நாமே உலக மீட்பின் கருவிகள்! | ஆர்.கே. சாமி | VeritasTamil
5 ஏப்ரல் 2024
பாஸ்கா எண்கிழமை - வெள்ளி
தி. பணிகள் 4: 1-12
லூக்கா 21: 1-14
முதல் வாசகம்.
நேற்றைய வாசகத்தின் தொடர்ச்சியை இன்று வாசிக்கிறோம். புனித பேதுரு மற்றும் புனித யோவான் இயேசுவின் பெயரால் உடல் ஊனமுற்றவரைக் குணப்படுத்திய பிறகு, ஆலய வளாகத்தில் அவர்களுக்கு நேர்ந்ததை இன்று அறிய வருகிறோம். பேதுருவும் யோவானும் மக்கள் மத்தியில் போதித்துக்கொண்டிருந்த வேளை, குருக்களும் சதுசேயர்களும் கோவில் காவல் தலைவரும் அங்கு வந்தார்கள். ஆனால், இயேசுவின் பெயரால்தான் உடல் ஊனமுற்றவர் நலமானார் என்பதற்கு அவர்கள் உடன்படவில்லை.
இயேசு உயிர்த்தெழுந்தார் என்ற பேதுருவின் அறிக்கையைக் கேட்டு எரிச்சல் அடைந்து, அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். அவர்களில், முக்கியமானவர்கள் உயிர்த்தெழுதலில் நம்பிக்கையற்றவர்களான சதுசேயர்கள். அன்று பேதுருவின் உரையைக் கேட்டு நம்பிக்கை கொண்ட ஆண்களது எண்ணிக்கை ஏறக்குறைய ஐயாயிரம் என்று லூக்கா குறிப்படுகிறார்.
மறுநாள் தலைவர்களும் மூப்பர்களும் மறைநூல் அறிஞர்களும், தலைமைக் குருவான அன்னாவும், கயபா, யோவான், அலக்சாந்தர் ஆகியோரும் எருசலேமில் ஒன்றுகூடி ‘எந்த வல்லமையால் இவனைக் குணபாக்கினீர்கள்?” என்று பேதுருவையும் யோவானையும் வினவினார்கள்.
பேதுருவோ, தூய ஆவியாரார் ஆட்கொள்ளப்பட்டவராக, யாரை அவர்கள் சிலுவையில் அறைந்தார்களோ அந்த நாசரேத்து இயேசுவின் பெயரால் என்று பதில் உரைத்தார். இயேசுவே, ‘கட்டுகிறவர்களாகிய உங்களால் இகழ்ந்து தள்ளப்பட்ட கல். ஆனாலும் முதன்மையான மூலைக் கல்லாக விளங்குகிறார் என்றும் வெளிப்படையாக திருப்பாடல் 118-ஐ மேற்கோள்காட்டி வாதிட்டார்
நற்செய்தி.
இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு அவருடைய சீடர்களுக்கு அவர் தோன்றியதைப் பற்றிய மற்றொரு விவரத்தை இன்றைய நற்செய்தி வழங்குகிறது. இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து மூன்றாம் முறையாக இன்றைய நற்செய்தியின்படி திபேரியக் கடல் பகுதியில் (கலிலேயா கடல்) தோன்றுகிறார். இயேசு உடன் இல்லாத நிலையில் சீடர்கள் எருசலேமை விட்டு கலிலேயா வந்து, வெறுமனே பொழுதைக் கழித்தனர்.
அச்சூழலில், சீமோன் பேதுரு மட்டும் “நான் மீன்பிடிக்கப் போகிறேன்” என்று புறப்படும்போது, அவருடன் வருவதாக திதிம் எனப்படும் தோமா, கலிலேயாவிலுள்ள கானாவைச் சேர்ந்த நத்தனியேல், செபதேயுவின் மக்கள் ஆகியோரும் இயேசுவின் சீடர்களுள் வேறு இருவரும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றார்கள். இரவு முழுவதும் வலைவீசியும் அவர்கள் எதையும் பிடிக்கவில்லை. அவர்கள் கரையை நெருங்கும்போது, தூரத்தில் நின்ற இயேசு அவர்களிடம், “பிள்ளைகளே! மீன் ஒன்றும் படவில்லையா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “இல்லை” என்றார்கள். அவர், “படகின் வலப்பக்கத்தில் வலை வீசுங்கள்; மீன் கிடைக்கும்” என்று அவர்களிடம் கூறினார். ஆனால் அவர்கள் அவர் இயேசு என்று அடையாளம் கண்டுக்கொள்ளவில்லை.
மீன்கள் மிகுதியாய் அகப்பட்டதால் அவர்களால் வலையை இழுக்க முடியவில்லை. யோவான் இயேசுவைக் கண்டு பேதுருவிடம், “அங்கு நிற்பவர் ஆண்டவர்தாம்” என்றார். படகைவிட்டு இறங்கியவுடன் கரியினால் தீ மூட்டியிருப்பதையும் அதன்மீது மீன் வைத்திருப்பதையும் அவர்கள் கண்டார்கள். சீமோன் பேதுரு படகில் ஏறி, வலையைக் கரைக்கு இழுத்தார். வலை நிறைய (153) பெரிய மீன்கள் சிக்கின.
