குறுகிய வாயில் - மண்ணில் துன்பம் விண்ணில் மகிழ்ச்சி! | ஆர்.கே. சாமி | VeritasTamil

25 ஜூன் 2024  
பொதுக்காலம் 12ஆம் வாரம் - செவ்வாய்
2 அரசர்  19: 9-11, 14-21, 31-35, 36 
மத்தேயு 7: 6, 12-14
 

குறுகிய வாயில் - மண்ணில் துன்பம் விண்ணில் மகிழ்ச்சி!

    
முதல் வாசகம்.

இன்றைய முதல் வாசகத்தை எளிதில் புரிந்துகொள்ள இதில் வரும் கதாப்பாத்திரங்கள் யார், யார் என்று புரிந்துகொள்ள வேண்டும்.

திராக்கா-  எத்தியோப்பிய அரசன்
எசேக்கியா- யூதேயாவின (எருசலேம்) அரசன்
சனகெரிப்- அசீரியாவின் அரசன்

தென்னாடான யூதேயாவின் அரசன் எசேக்கியா கடவுளுக்கு உண்மையான நேர்மையான அரசனாக இருந்தார். ஒரு சமயம்  இவர் பயங்கரமான பிரச்சனையில் சிக்கினார்.  அசீரியாவின் அரசன் சனகெரிப், யூதாவின் அரசனான எசேக்கியாவுக்கு ஒரு கடிதம் (செய்தி) அனுப்பினான். அசீரியர்கள் ஏற்கனவே வடநாட்டைத் தாக்கி அதை முற்றிலுமாக அழித்துவிட்டார்கள். எனவே, அசீரியர்கள் மீது அச்சமிருந்தது. 

அந்தக் கடிதத்தில் அசீரிய மன்னன் யூதேயாவின் உண்மை கடவுளை கேலி செய்தும், நடக்கவிருக்கும் போரில்  யூதேயாவின் ‘யாவே' கடவுள் எசேக்கியா அரசனையும், யூதேயாவையும் கைவிட்டுவிடுவார் காப்பாற்றமாட்டார் எனவே, அவரை நம்ப வேண்டாம்  என்றும்  எழதி இருந்தான். இவ்வாறு எசேக்கியாவை உண்மை கடவுள் வழிபாட்டில் இருந்து திசைத்திருப்ப முற்பட்டான் அசீரிய அரசன் சனகெரிப்.

கடிதத்தைப் படித்த எசேக்கியா  எருசலேம் ஆலயத்தில் அக்கடிதத்தை வைத்து யூதேயாவையும் மக்களையும் காப்பாற்ற வேண்டும் தம் ‘யாவே' கடவுளிடம் உருக்கமாக மன்றாடினார்

அவர் இறைவேண்டல் செய்யும்போது, “ கெருபுகள் மேல் வீற்றிருக்கும் இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவரே! இவ்வுலகத்து அரசுகளுக்கெல்லாம் நீர் ஒருவரே கடவுள்! விண்ணையும் மண்ணையும் படைத்தவர் நீரே! ஆண்டவரே! நீர் செவிசாய்த்துக் கேட்டருளும். ஆண்டவரே! உம் விழிகளைத் திறந்து என்னை நோக்கியருளும். ஆண்டவரே! இப்பொழுது இவன் கையிலிருந்து எங்களைக் காத்தருளும் என்று  இறைஞ்சி வேண்டினார்.

எசேக்கியாவின் மன்றைட்டைக் கேட்ட கடவுள்,  அங்கிருந்த  ஏசாயா இறைவாக்கினர் மூலம்  எசேக்கியாவுக்கு ஒரு செய்தியை அனுப்பினார்.  ‘அசீரிய அரசன் எருசலேமுக்குள் வர மாட்டான். அவனுடைய படைவீரர்களில் ஒருவனும் எருசலேமின் அருகில் கூட வர மாட்டார்கள். நகரத்தின் மீது ஒரு அம்பையும் எய்ய மாட்டார்கள்!’  என் பொருட்டும் என் ஊழியன் தாவீதின் பொருட்டும் நான் இந்த நகரத்தைப் பாதுகாத்து காப்பாற்றுவேன்’ என்பதே அச்செய்தி. 


நற்செய்தி.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு புதியதொரு பொன்விதியைத் தருகின்றார். அதுதான், “பிறர் உங்களுக்கு செய்யவேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்” என்பதாகும். மேலும்  ‘தூய்மையானது எதையும் நாய்களுக்குக் கொடுக்க வேண்டாம் என்றும், உங்கள் முத்துக்களைப் பன்றிகள் முன் எறிய வேண்டாம் என்றும் அறிவுறுத்துகிறார். 
   
மேலும், விண்ணக வாழ்வுக்கு இடுக்கமான வாயிலின் வழியே நுழைய வேண்டும் என்றும்    அகன்ற  வழியைத் தவிர்க்க வேண்டும் என்றும் பிடிப்பிக்கிறார்.  


