கண்டனைக்கு அல்ல, இரக்கத்திற்கே அழைக்கப்பட்டோம்” | ஆர்.கே. சாமி | Veritas Tamil
2 பிப்ரவரி 2026
தவக்காலம் இரண்டாம் வாரம் - திங்கள்
தானியேல் 9: 4b-11a
மத்தேயு 6: 36-38
“கண்டனைக்கு அல்ல, இரக்கத்திற்கே அழைக்கப்பட்டோம்”
முதல் வாசகம்.
இன்றைய முதல் வாசகம், திருவிவிலியத்தில் மன்னிப்புக்கான மிகப்பெரிய கூட்டுப் மன்றாட்டுகளில் ஒன்றாகும். மக்கள் அனைவரும், 'நாங்கள் பாவம் செய்தோம், தவறு செய்தோம், துன்மார்க்கமாக நடந்து கொண்டோம்' என்று உணர்ந்து அறிக்கையிடுகிறார்கள். இப்பகுதியில் எல்லோரும் எப்படி தவறு செய்கிறார்கள் என்பதை நாம் காண்கிறோம், மேலும் தவறு நடந்ததற்கு ஒவ்வொரு நபரும் பொறுப்பேற்றதையும் இங்கே விவரிக்கப்படுகிறது.
“எங்கள் தலைவரும் கடவுளுமாகிய உம்மிடத்தில் இரக்கமும் மன்னிப்பும் உண்டு” என்று சொல்லி மன்னிப்புக் கேட்கின்றார். கடவுளும் அவர்களுடைய குற்றங்களை மன்னித்து, அவர்கள்மீது இரக்கம்கொள்கின்றார்’ என்று வாசிக்கிறோம்.
நற்செய்தி.
நற்செய்தி வாசகத்தில் இயேசு, “உங்கள் விண்ணகத் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாய் இருங்கள்” என்றும், பிறரைப் பார்த்து குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதீர்கள் என்றும், அறிவுறுத்துகிறார்.
பிறரை தீர்ப்பிடுவோர் தீர்ப்புக்கு உள்ளாவார்கள் என்பதோடு, பிறரை மன்னித்தால்தான் நமக்கும் மன்னிப்பு கிடைக்கும் என்றும் எடுத்துரைக்கிறார்.
சிந்தனைக்கு.
கடவுள் உண்மையிலேயே இரக்கமுள்ளவர். ஒவ்வொரு நாளும் கடவுள் நமக்கு மிகச் சிறந்ததைக் கொடுக்க விரும்புகிறர். அதனால்தான் அவர் நம்மை மீட்டு தம் பிள்ளைகளாக்க தம் ஒரே மகனாகிய இயேசு கிறிஸ்துவை உலகிற்கு அனுப்பினார்.
இன்று, நாம் நமது சொந்த மனசாட்சியை அலசிப் பார்க்க அழைக்கப்படுகிறோம், நமது பலவீனங்களையும் பாவங்களையும் ஒப்புக்கொள்ள முன்வர வேண்டும். அதே நேரத்தில் கடவுளின் அசைக்க முடியாத அன்பையும் மீட்பின் வாக்குறுதியையும் நினைவில் கொள்ளவும் நினைவூட்டப்படுகிறோம்.
ஏனெனில், நம் அன்றாட வாழ்க்கை நெருக்கடியில் கடவுளின் இரக்கத்தயும் அவரது மகத்துவத்தையும் பற்றி நாம் நினைத்துப் பார்க்கத் தவறிவிடுகிறோம். இன்றைய இரு வாசகங்களும் நமது தவக்காலப் பயணத்திற்கு மிகவும் பொருத்தமானவையாக உள்ளன. நாம் பாவிகள். தந்தையாம் கடவுளின் இரக்கத்தைப் புறக்கணித்து மனம்போன போக்கில் பிறரை மதிக்காமலும், பிறர் மீது குற்றம் சுமத்தியும், குறைகள் கண்டும் பழகிப்போனவர்கள். ஆகவே, முதல் வாசகத்தில் தானியேலின் இறைவேண்டலில் உள்ளபடி, ‘நாங்கள் பாவம் செய்தோம்; வழி தவறி நடந்தோம்; பொல்லாதவர்களாய் வாழ்ந்து உம்மை எதிர்த்து நின்றோம்; உம் கட்டளைகளையும் நீதி நெறிகளையும் கைவிட்டோம்’ என்று புலம்பி, நம்மை மன்னிக்கும் படிகடவுளிடம் இறைஞ்ச வேண்டும்.
நம் இதயத்தில் இரக்கம் சுரக்க வேண்டும். இயேசு நம்மை இரக்கமுள்ளவர்களாகவும், மன்னிக்கும் சீடர்களாகவும் விளங்க கட்டளையிடுகிறார். எனவே, நம்மில் மலிந்துள்ள போலித்தனத்தை முதலில் கைவிட வேண்டும். அதாவது கடவுளின் மனப்பான்மை நம்முடையதாக மாற வேண்டும். அடுத்து, இயேசு கூறிய "நான் உங்களிடம் அன்பு கூர்ந்தது போல ஒருவரையொருவர் அன்புகூருங்கள்" (யோவான் 15:12) எனும் அமுத வாக்கை நமது வாழ்வாக்க வேண்டும். நாம், எந்த அளவையால் அளக்கிறோமோ அதே அளவையால்தான் நமக்கும் அளக்கப்படும் என்கிறார் ஆண்டவர்.
ஆகவே, இந்த தவக்கால பயணத்தில், நம்மை நாமே கேட்க வேண்டிய மூன்று கேள்விகள்:
• நான் மன்னிக்க வேண்டிய யாராவது இருக்கிறாரா?
• நான் என் வார்த்தைகளிலோ அல்லது எண்ணங்களிலோ கடுமையாக யாரையாவது கடுமையாக விமர்சித்துள்ளேனா?
• நான் என் வாழ்நாளில் இன்னும் இரக்கத்துடன் நடந்துகொள்ள முடியுமா?
நாம் இரக்கம் காட்டும்போது, நம் பரலோகத் தந்தையின் முகத்தைப் பிரதிபலிக்கிறோம். நாம் அன்புடன் கொடுக்கும்போது, நம் வாழ்வில் ஆசீர்வாதங்கள் நிரம்பி வழியும் என்று இயேசு உறுதியளிக்கிறார்.
இந்நேரத்தில், கவிஞர் வாலி அவர்கள் எழுதிய ஒரு பாடலின் நான்கு வரிகள் நினைவுக்கு வருகின்றன.
‘மண்வெட்டி கையிலெடுப்பார் சிலபேர்
மற்றவர்க்குக் குழி பறிப்பார் அது
தன் பக்கம் பார்த்திருக்கும் என்பதைத்
தானறிய மறந்திருப்பார்’.
சிந்தப்போம்.
இறைவேண்டல்.
ஆண்டவரே, இந்த தவக்காலப் பருவத்தில், என் பாவத்தின் இருளை நான் அறிந்துணர என்னை ஊக்கப்படுத்துவீராக. ஆமென்."