நிறைவேற்ற வந்தவரில் நிலைத்திருப்போம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

12 ஜூன் மே 2024  
பொதுக்காலம் 10ஆம் வாரம் - புதன்

1 அரசர் 18: 20-39
மத்தேயு 5: 17-19

 
நிறைவேற்ற வந்தவரில் நிலைத்திருப்போம்!
 
முதல் வாசகம்.

முதல் வாசகத்தில், யார் உண்மை கடவுள் என்பதை இஸ்ரயேலருக்கு வெளிப்படுத்திய இறைவாக்கினர் எலியாவின் துணிவான மற்றும் ஆழ்ந்த நம்பிக்கையின் வெளிப்பாட்டை அறிகிறோம்.

அக்காலத்தில் இஸ்ரயேல்   மக்கள் பாகால் தெய்வத்தை தங்களது கடவுலாக  வழிபட்டு வந்தனர்.  இந்த தெய்வ வழிபாட்டை இஸ்ரயேல் மக்கள் மத்தியில்  ஊக்குவிக்கும் பொய் இறைவாக்கினர் இருந்தனர். இவர்கள் தங்கள் வெளிப்புற ஆர்ப்பாட்டங்களுக்கும் மந்திரங்களுக்கும் பெயர் பெற்றவர்கள்.  இந்த பாகால் தெய்வத்தை வழிபட்டு வரும் 450 இறைவாக்கினர்கள்  பொய்யானவர்கள் என்பதை மக்கள் முன் எடுத்துரைக்க எலியா மக்களுக்கு முன்னால் அவர்களுக்கு  சவால் விடுகிறார்.  
 
பொய் இறைவாக்கினர்கள்  இரு  காளைகளை கொண்டுவர வேண்டும். அவற்றுள் ஒன்றை    அவர்கள் தேர்வு செய்து பலியிட வேண்டும்.  அவர்கள் தேர்வு செய்யாதக் காளையை  எலியா எடுத்துக்கொள்வார்.  இரண்டு பலிகளில் எந்த பலியில் கடவுள் தீ உண்டாக்கி எரிக்கிறாரோ அதுவே கடவுளுக்கான பலி என்று முடிவு செய்வர். 

பொய் இறைவாக்கினர்கள்  அதிகாலையில்   துண்டு துண்டாக வெட்டப்பட்ட தங்கள் காளைமீது  ‘பாகால்’ தெய்வம்  நெருப்பை இறக்கி, தங்களின் பலிபொருளை எரித்து உட்கொள்ளும்  என்ற நம்பிக்கையுடன் பலவாறு  கூச்சலிட்டு பாகாலிடம் வேண்டினர். ஆனால், அவர்கள் எதிர்ப்பார்த்தது நடக்கவில்லை. 

எலியாவோ  அவர்களுடைய தெய்வத்தைக கேலி செய்தார்.  பின்னர், எலியா  ஆண்டவருக்குப் பலிபீடத்தை மீண்டும் கட்டுகிறார். முதலில் எலியா கட்டிய பலிபீடம்  பாகாலின் சீடர்களால் அழிக்கப்பட்டது.  அவர் இஸ்ரயேலின் பன்னிரண்டு கோத்திரங்களைக் குறிக்க பன்னிரண்டு கற்களைக்கொண்டு பலிபீடம் அமைத்தார்.  காளையையும், மரத்தையும், பலிபீடத்தையும் ஒருமுறை, இரண்டு முறை அல்ல, மூன்று முறை தண்ணீரால் நிரப்பினார்.    

 நாள் முடியும் தருவாயில், எலியா ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் இஸ்ரயேலின் கடவுளிடம் மன்றாடவே,   வானத்திலிருந்து நெருப்பு இறங்கி விறகு, காளை, தண்ணீர் ஆகியவற்றை எரித்ததை போலி இறைவாக்கினர் உட்பட அனைவரும் நேரில் கண்டனர். இதனிமித்தம் மக்கள் மனமாறி, பாகலை விட்டு உண்மை ஆண்டவராகிய கடவுளிடம்  திரும்பினர்.  


நற்செய்தி.


இன்றைய நற்செய்தியில், கடவுளின் கட்டளைகளுக்குப் பணிந்து வாழ்வதன்  முக்கியத்துவத்தைப் பற்றியும், கடவுளுடைய வழிகளில் உண்மையாக இருப்பதைப் பற்றி மற்றவர்களுக்குக் கற்பிப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் இயேசு போதிக்கிறார்.

அவர் மோசேயின் “திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ  அழிக்க வந்ததாக எண்ண வேண்டாம் என்றும், அவர்  அவற்றை   நிறைவேற்றுவதற்கே வந்தார் என்றும் விவரிக்கிறார்.  அதே வேளையில், விண்ணும் மண்ணும் ஒழிந்து போகுமுன் திருச்சட்டம் யாவும் நிறைவேறும். அதன் ஒரு சிற்றெழுத்தோ ஒரு புள்ளியோ ஒழியாது எனவும்  உறுதியாகக் கூறுகிறார்.  