சிந்தனைக்கு.

“தூய்மையானது எதையும் நாய்களுக்குக் கொடுக்க வேண்டாம் என்றும் முத்துக்களைப் பன்றிகள் முன் எறியவேண்டாம் என்றும் ஆண்டவர் சீடர்களை எச்சரிக்கிறார். கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை என்பார்கள். இப்பழமொழிக்கொப்ப இயேசுவின் இன்றைய போதனை அமைகிறது.  வாழ்வில் தூய்மமையின் அருமைதனை அறிந்தவர்கள்தான் அதனைப் பேணிக்காப்பர்.  மற்றவர் தூய்மை வாழ்வை ஒரு பொருட்டாக எண்ணமாட்டார்கள். அவ்வாறே, நல்ல அறிவுரைகள், பாராட்டுகள், நற்பண்புகள் ஆகியவற்றை  தகுதியற்றவர்களுக்கு வழங்கினால் அதனால் பயன் ஒன்றுமில்லை.  அது விழலுக்குறைத்த நீர் போலாகிவிடும். 
நாம் நமது பொன்னான நேரத்தையும் காலத்தையும் நற்செய்திப் பணிக்குப் பயனுள்ளதாக மாற்ற வேண்டும் என்கிறார் ஆண்டவர். வீணான பேச்சும் செயலும் நமக்கு மன உளைச்சலையும், சலிப்பையும் தரலாம். எனவே, நல்லவற்றை  நல்லோருக்கே வழங்குவோம். முத்து விலையுயர்ந்தது. அதன் மதிப்பு பன்றிகளுக்குத் தெரியாது. ஆம், நற்செய்தி எல்லாருக்கும் நறசெய்தியாகாது.
மேலும், விண்ணக வாழ்வுக்கு இடுக்கமான வாயிலின் வழியே நுழையவும்   அகன்ற ; வழியைத் தவிர்க்கவம் வேண்டும் என்றும் கற்பிக்கிறார் ஆண்டவர். இங்கே, இறையாட்சியில் நுழைவதற்கான வாயில் ''இடுக்கமானது'' என இயேசு குறிப்பிடுகிறார். நமது  பணத்தையும்,  சொத்தையும், செல்வாக்கையும் கொண்டு  விண்ணரசில் இடம் பெற இயலாது என்பது இயேசுவின் அறிவுறுத்தாலகும். 
இடுக்கமான வாயில் வழியே பயணிக்கம்போது, சில வேளைகளில் குனிய வேண்டியிருக்கும். பிறருக்கு வழிவிட்டுக் காத்திருக்க வேண்டியிருக்கும்.   எனவேதான், துன்பங்களின் வழியே மீட்பு சாத்தியம் என்பதை  இயேசு எடுத்துரைக்கிறார். இந்த இடுக்கமான வாயில் வழியே நமக்கு முன்னால், இயேசுவும் அவரைத் தொடர்ந்து ஏராளமான புனிதர்களும், மறைசாட்சிகளும் பயணம் செய்திருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.  அகன்ற பாதையில் பயணிக்கும்போது நமது கவனம் சிதறும் என்பதால் இலக்கு நோக்கிப் பயணிப்பது கடினம்.  அகன்ற வாசல் அலகையின் வாசலாகவும் இருக்கலாம். 
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பாவத்தின் வாழ்க்கையைத் தழுவி "அழிவை" நோக்கிச் செல்வது  அகலமான வாயில் வழியாகச் செல்வோரைக் குறிக்கிறது. இந்த அகலமான பாதை வழியாக  நடப்பவர்கள்தான்  “பலர்” என்று இயேசு மேலும் கூறுகிறார்.  "குறுகலான வாயில்"  என்பது இயேசுவின் வார்த்தைகளின்படி வாழ்ந்து விண்ணகத்தைச் சொந்தமாக்கிக்கொள்ள விழைபவர்கள். இவர் "சிலரே" என்று இயேசு கூறுகிறார். 

முதல் வாசகத்தில் அரசர் எசேக்கியா கடவுளை அண்டி, அவரது  முடிவுக்கு ஏற்ப வாழ்ந்தது போல நாமும்,  நாய்கள் மற்றும் பன்றிகள்  போன்ற நிலையில் இல்லாமல், ஆண்டவரைப் பற்றி கொண்டு வாழும் தூய மனம் படைத்தோராக வாழ்வோம்.

இறைவேண்டல்.

மீட்பராக மனுவுருவான ஆண்டவரே, "குறுகலான வாயில்" வழி எனது தேர்வாக இருக்கவும், துனபங்களுக்கிடையிலும் நான் மனம் தளர்ந்துவிடாமல், நீர் தருகின்ற ஆற்றலில் நம்பிக்கை கொண்டு உம்மைப் பின்பற்றவும்  அருள்தாரும். ஆமென்
 
  
 
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452