அன்னை மரியாவின் ஏழு துன்பங்கள் தெரியுமா? | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


தூய மரியாவின் துயரங்கள் (வியாகுல அன்னை) நினைவு  
I: 1 கொரி: 11: 17-26
II: திபா 40: 6-7. 8. 9. 16
III: யோவா: 19: 25-27

துன்பமும் இன்பமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போல மனித வாழ்வில் இருக்கின்றது. இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதரும் தங்கள் வாழ்க்கையில் துன்பமே வேண்டாம் என நினைக்கின்றனர். ஆனால் எதார்த்தத்தில் துன்பங்கள் இருக்கக்கூடிய சூழல் ஏற்படுகின்றது. துன்பம் ஒன்றை அனுபவித்தால்தான் இன்பம் என்ற ஒன்றை அனுபவிக்க முடியும். இந்தச் செய்தியைத்தான் இன்றைய நாள் விழா நம்மைச் சிந்திக்க அழைப்பு விடுக்கிறது.  இன்றைய நாளில் நம் தாய்த் திருஅவையோடு இணைந்து புனித வியாகுல அன்னையின் திருவிழாவை கொண்டாடுகிறோம். 

ஒரு ஊரில் சமூக சீர்திருத்தவாதி வாழ்ந்து வந்தார். அவர் நன்கு படித்தவர். அரசு வேலையை பார்க்கக் கூடியவர். அவர் பணி செய்த அனுபவத்திற்கு எண்ணற்ற உயர்  பதவிகள் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அவருக்கு எதுவும் கொடுக்கப்பட வில்லை. காரணம் அவரின் நேர்மை. அரசியலில் ஆதிக்கம் செலுத்துபவர்களும் பண முதலாளிகளும் இலஞ்சம் கொடுத்து ஒருசிலவற்றை தங்களுக்கு உரிமையாக விரும்பும் பொழுது  அவர் அவர்களுக்கு இடம் கொடுக்காமல் இலஞ்சம் வாங்காமல் நேர்மையோடு வாழ்ந்தார். அப்பொழுது அவரோடு வேலை செய்த ஒரு பணியாளர் "ஏன் இப்படி பிழைக்கத் தெரியாத ஆளாக இருக்கின்றீர்? "என்று  கேட்டார். அதற்கு அவர் "நான் ஒரு கிறிஸ்தவர். இயேசுவின் வழியில் மனிதநேயத்தை மதிப்பவர். நான் பின்பற்றும் இயேசு நேர்மை உள்ளவராக இருக்கிறார். அவர் வாழ்ந்தபோது நேர்மையின் காரணமாகத் துன்புறுத்தபட்டார்.   இறுதியில் அவர் அடைந்த  துன்பத்தை எல்லாம் வென்று இறை மாட்சியில் உயிர் பெற்று எழுந்தார். இந்த உலகத்திற்கு நிலையான மகிழ்ச்சியைக் கொண்டு வந்தார். அவரிடமிருந்துதான் நான் இந்தப் பண்பை கற்றுக் கொண்டேன். எனவே எனக்கு இருப்பது போதும். நேர்மையாக நான் பணி செய்து கிடைக்கின்ற வருமானம் போதும். நான் நேர்மையாக இருப்பதால் வருகின்ற துன்பங்களை ஏற்கின்ற மனநிலையே என் ஆண்டவர் இயேசு கொடுப்பார் " என்று பதிலளித்தார். இதைக் கேட்ட அந்த மற்றொரு நபர் கிறிஸ்தவ மதிப்பீட்டை நினைத்து பெருமிதம் கொண்டார்.

உண்மையான கிறிஸ்தவ வாழ்வு என்பது துன்பத்தின் வழியாக இறை மாட்சியை காண்பதாகும். நம் தாய் அன்னை மரியாள் துன்பத்தின் வழியாக இறைமாட்சியைக் காண்பதற்கு  ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். அன்னை மரியா என் வாழ்விலே இன்பங்கள் இருந்ததைவிட துன்பங்கள் தான் அதிகமாக இருந்தது. இருந்தபோதிலும் தான் சந்தித்த அனைத்து துன்பங்களையும் இறை மீட்பு திட்டத்திற்காக அன்போடும் துணிவோடும் தியாகத்தோடும் ஏற்றுக்கொண்டார்.  மனித இயல்பு கொண்ட அன்னை மரியா இறை மீட்புத் திட்டத்தை ஒரு சில நேரங்களில் புரிவதற்கு சற்று கடினமாகவே இருந்தது. அதன் வழியாகவும் ஒரு சில துன்பங்களை அடைந்தார்.