நிறைவாக,  கடவுளின் கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறுவதோடு, அவற்றைத் திரித்துக் கூறி, மக்களுக்கும் கற்பிக்கிறவர் விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவார் என்றும், கடவுளின் கட்டளைகளைக்  கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவார் என்று முடிவாக அறிவிக்கிறார்.


சிந்தனைக்கு.
நாம் அழைக்கப்பட்டவர்கள். கடவுளுக்கு ஏற்புடைய வாழ்வு வாழ அழைக்கப்பட்டவர்கள். வாசகங்களில்  கடவுளின் இந்த அழைப்பானது  நம்மில் இரு அம்சங்களை வலியுறுத்துகிறது.  

1)கடவுளின் வழிகளை நாமே வாழ்ந்து காட்ட வேண்டும்.

2)ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின்  நற்செய்தியை அறிவிப்பதில் நாம் உண்மையாக இருக்க வேண்டும்.

முதல் வாசகத்தில் கண்ட பாகாலின் இறைவாக்கினர்களைப் போல்,  கண்டதே காட்சி கொண்டதே கோலம் என வாழும் கிறிஸ்தவர்கள் நம்மில் இல்லாமலில்லை.   அவர்கள் தங்களின் மூட நம்பிக்கையின் அடிப்படையில் வழிபாட்டில் பங்கேற்க முனைகின்றனர்.  வீட்டில் ஒரு நம்பிக்கை வாழ்வு, ஆலயத்தில் ஒரு நம்பிக்கை வாழ்வு என இரட்டை வாழ்வு வாழ்வோர் வெள்ளையடித்த கல்லறைகள் ஆவர். 

இத்தகையோர், கடவுளுடன் தொடர்புகொள்வதற்கும் கடவுளைக் கட்டுப்படுத்துவதற்கும் அனைத்து வகையான சடங்குகளையும் வழிபாட்டு முறைகளையும்  பின்பற்றுகின்றனர். அர்த்தமற்ற சடங்குகளும் பழக்கவழக்கங்களும் கத்தோலிக்க  வாழ்வின்  சீர்குலைவுக்கு வழிவகுக்கின்றன. 

முதல் வாசகத்தில் போலி இறைவாக்கினரை சவாலுக்கு அழைத்த எலியா இன்று ஒரே உண்மை மற்றும் வாழும் கடவுளை முழுமையாக ஏற்காதவர்களைச் சவாலுக்கு அழைக்கிறார். ஆண்டவராகிய  இயேசுவின் போதனைகளுக்கு உண்மையான சாட்சிய வாழ்வுக்குத்தான்  நாம்  அழைக்கப்பட்டுள்ளோம்.  முற்காலத்தில்   கடவுள் கொடுத்த சட்டங்களை இயேசு ஒழிக்கவில்லை அல்லது அகற்றவில்லை.  அதே போல நாமும் இயேசுவின் போதனைகள் மற்றும் கட்டளைகளுக்கு உண்மையாக இருக்க அழைக்கப்படுகிறோம். மூடநம்பிக்கை நமக்கு மடமை. 

எலியாவைப் போல் இன்று யாரையும் சவாலுக்கு அழைக்கத் தேவையில்லை. நமது சொந்த வாழ்வே நமது நம்பிக்கை வாழ்வுக்குச் சான்றாக விளங்க வேண்டும். ‘நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்” (யோவான் 13:35) என்று இயேசு கூறியதை வாழ்வில் வாழ்ந்து காட்டுவதே உண்மை  வழிபாடு என்பதை அறிந்துணர்வோம். 

நிறைவாக, கடவுளின் கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறுவதோடு, அவற்றைத் திரித்துக் கூறி, மக்களுக்கும் கற்பிக்கிறவர் விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவார் என்று இயேசு நமக்கு அறிவுறுத்துகிறார். ஆகவே, இறைவாரத்தையை விரும்பியவாறு திரித்துக்கூறுவோர் மட்டில் கவனமாக இருக்கவும் ஆவன செய்வோம்.

இறைவேண்டல்.  
 
திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்’ என்றுரைத்த ஆண்டவரே, நான் எந்நாளும் உமது வார்த்தைக்குப் பணிந்து அவற்றை கடைப்பிடித்து வாழ அருள்புரிவீராக ஆமென்.


ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452

Comments

ப.ஜோதிலெட்சுமி… (not verified), Jun 12 2024 - 4:21pm
ரேடியோ வேரித்தாஸ் தமிழ்ப்பணி இனிய இதயங்களுக்கு வணக்கங்களும் வாழ்த்துகளும்...முதல் வாசகத்தில் யோவான்நற்செய்தி போலி இறைவாக்கினர்கள் பற்றியும் இறைவேண்டல் குறித்தும்.ஆண்டவர் இயேசுவின் மகிமைகள் வழியாக தெரிந்து கொண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி..இணையம் வழியாக பகிர்ந்துகொண்ட அருட்தந்தை ஆர் கே சாமி அவர்களுக்கும் வாழ்த்துகள் பாராட்டுக்கள்.....