மகிழ்வோம் மீட்பரை நினைத்து! | அருட்பணி.குழந்தை இயேசு பாபு | Veritas Tamil

திருவருகை காலம்-மூன்றாம் வாரம் ஞாயிறு மறையுரை 14.12.2025
மு.வா: எசா: 35: 1-6,10
ப.பா: திபா 146: 7. 8. 9-10
இ.வா: யாக்: 5: 7-10
ந.வா: மத்: 11: 2-11

 மகிழ்வோம் மீட்பரை நினைத்து! 

இன்று திருவருகைக்காலத்தின் மூன்றாம் வாரம். இதனை மகிழ்வின் வாரமாக நாம் சிறப்பு செய்கிறோம். மகிழ்ச்சி என்பது தூய ஆவியாரின் கனிகளில் ஒன்று. இந்த மகிழ்ச்சியின் பிறப்பிடம் எது? நம் ஆண்டவரே!

உலகத்தை பொறுத்தவரை மகிழ்ச்சி என்பது நல்ல உடல் நலம், தேவையான செல்வம், சொந்தமான வீடு, நல்ல வேலை, நல்ல நண்பர்கள் போன்றவைகளே.அது ஒருவிதத்தில் ஏற்றுக்கொள்ளத்தக்தும் தான்.  இவற்றுள் சில நிரந்தரமாக அமையலாம். பல தற்காலிகமானதாக இருக்கலாம். அவை நிரந்தரமாக இருந்தாலும் தற்காலிகமாக இருந்தாலும் அவற்றால் நாம் அனுபவிக்க கூடிய மகிழ்ச்சியோ குறுகிய காலமே.  ஏனென்றால் இவை அனைத்தும் கடவுள் தரும் ஆசீர்வாதங்கள் என்பதை நாம் ல நேரங்களில் மறக்கிறோம்.  

ஆம் உண்மையான மகிழ்ச்சியின் பிறப்பிடம் கடவுளே. இன்றைய வாசகங்கள் அனைத்தையும் நாம் கவனமாக வாசித்து தியானித்தால் அந்த உண்மை நமக்கு புலப்படும்.

முதல் வாசகம் ஆனது ஆண்டவர் பழிவாங்க வருகிறார் எனவும் மக்கள் மகிழவேண்டும் எனவும் கூறுகிறது. தளர்ச்சியுற்ற மனங்கள் தேற்றப்படுமாறு வார்த்தைகள் உள்ளன. ஆண்டவர் யாரை பழிவாங்க வருகிறார்?  இஸ்ரயேல் மக்களை அடிமைப்படுத்திய பாவ வாழ்வைத்தான் அன்றோ!

இரண்டாம் வாசகத்தில் யாக்கோபு ஆண்டவருக்காக பொறுமையுடன் காத்திருக்குமாறு அறிவுறுத்துகிறார். பொறுமையோடு ஆண்டவருக்காக காத்திருக்கும் போது ஒருவர் மற்றவரின் துன்பங்களைத் தாங்கி  பிறரை உறுப்படுத்த வேண்டுமென்ற அறைகூவல் அனைவரும் ஒன்றாக மகிழ்ச்சியோடு வாழ ஒவ்வொருவரும் கொடுக்கவேண்டிய முக்கிய பங்களிப்பாக இருக்கிறது. 

நற்செய்தி வாசகத்திலே மெசியாவின் வருகையை உறுதிப்படுத்திக் கொள்ள திருமுழுக்கு யோவான் தன் சீடர்களை அனுப்பிய போது இயேசு பார்வையற்றோர் பார்ப்பதையும் நோயற்றவர் நலமடைந்ததையும் ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுவதையும் பலர் விடுதலை வாழ்வு பெறுவதையும் அடையாளமாக கூறி தன்னுடைய வருகை அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது என்பதை தெள்ளத் தெளிவாக விளக்குகிறார்.

எனவே இந்த மகிழ்ச்சியின் வாரத்தில் உண்மையான மகிழ்ச்சி என்பது என்ன என்பதை நாம் ஆழமாக உணர வேண்டும். பாவ அடிமைத்தனத்திலிருந்து பெறும் விடுதலையும், கடவுள் நம்மோடு இருக்கிறார் என்ற  நம்பிக்கையும் ,ஒருவரை ஒருவர் தேற்றி ஆறுதல் படுத்தி அன்பு செய்து வாழும் வாழ்வும் நமக்கு நிலையான நிறைவான மகிழ்ச்சியைத் தரும். இத்தகைய மகிழ்ச்சியை பெறத்தான் இத்திருவருகை காலத் தயாரிப்பு  நம்மை அழைக்கிறது . எனவே இந்த மகிழ்ச்சியின் வாரத்தில் கடவுள் நம்மோடு இருக்கிறார் என்பதை உணர்ந்து தற்காலிகமானவற்றை விடுத்து நிரந்தர மகிழ்வைத் தரும் இறைப் பிரசன்னத்தையும் பிறரன்பு செயல்களையும் நமதாக்கிக் கொள்வோம். இயேசு நம் உள்ளத்தில் பிறக்க இன்னும் தீவிரமாய் நம்மைத் தயாரிப்போம்.

 இறைவேண்டல் 
நிலையான நிறைவான மகிழ்வின் ஆதாரமே இறைவா! உண்மையான மகிழ்ச்சியைத் தேடி எங்கள் வாழ்வின் பாதை அமையவும் இயேசுவின் பிறப்புக்காய் இன்னும் அர்த்தமுள்ள விதத்தில் எங்களைத் தயாரிக்கவும் அருள் தாரும் ஆமென்.