ஞானம் நம் முகத்தை ஒளிமயமாக்கும் | ஆர்.கே. சாமி | VeritasTamil

3 பிப்ரவரி 2024, பொதுக்காலம் 4ஆம் வாரம்-சனி
1 அரசர் 3: 4-13                   
மாற்கு 6: 30-34

முதல் வாசகம்.

ஆண்டவர் சாலமோனுக்குக் கனவில் தோன்றி,  “உனக்கு என்ன வரம் வேண்டும்? கேள்!” என்று கேட்க, சாலமோன் நன்மை தீமை பகுத்தறிய  தேவையான ஞானம் நிறைந்த உள்ளத்தைத் தந்துளுமாறு கேட்கிறார்.  அவர் உலக செல்வங்களுக்கு அதிகம் ஆசைப்படாமல்  ‘ஞானத்தை’ கேட்டது  ஆண்டவருக்கு மகிழ்ச்சியைத் தந்தது. 

இதனிமித்தம், சாலமோனுக்கு நிகராக, அவருக்கு முன்னே எவரும் இருந்ததில்லை என்று, கடவுள் சாலமோனையும் அவருடைய உயர்ந்தத் தேர்வையும் ஆசீர்வதிக்கிறார். மேலும் சாலமோனுக்கு ஞானம் மட்டுமல்ல, இன்னும் அவர்  கேளாத செல்வத்தையும் புகழை அவருக்குத் தரவுள்ளதாகவும்,  அவரது வாழ்நாள் முழுவதிலும் அவருக்கு இணையான அரசர்கள் வேறு எவரும் இருக்கமாட்டார்கள்  என்றும் வாக்களிக்கிறார்.

நற்செய்தி.

நற்செய்தியில்,   திருத்தூதர்கள்  தங்களது நற்செய்திப் பணியை  முடித்தக்கொண்டு திரும்புகிறார்கள். இயேசுவிடம் வந்து   தாங்கள் செய்தவை, கற்பித்தவை எல்லாம் அவருக்குத் தெரிவித்தார்கள். அவர் உடனே அவர்களைத் தனிமையான இடத்திற்குச் சென்று இளைப்பாறச் சொல்கிறார். அவர்களது பயணக் களைப்பை இயேசு அறிந்திருந்தருக்கக்கூடும்.  எனவே, அவர்களை முதலில் பாலை நிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று ஓய்வெடுக்கப் பணிக்கிறார். 

எனவே, படகில் ஏறி  பாலைநிலத்தில் உள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார்கள். இயேசுவைக் காண வந்த மக்கள் அவர் போகும் இடத்திற்கும் போனார்கள். இவ்வாறு அவர்கள் கூட்டம் கூட்டமாகச் சென்ற மக்கள் மீது இயேசு இரங்கினார்.  ஏனெனில், அவர்கள் ஆயன் இல்லா ஆடுகள் போல   நல்வழிகாட்ட நல்ல தலைமைத்துவம் இல்லாத மக்களாகத் தோன்றினர். 

 சிந்தனைக்கு.

சாலமோன் பகுத்தறியும்  இதயத்தை, அதாவது ஞானத்தை கேட்கிறார். அவர் ஓர் அரசராக இருந்தபோதும், அவர் கேட்ட ஞானம் இவ்வுலகில் கிடைக்காத ஒன்று.  அவருக்கு அறிவு அதிகம் இருந்தருக்கலாம். ஆனால், அவரில்  ஞானம் இல்லை என்பதை அவர் அறிந்திருந்தார்.  ஞானம் என்பது கடவுளின் சிந்தனைக்கொண்டு மனித நடவடிக்கைகளைக் காண்பது. கடவுளைப் போன்று செயல்படுவது என்றும் கூறலாம்.  சாலமோன் அரசர் ஞானம் நிறைந்தவர், அவரது ஆட்சியில் இஸ்ரயேல் மக்கள் மகிழ்ச்சி, அமைதி கொண்டவர்களாக, வசதிகள் நிரம்பப் பெற்றவர்களாக வாழ்ந்துவந்தனர் என்று மறைநூலில் வாசிக்கறோம்.  இன்று அதே ஞானத்தை நமக்கும் தந்துகொண்டிருக்கிறார் தூய ஆவியார். 
அவர் அளிக்கும் கொடைகளில் ஒன்றுதான் ஞானம்.  ஞானம் உள்ளவர்கள் எப்போதும் கடவுள் பக்கம் இருப்பர். அத்துடன் கடவுளின் திருவுளத்தை கண்டறியும் ஆற்றலும் கொண்டிருப்பர். எனவே, நமக்கு அருளப்பட்ட ஞானம் எனும் கொடையைக் கொண்டு செயல்பட்டால், சீடத்துவ வாழ்வில் சிறந்து விளங்கலாம்.
தூய ஆவியார் அருளிய ஞானத்தைக் கொண்டுதான், திருத்தூதர்கள் போலவே நாமும் நற்செய்திப் பணிக்கு அழைக்கப்பட்டிருக்கிறோம்.  இயேசு திருத்தூதர்களின் சோர்வை அறிந்து, அவர்கள் இளைப்பாற தனிமையான இடத்துக்கு அனுப்பினார். நாளும் பொழுதும் இவ்வுலகோடு போராடும் நமக்கும் இத்தகைய இளைப்பாறுதல் இன்றியமையாது. ஆண்டுக்கு ஓரிரு முறை நல்ல தியான மையங்களுக்குச் சென்று, ஆண்டவரோடு இளைப்பாறுவதை இயேசு எதிர்ப்பார்க்கிறார். 

அவராகவே  இருகரம் விரித்தவராக, இதயத்தைத் திறந்தவராக, “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்' (மத்11:28) என்ற உறுதிமொழியை அளிக்கிறார். 

பரபரப்பான இவ்வுலகில் அனுதினமும் பரபரப்பாக வாழ்கிறோம்.  நம்மில் பலர் பலவித நோய்களுக்கு ஆளாகிறோம். இதற்கான  முக்கிய காரணங்களில்  மனக்கவலையும் மனச்சுமையும் குறிப்பிடத்தக்கவை.   அவற்றை ஏன் வீணுக்குச் சுமக்கவேண்டும்? “என்னிடம் வா” என்றழைக்கும் இயேசுவின் குரலுக்குப் பதிலளிக்கத் தயங்குவதும் ஏன்? நமது மனச்சுமையைச் சுமக்க மாத்திரமல்ல, நமக்கு இளைப்பாறுதல் தரவும் அவர் தயாராயிருக்கிறார். நம்மில் ஞானம் கொண்டோர் எழுந்து செல்வர். அவரில் இளைப்பாறுவர்.


இறைவேண்டல்.
இரக்கத்தின் ஆண்டவரே, இயேசுவே, நீரே என் புகலிடம், என் அரண், நான்
நம்பியிருக்கும் இறைவன். உமது ஞானத்தால் நான் நிறைவுப்பெற்று உமது
சீடத்துவ வாழ்வில் சிறந்து விளங்கிட  அருள்புரிவீராக. ஆமென். 

 
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452

Comments

Rosary James (not verified), Feb 03 2024 - 8:15am
Amen 🙏 🙏 🙏