கடைப்பிடித்துக் கற்பிப்போமா! | அருட்பணி. குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


தவக்காலம் -மூன்றாம் வாரம் புதன் 
I: இச:  4: 1,5-9
II: திபா: 147: 12-13. 15-16. 19
III: மத்:  5: 17-19

ஒரு பள்ளியில் இரண்டு ஆங்கில ஆசிரியர்கள் பணியாற்றினர். பள்ளி நிர்வாகம் மாணவர்களை ஆங்கிலப் புலமை உள்ளவர்களாக மாற்றுமாறு அவ்வாசிரியர்களைக் கேட்டுக்கொண்டது. பள்ளி நிர்வாகத்தின் கட்டளையை ஏற்று மாணவர்களை ஆங்கில புலமையில் வளர்க்க பல்வேறு பயிற்சிகளைக் கொடுத்தனர் அவ்வாசிரியர்கள். ஒரு ஆசிரியர் மிகச் சிறப்பான முறையில் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட மாணவர்கள் ஆங்கில புலமையில் வளர விரைவில் உதவி செய்தார். மற்றொரு ஆசிரியருக்குத் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட மாணவர்களை ஆங்கிலப் புலமையில் வளர்த்தெடுக்க கடினமாக இருந்தது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பள்ளி நிர்வாகம் இரண்டு ஆசிரியர்களையும் திறனாய்வு செய்தது. அப்பொழுது ஒரு ஆசிரியர் சிறப்பாக செயல்பட்டதை பாராட்டியது. மற்றொரு ஆசிரியரின் குறைபாடுகள் என்ன என்பதை அறிந்துகொள்ள சிறப்பாகச் செயல்பட்ட ஆசிரியரிடம் கற்பித்தலின் அனுபவத்தைப் பகிர கேட்டுக்கொண்டது.  சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர் "என்னிடம் ஒப்படைக்கப்பட்ட மாணவர்களைக் குறை கூறாமல்,  அவர்களால் முடியும் என்று ஊக்க மூட்டினேன். அவர்களை என்னுடைய சொந்தப் பிள்ளைகளைப் போல் மிகுந்த அன்பு செய்தேன். எந்த ஆங்கிலப் பயிற்சி பாடத்தை நடத்தினாலும், அதை செயல் முறையோடு கூடிய பாடமாக நடத்தினேன். செயல்பாட்டுடன் கூடிய கற்பித்தல் மிகுந்த வெற்றியை கொடுக்கும் "என்று பதில் கூறினார். இதைக் கேட்டவுடன் மற்றொரு ஆசிரியர் தான் செய்யத் தவறிய முறையை அறிந்துக் கொண்டு சிறப்பான பயிற்சியை மாணவர்களுக்கு அளித்து வந்தார்.   

கற்பித்தல் என்பது ஒரு உன்னதமான கொடை. இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் அனுபவத்தின் வழியாகவும் பயிற்சியின் வழியாகவும் பலவற்றை கற்கின்றோம். கற்றவை அனைத்தையும் நம்முடைய வாழ்வோடு உரசிப் பார்க்கின்ற பொழுதுதான் கற்றவை உயிரோட்டமுள்ளதாக மாறும். பிறந்த குழந்தை வளரும் பொழுது தன் தாய் தந்தையிடமிருந்து அடிப்படையான விஷயங்களைக் கற்றுக் கொள்கிறது. ஒரு மொழியை கற்பதற்கு தனிப்பட்ட மனிதரின் முயற்சியும் உழைப்பும் அதிகமாக தேவைப்படும். ஆனால் தாய் மொழியை மட்டும் எந்த ஒரு அடிப்படைப் பயிற்சியும் இல்லாமல் இயல்பாக கற்றுக்கொள்கிறோம். இதற்கு காரணம் செயல்பாட்டோடு கூடிய கற்றல் ஆகும்.

ஆண்டவர் இயேசு செயல்பாட்டு கூடிய கற்பித்தலுக்கு முன்னுதாரணமாக இருக்கின்றார். இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு "திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, 
நிறைவேற்றுவதற்கே வந்தேன்"  (மத்: 5:17) என்று கூறியுள்ளார். இதற்கு அடிப்படை காரணம் இயேசு வாழ்ந்த காலகட்டத்தில் யூதர்கள் திருச்சட்டத்திற்கு எதிராக இயேசு இருக்கிறார் என விமர்சித்தனர். ஆண்டவர் இயேசு திருச்சட்டத்தை அழிப்பதற்காக அல்ல ; மாறாக,  அவற்றை நிறைவேற்றி அவற்றின் கொள்கை கோட்பாட்டோடு வாழ அழைப்பு விடுக்கிறார். 

திருச்சட்டம் என்பது கடவுளால் கொடுக்கப்பட்டது.ஆண்டவர் மோசே வழியாகக் கொடுத்த பத்து கட்டளைகளுக்குள்  திருச்சட்டம் அடங்கும். பத்து கட்டளையின் பொருளை ஆழமாக ஆய்வு செய்தால் 'அன்பு' என்ற மேலான பண்பு    வெளிப்படும்.