இன்றைய நாளில் நம் தாய்த்திருஅவை அன்னை மரியாவின் 7 துன்பங்களை நமக்கு நினைவுக்குக் கொண்டு வருகின்றது. முதலாவதாக, எருசலேம் கோவிலில் புனித மரியன்னை குழந்தை இயேசுவை காணிக்கையாக ஒப்புக் கொடுத்த வேளையில் சிமியோன் அன்னை  மரியாவை பார்த்து  "உமது இதயத்தை ஒரு வாள் ஊடுருவும் "என்று கூறினார். இதைக்கேட்ட அன்னை மரியா கலக்கமுற்றவராய் துன்பப்பட்டார். இரண்டாவதாக,  ஏரோது தனது குழந்தையை கொல்ல தேடுகிறான் என்ற செய்தியை கேட்டதும்பாலன் இயேசுவை காப்பாற்ற 300 மைலுக்கு அப்பாலுள்ள எகிப்து நாட்டிற்கு போகும் வழியில் அடைந்த துன்பம் பயங்கரமானது. இத்தகைய துன்பத்தையும் அன்னை மரியாள் இறை மீட்பு திட்டத்திற்காக ஏற்றுக்கொண்டார்கள்.

மூன்றாவதாக இயேசுவிற்கு 12 வயது நடக்கும் பொழுது எருசலேம் ஆலயத்தில் காணாமல் போய்விடுகிறார். அந்தச் சூழலில் ஒரு தாயாக தன் மகனைத் தேடி அலைந்து பெரும் துயரம் அடைந்தார். நான்காவதாக நம்முடைய பாவத்திற்காகவும்   மனிதகுலம் மீட்பு பெறவும் தன் உயிரையே கையளிக்க திருவுள்ளம் கொண்ட தன் மகன் இயேசுவை  சிலுவையோடு கல்வாரி நோக்கி சென்றதை  கண்டபொழுது மிகவும் துன்பப்பட்டார். இவற்றையும் இறை மீட்பு திட்டத்திற்காக ஏற்றுக்கொண்டார்.  ஐந்தாவதாக இயேசுவை சிலுவையில் அறைந்த பொழுது ஒரு தாயாக அன்னை மரியாள் மிகவும் துன்பப்பட்டார். ஆறாவதாக உயிர் பிரிந்த இயேசுவை சிலுவையிலிருந்து இறக்கி தன் மடியில் வைத்து அழுத பொழுது ஆறாத் துயரம் அடைந்தார். ஏழாவதாக இறந்த இயேசுவை கல்லறையில் அடக்கம் செய்யும் பொழுது பெரும் துயரம் அடைந்தார். இத்தகைய எண்ணற்ற துன்பங்களை அன்னை மரியாள் சந்தித்த பொழுதும் இறைவனின் திருவுளமாக அவற்றை ஏற்றுக்கொண்டு இறை மீட்புத் திட்டத்திற்கு தன்னையே முழுவதுமாக கையளித்தார் . இயேசு இறைமகனாக இருந்த பொழுதும் ஒரு மனிதராக இருந்த காரணத்தினால் ஒரு வழிகாட்டி தேவைப்பட்டது. அந்த வழிகாட்டி தான் நம் தாய் அன்னை மரியா. யூத சமூகத்தில் மிகவும் கொடூரமான சாவு என்பது சிலுவைச் சாவு. அந்த சாவை ஏற்க மனதைரியம் அன்னை மரியாவிடம் இருந்து தான் இயேசு பெற்றார். அன்னை மரியாள் தன் மகன் வழியாக இந்த உலகத்திற்கு மீட்பு வரப்போகின்றது என்பதில் ஆனந்தம் இருந்தாலும் ஒரு தாயாக அந்த துன்பத்தை  காணும்பொழுது மிகவும் துயரம் அடைந்தார். ஆனால் அவற்றை இறை மீட்பு திட்டத்திற்காக   ஏற்றுக்கொண்டு இயேசுவோடு இறுதிவரை பயணித்தார். இயேசுவோடு இருந்த மற்ற சீடர்கள் அனைவரும் ஓடினாலும் ஒரு உண்மையான சீடராக இறுதிவரை கல்வாரியில் நின்றார். துன்பத்தின் வழியாக இறைமாட்சி காண்பதுதான் உண்மையான சீடத்துவ வாழ்வு. இத்தகைய வாழ்வை வாழ தான் இன்றைய நாள் விழாவானது நமக்கு அழைப்பு விடுக்கின்றது.