இயேசு அவர்களிடம், “நீங்கள் இப்போது பிடித்தவற்றில் சில மீன்களைக் கொண்டு வாருங்கள்” என்றும், பின்னர் “உணவருந்த வாருங்கள்” என்றும் அழைப்புவிடுக்க, சீடர்களுள் எவரும், “நீர் யார்?” என்று இயேசுவிடம் கேட்கத் துணியவில்லை. ஆனால், இப்போது அவர் ஆண்டவர்தாம் என்று அவர்கள் அறிந்துகொண்டார்கள்.
சிந்தனைக்கு.
நற்செய்தியில், திபேரியாக் கடலில் பேதுருவும் அவரோடு சேர்ந்து யோவான் உட்பட சில சீடர்களும் மீன்பிடிக்கச் செல்கின்றார்கள். இரவு முழுவதும் பாடுபட்டும் மீன் ஒன்றும் கிடைக்கவில்லை. ஆனால், அவர்கள் இயேசுவின் வார்த்தையைக் கேட்டு, வலையைப் படகின் வலப்பக்கம் வீசுகின்றபோது, அவர்களுக்கு அதிகப்படியான மீன் கிடைத்தது. இதற்கு முதன்மையான காரணம், சீடர்கள் இயேசுவின் வார்த்தையைக் கேட்டதோடு, அதன்படி செயல்பட்டார்கள்.
நாமும் இயேசுவை ஆண்டவராகவே பார்த்து அவரை வழிபட்டுக்கொண்டிருப்பதில் மட்டுமல்ல அவரது வார்த்தையைக் கேட்டு, அவரோடு இணைந்திருந்தோமென்றால் பலமடங்கு பலன் கொடுக்க முடியும். அவரோடு இன்றித்திருத்தல் இன்றியமையாதப் பண்பாகும்.
அவரை அடையாளம் காணுதல்.
ஆலயத்தில் இயேசுவை எளிதாக அடையாளம் கண்டுகொள்கிறோம். ஆனால், அவரை ஆலயத்திற்கு வெளியே, பல்லின சமூகத்தில் நாம் அடையாளம் காண விழைய வேண்டும். குறிப்பாக துன்புறும் மக்களில் அவர் இருக்கிறார். ஆடையின்றி, உணவின்றி, நீதியான விசாரனையின்றி, தங்க இடமின்றி, ஒடுக்கப்பட்டு, சிறைப்பட்டு வாழ்வோர் அனைவரும் இயேசுவே. இத்தகையோரை நாம் புறக்கணிக்கும்போது இயேசுவைப் புறக்கணிக்கிறோம். ஆலயத்தில் தான் இயேசு இருக்கிறார் என்று எண்ணி வாழ்வது சீடத்துவத்திற்கு இழுக்கு.
மேலும், நற்செய்தியில் இயேசு தன்னுடைய சீடர்களைப் பார்த்து “உணவருந்த வாருங்கள்” என்ற அழைப்பு விடுக்கிறார். சீடர்கள் இயேசு தந்த உணவை உண்டு, அவரோடு இணைந்திருந்தார்கள். இன்றும் இயேசு நமக்கு ‘வார்த்தை விருந்து' மற்றும் ‘நற்கருணை விருந்து’ என இரு விருந்துகளை திருப்பலியில் படைக்கிறார். தொடக்கத்தில் பார்த்ததுபோல அவரது வார்த்தையைக் கேட்க வேண்டும், அவரது உடலை உண்ண வேண்டும். இவ்வாறு அவருடைய உடலை உண்டு, அவரோடு இணைந்து வாழ்வது நம்மை வாழ வைக்கும்.
இதே நற்செய்தியாளர், ஏற்கனவே, இயேசு கூறிய ‘‘நீங்கள் என்னோடு இணைந்திருந்தாலன்றி கனிதர இயலாது’ (யோவா 15:4) என்பதை நமக்கு எடுத்துரைத்துள்ளார். இயேசுவோடு என்றும் எவ்வேளையிலும் இணைந்திருப்பதே கிறிஸ்தவம். பேதுரு போலவே நாமும் தூய ஆவியாரால் ஆட்கொள்ளப்பட்டிருக்கிறோம். எனவே, அந்த நாசரேத்து இயேசுவின் பெயரால் நம்மாலும் பல சாதனைகள் செய்ய இயலும் என்பதில் நம்பிக்கை வைக்க வேண்டும். வெறுமனே காலத்தைக் கழிக்க நம்மை இயேசு அழைக்கவில்லை.
நிறைவாக, இறையியலாளரான புனித எரோனிமுஸ் (Jerome) என்பவரோ, “வலையில் 153 வகையான மீன்கள் இருந்தனக் என்றும் அந்த 153 வகையான மீன்களும் வலைக்குள் வந்தது போல, உலகில் உள்ள அனைவரும் ஆண்டவரின் திருஅவைக்கு உரியவர் என்றும், யாரும் அவருடைய ஆட்சிக்கு அந்நியர் அல்ல” என்றும் ஒரு விளக்கத்தைத் தருகிறார். இதனால் நாம் அனைவரும் உலக மீட்புக்கான பணியாளர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இயேசுவாலேயன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை என்பதை உலகிற்குச் சொல்லாலும் செயலாலும் எடுத்துரைப்போம்.
இறைவேண்டல்.
உணவருந்த வாருங்கள் என்று அழைத்த ஆண்டவரே, திருப்பலியில் இன்றும் நீர் எனக்கு உமது உடலையே உணவாகத் தருகிறீர் என்பதில் முழு நம்பிக்கை வைத்து, அவ்விருத்தில் ஆர்வத்தோடு பங்குபெறும் வரத்தைத் தந்தருள உம்மை இறைஞ்சுகிறேன். ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452