக்கவும் விடுவிக்கவும் அழைத்திருக்கலாம். முதல் வாசகத்தில் வாசித்ததைப்போல், இயேசுவின் ‘“என்னைப் பின்பற்றி வா” என்ற வார்த்தை துல்லியமாகவும், எலும்பு வரை வெட்டக்கூடிய கூர்மையான வாளாகவும் மத்தேயுவில் ஊடுருவியது போலும். 

 “கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல” (லூக்கா 9:62) என்பதற்கு ஏற்ப மத்தேயு இயேசுவில் இணைந்தார், பின்னர் பெரும் சாட்சியாக நற்செய்தியும் எழுதினார்.

இறைவார்த்தையை கேட்டு கொண்டிருக்கும்  நாம் அனைவரும் சீடத்துவத்தை எப்படிப் பார்க்கிறோம்?  எத்தகைய மாற்றத்தை இறைவார்த்தை நம்மில் ஏற்படுத்துகிறது? அந்த பரிசேயர்களைப்போல் இன்னும் பிறரை குறைக்கூறக்கொண்டே வாழ்கிறோமா?  

இறைவேண்டல்.

 இரக்கத்தின் ஆண்டவரே, எனது பாவத்தைப் பணிவாகவும் நேர்மையாகவும் ஒப்புக்கொண்டு, உமது மன்னிப்பையும் இரக்கத்தையும்  பெற எனக்கு உதவுவீராக. ஆமென்.  


 


ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452