பற்றிக்கொள்வதில் எவ்வளவு நன்மை! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

பொதுக்காலம்,33 வாரம் வெள்ளி  
I: 2 மக் :4: 36-37, 52-59
II: 1 குறி 29: 10. 11யn. 11-12. 12
III: லூக்:  19: 45-48

திருவிழா கூட்டத்தில் தொலைந்த தன் குழந்தையை பரபரப்புடனும் பதற்றத்துடனும் தேடுகிறாள் தாயானவள். தான் குழந்தையோடு சென்ற இடங்களையெல்லாம் தன் மனக்கண்ணில் ஓடவிட்டு எங்கே குழந்தை தவறி இருக்கக்கூடும் என யோசித்துக்கொண்டிருந்த போதுதான் அவளுக்கு நினைவுக்கு வந்தது. ஆம் தன் குழந்தையால் நீண்ட நேரம் நடந்துவர இயலாத காரணத்தால் ஒருகடை முன்பு குழந்தையை அமர வைத்துவிட்டு பொருட்கள் வாங்கச் சென்றதை நினைவுகூர்ந்த தாய் வேகமாக ஓடினாள் அக்கடையை நோக்கி. குழந்தை எவ்வித பதற்றமுமின்றி  அமைதியாக அமர்ந்திருந்தது. ஏனென்றால் தன் அம்மா வந்து தன்னை அழைத்துச் செல்வாள் என்ற நம்பிக்கை அக்குழந்தைக்கு இருந்தது. அவளுடைய வார்த்தைகள் அக்குழந்தையின் மனதில் ஆழமாகப் பதிந்திருந்தது.தாங்கள் சந்தித்துக் கொண்ட போது குழந்தையும் தாயும் ஒருவரை ஒருவர் பற்றிக்கொண்டு தங்கள் அன்பைப் பறிமாறிக்கொண்டனர்.

பற்றிக்கொள்தல் என்றால் என்ன?  நாம் அன்பு செய்பவர்களை இறுக்கி அனைத்துக்கொள்வதா?  கைகளை கோர்த்துக்கொண்டு நடப்பதா?  பிடித்த பிடியை விடாமல் இருப்பதா?  இருக்கலாம். இவை அனைத்தும் பற்றிக்கொள்வதற்கான வெளிப்புற அடையாளங்களே.
உண்மையான பற்றிக்கொள்தல் என்பது அன்பின் ஆழத்தைக் குறிக்கிறது. ஒருவர்மீது ஒருவர் கொண்டுள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.  குறை நிறைகளோடு ஏற்றுக்கொண்டு எந்நிலையிலும் விலகாத மனநிலையைக் கூறுகிறது.

நாமும் நம் வாழ்வில் பலவற்றை பற்றிக் கொள்கிறோம். உறவுகள், செல்வங்கள் என அவற்றை வரிசைப்படுத்தலாம். சில சமயங்களில் நம்முடைய இப்பற்றுகள் மகிழ்வைத் தரும். சில வேளைகளில் தீராத துன்பத்தைத் தரும் .ஆனால் எல்லாவற்றையும் விட முக்கியமாக நாம் பற்றிக் கொள்ள வேண்டியது கடவுளையே.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் "மக்கள் எல்லோரும் இயேசுவின் போதனைகளைக் கேட்டு அதைப் பற்றிக் கொண்டார்கள் "எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வார்த்தைகள் மக்கள் இயேசுவின் மீது கொண்ட நம்பிக்கையையும், மனமாற்ற வாழ்வையும் நமக்கு எடுத்துரைப்பதாக அமைகிறது. அதுமட்டுமில்லாமல் பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் இயேசுவுக்கு எதிராக எதுவும் செய்ய முடியாதபடிக்கு காத்தது. அதே போல முதல் வாசகத்தில் யூதாவின் வழிநடத்துதலோடு கடவுளுக்குப் பலி செலுத்தி தங்களை எதிரிகளிடமிருந்து காத்த கடவுளுக்கு இஸ்ரயேலர் விழா எடுத்ததையும், தங்களையும் பலிபீடத்தையும் தூய்மை செய்து கடவுளோடு உள்ள உறவை, பற்றை ஆழப்படுத்துவதையும் நாம் இன்று தியானிக்கிறோம். ஆம் கடவுளோடும் அவர் அருளிய திருச்சட்டத்தோடும் இஸ்ரயேலர் கொண்டிருந்த ஆழமான பற்றுதன் அவர்களை தொடர்ந்து மீட்டுக்கொண்டே இருந்தது. 

அன்புக்குரியவர்களே நம்முடைய கிறிஸ்தவ வாழ்வில் நாம் கடவுளையும் அவருடைய வார்த்தைகளையும் பற்றிக்கொண்டால்தான் உலகப் பற்றுகளை அகற்றி மீட்பைப் பெறமுடியும். அன்று தன் மகளுக்காக இயேசுவைப் பற்றிக்கொண்டாள் கனானேயப் பெண். நம்பிக்கையின் சாட்சியானாள். இயேசுவை சிலுவைப் பாதையிலும், இறப்பிலும் விடாமல் பற்றிக் கொண்ட யோவான், அவருடைய அன்புக்குரிய சீடரானார். அதைப்போல தன் பாவங்களை வெறுத்து மனம் மாறி இயேசுவைப் பற்றிக்கொண்ட மகதலா மரியா உயிர்த்த இயேசுவை முதலில் பறைசாற்றும் நற்செய்தித் தூதுவரானார். நாமும் நம் ஆண்டவர் இயேசுவை முழுமையாகப் பற்றிக் கொள்வோம். அவரைப் பற்றிக்கொள்ளும் போது நாம் உலக மாயைகளிலிருந்து விடுபட்டு மீட்பை நிச்சயமாகப் பெற முடியும். இயேசுவைப் பற்றிக்கொள்ளத் தயாரா?

இறைவேண்டல்
இயேசுவே!  உம்மை எம் வாழ்வில் விடாமல் பற்றிக்கொண்டு உம் அன்புக்கு சாட்சியாய் விளங்க உமதருள் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்