இன்றைய நற்செய்தியில் நயீன் என்னும் ஊரிலே ஒரு வல்ல செயலை இயேசு செய்கிறார். தன் ஒரே மகனை இழந்த  தாயின்  துன்பத்தைக்  கண்டு பரிவு கொண்டு வல்ல செயலை செய்தார். பெற்றத் தாயை துன்பத்தை வழங்கக் கூடாது என்று இயேசு நினைத்தார். ஆனால் தன்னுடைய தாய் தான் இறக்கும் பொழுது துன்பப்படுவார்  என அறிந்திருந்தும் இறை மீட்பு திட்டத்திற்காக தன்னையே கையளிக்கிறார் .இது அன்னை மரியாவின் தியாக குணத்தையும் இயேசுவின் தியாக குணத்தையும் சுட்டிக்காட்டுகிறது. துன்பத்தின் வழியாகத்தான் இறைமாட்சி வெளிப்படும் என்பதை நம் தாய் அன்னை மரியாளும் நம் ஆண்டு இயேசு கிறிஸ்துவும் அறிந்திருந்தனர். எனவேதான் இவ்வுலகிற்கு மீட்புக்கான வழியை அவர்கள் காண்பித்து மீட்படைய வழி காட்ட முடிந்தது.

எனவே நம்முடைய அன்றாட வாழ்விலே கிறிஸ்து  என்ற உடலை கிறிஸ்தவர்களாகிய நாம் பல உறுப்புகளாக இருந்து நற்செய்தி மதிப்பீட்டிற்கு சான்று பகர அழைக்கப்பட்டுள்ளோம்.நம்மிடையே எந்த ஒரு ஏற்றத்தாழ்வும் பாகுபாடும் இல்லாத வாழ்வை வாழ்ந்து கிறிஸ்தவ வாழ்விற்கு சான்று பகர இன்றைய முதல் வாசகம் அழைப்பு விடுகின்றது .  இயேசுவின் மனநிலையில் திருத்தூதர் பவுல் வழிகாட்டு நெறிமுறையில் நம் வாழ்வில் பயணிக்கும் பொழுது பல்வேறு துன்பங்கள் வரும். அந்தத் துன்பங்களை எல்லாம் அன்னை மரியாவை போலவும் நம் ஆண்டவர் இயேசுவைப் போலவும் இறை மீட்புத் திட்டத்திற்காக மிகத் துணிச்சலோடு ஏற்றுக்கொள்ளும் பொழுது நாமும் இயேசுவின் மனநிலையில் நல்ல ஒரு கிறிஸ்தவ மக்களாக சான்று பகர முடியும். அதற்கான அருளை வியாகுல அன்னை வழியாக பெற இறைவேண்டல் செய்வோம்.

இறைவேண்டல் : 
துன்பத்தின் வழியாக இறைமாட்சி கண்ட அன்பு இயேசுவே! நாங்கள் வாழுகின்ற இந்த கிறிஸ்தவ வாழ்வில் வருகின்ற துன்பங்களை உம்முடைய மீட்புத் திட்டத்திற்காக ஏற்றுக்கொண்டு எந்நாளும்  எங்கள் சொல்லாலும் செயலாலும் நற்செய்தி மதிப்பீட்டிற்கு அன்னை மரியாவைப் போல சான்று பகர தேவையான அருளைத் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம் 

Add new comment

13 + 5 =