இறைவனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென அவர் ஏங்குகிறார்! | அருட்பணி. குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

பாஸ்கா காலம்-6 வாரம் வியாழன்
I: திப: 18: 1-8
II: திபா :98: 1. 2-3. 3,4
III:யோவான் :16: 16-20

நம்மை அன்பு செய்யும் ஒருவர், நமக்காக எல்லாம் செய்யும் ஒருவர், நம்மோடு எப்போதும் இருக்க வேண்டும் என எண்ணும் ஒருவர் தான் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும், புரிந்து கொள்ளப்பட வேண்டும் என விரும்புவதுண்டு. இது ஒருவிதமான ஏக்கம் என்றே சொல்லலாம். மனிதருக்கு மட்டுமா அந்த ஏக்கம்! கடவுளுக்கும் அது உண்டு.

இயேசு இன்றைய நற்செய்தியில் அத்தகைய ஏக்கத்தை வெளிப்படுத்துபவராக இருக்கிறார். சிறிது காலம் நான் உங்களோடு இருப்பேன். அதன்பிறகு நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள் என ஏக்கத்தோடு தன் கூடவே இருந்த சீடர்களிடம் கூறுகிறார் இயேசு. அவர் கூறிய வார்த்தைகளைப் புரிந்து கொள்ள இயலாத சீடர்கள் தங்களுக்குள்  இயேசுவைப் பற்றி பேசிக்கொண்டிருந்ததையும் அவர் அறிவார்.நிச்சயமாக வருந்தியிருப்பார் தன்னைப் புரிந்து கொள்ளாத சீடர்களின் நிலை கண்டு.

முதல் வாசகத்திலே யூதர்கள் இயேசுதான் மெசியா என்ற பவுலின் போதனையை ஏற்க மறுத்தார்கள். இயேசு யூதர்களை மீட்கத்தான் வந்தார்,அவரும் ஒரு யூதர்தான். ஆயினும் அவருடைய மக்களே அவரை ஏற்கவில்லை. எனவே பவுலடியார் பிற இனத்து மக்களிடம் தான் சென்று இயேசுவைப் போதிக்கப் போவதாக சொல்லிச் சென்றார்.

நாம் யாரைப் பிரதிபலிக்கிறோம்? இயேசுவை புரிந்து கொள்ளாத சீடர்களையா? அல்லது அவரை ஏற்றுக்கொள்ளாத யூதர்களையா? இல்லை. அவரை புரிந்துகொண்டு, ஏற்றுக்கொண்டு, போதித்த பவுலடியாரையா? நமக்காகக் காத்திருக்கும் இயேசுவை, இயேசுவின் மூலம் அன்பையும் அருளையும் பொழிய ஏங்கிக்கொண்டிருக்கும் தந்தையை .....ஏற்றுக்கொண்டு நம்பிக்கையோடு அறிவிப்போமா! சிந்திப்போம்.

இறைவேண்டல் 
அன்பு இறைவா!  எம் அன்புக்காக நீர் ஏக்கத்தோடு காத்திருப்பதை உணர்ந்து உம்மிலே நம்பிக்கை கொண்டு உம்மை எம் இறைவனாக ஏற்றுக்கொண்டு வாழ வரமருளும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்