மக்களுக்கு திருச்சட்டத்தை பற்றி போதித்த பரிசேயரும் மறைநூல் அறிஞரும் தாங்கள் கற்ற அறிவிலிருந்து  மக்களுக்கு போதித்தனர். ஆனால் தாங்கள் திருச்சட்டத்தில் பெற்ற அனுபவத்தை போதிக்க மறந்தனர். உதாரணமாக சொல்லப்போனால், அவர்கள் அன்பைப் பற்றி பேசினார்கள். ஆனால் தன்னோடு வாழ கூடியவர்களை அன்பு செய்யத் தவறினார்கள். எனவே தான் ஆண்டவர் இயேசு அவர்களை விமர்சனப்படுத்தும்  நோக்கோடு, திருச்சட்டம் தன்னில் நிறைவேறுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இயேசு திருச்சட்டத்தை வாழ்வாக்குவதில் மிகவும் கவனமாக இருந்தார். திருச்சட்டத்தின் உச்சமான பன்பாகிய  அன்பை  எல்லா மக்களுக்கும் கொடுத்தார். ஆனால் பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் அன்பை பிறருக்கு கொடுக்கத் தவறினர். அன்பு வழியாகத் திருச்சட்டத்தை கற்பிக்காமல்,  அதை எங்கோ  உள்ள மறைபொருளாகவே அவர்கள் கற்பித்தார்கள். ஆண்டவர் இயேசு திருச்சட்டத்தைத்  தன் வாழ்வாக மாற்றினார். அனைவரும் நலமோடு வாழ வேண்டும் என்பதில் கருத்தாக இருந்தார். சட்டம் மனிதருக்கானது; மனிதன் சட்டத்திற்கானவர் அல்ல என்ற ஆழமான கருத்து கொண்டிருந்தார். 

எனவே திருச்சட்ட நெறிகளை மீறாமல் கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழ இயேசுவைப் போல பிறரை அன்பு செய்வோம். திருச்சட்டத்தின் உச்சமாகிய அன்பை வாழ்வாக்க   முயற்சி செய்வோம். திருச்சட்டத்தின் உச்சமாகிய அன்பை நமது உயிர் மூச்சாகக் கொண்டு நிறைவேற்ற முயற்சி செய்வோம்.  அவ்வாறு வாழும் பொழுது இயேசுவைப் போல , நாமும் அதிகாரத்தோடு போதிக்க முடியும்.

இயேசுவின் மூன்றாண்டு இறையாட்சி பணியின் கற்பித்தல் அதிகாரம் இருந்ததாகவும் ஆற்றல் நிறைந்ததாகவும் இருந்ததற்கு காரணம் அன்பு வழி கற்பித்தல். இதுதான் திருச்சட்டத்தின் நிறைவு.  கடவுள் நம்மை அன்பு செய்வது போல நாமும் பிறரை அன்பு செய்வது  திருச்சட்டத்தை நிறைவேற்றுவதற்கு சமம்.  பரிசேயர்கள் மறைநூல் அறிஞர்களை போலல்லாமல் கடவுளுக்குப் பயந்து திருச்சட்டத்தை வாழ்வாக்கி அனுபவத்தின் மூலமாக கற்ற அனைத்தையும் மமற்றவருடன் பகிர்ந்து நம்மால் இயன்றவரை பிறருக்கு உதவி செய்ய முன்வருவோம். அப்பொழுது நம்முடைய கற்பித்தல் பணியில்   வெற்றிக்கனியை முழுமையாகச் சுவைக்க முடியும். மறைநூல் அறிஞர்கள் பரிசேயர்களைப் போலன்றி இயேசு அதிகாரத்தோடு போதித்தது போல,    நாமும் நம்முடைய அன்பான வாழ்வின் வழியாகவும் இறை அனுபவத்தின் வழியாகவும் தனிப்பட்ட முயற்சியின் வழியாகவும் அதிகாரத்தோடு போதிக்கப் பயிற்சி செய்வோம். திருச்சட்டத்தை அழிப்பதற்காக அல்ல ; மாறாக, நிறைவேற்ற வந்த ஆண்டவர் இயேசுவின் வழியை பின்பற்றுவோம். இறை அனுபவத்தை அன்பு வழியில் பிறருக்குக் கற்பிப்போம்.

 இறைவேண்டல்
அன்பான இறைவா! திருச்சட்டத்தின் மதிப்பீடுகளின் படி வாழத் தேவையான அருளைத் தாரும். அதிலும் குறிப்பாக அன்புநிறை வாழ்வின் வழியாக , பிறருக்கு திருச்சட்டத்தின் மதிப்பீடுகளைப் கற்பிக்கத் தேவையான அருளைத் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

12 + 0 =