எதைத் தேர்வு செய்கிறோம்? துன்பக் கிண்ணமா? அல்லது சுகவாழ்வா? | அருட்பணி. குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


தவக்காலம் - இரண்டாம் புதன்
I: எரே: 18: 18-20
II: திபா: 31: 4-5. 13. 14-15
III: மத்:  20: 17-28

ஒரு வகுப்பில் வகுப்புத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஆசிரியர் ஒரு சில மாணவர்களின் பெயரை எழுதி குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்தார். அவ்வாறு தேர்ந்தெடுக்கும் போது குறிப்பிட்ட ஒரு மாணவனின் பெயர் விழுந்தது. ஆனால் அவன் முகத்தில் மகிழ்ச்சியே இல்லை. அதைப்பார்த்த ஆசிரியர் அவனிடம் " எல்லாரும் வகுப்புத் தலைவராக மாற ஆசைப்படுவார்கள். உனக்கு அந்த ஆசையில்லையா? ஏன் சோகமாக இருக்கிறாய்? என்று கேட்டார். அதற்கு "அம்மாணவன் வகுப்புத் தலைவராக இருந்தால் பல வேலைகள் இருக்கும்.வகுப்பிற்கு முதலில் வரவேண்டும். வருகைப்பதிவேடு எடுத்து வைக்க வேண்டும்.ஆசிரியர் வரும்வரை வகுப்பை கவனிக்க வேண்டும். இதில் என்னைப் பிடிக்காதவர்கள் என்னைப் பேச்சைக் கேட்காமல் எதாவது செய்துவிட்டால் எனக்குத்தான் கெட்ட பெயர் கிடைக்கும். எனவே நான் வகுப்புத் தலைவராக இருக்க விரும்பவில்லை. " எனக் கூறினான்.

அன்புக்குரியவர்களே ஒருபுறம் இவ்வுலகில் தலைமை வகிக்க ஆசைப்படும் பலர் இருக்க, மற்றொரு புறம் எந்த பிரச்சினையும் இல்லாமல் சுலபமான வாழ்க்கை வாழ வேண்டுமென்ற எண்ணம் கொண்டவர்களும் இருக்கத்தான் செய்கிறார். ஏனென்றால் தலைமைப் பொறுப்பு என்பது சுகவாழ்வல்ல.மாறாக அது ஒரு துன்பக்கிண்ணம். தலைமைப் பொறுப்பு வகிப்பதால் மற்றவரை நாம் ஆண்டுவிடலாம் என்பதும் தவறான புரிதல். அதே வேளையில் அது சவால் நிறைந்த, எதிர்ப்புகள் நிறைந்த பணியாதலால் ஒதுங்கிவிடுதலும் தவறான  மனநிலையாகும்.நாமாக இத்தகைய பொறுப்புகளைத் தேடிச்செல்லாமல்,நம்மிடம் ஒப்படைக்கப் படும் நேரங்களில் அப்பொறுப்பினை சரியான புரிதலோடும் சகிப்புத் தன்மையோடும் கையாள வேண்டும். இதைத்தான் இன்றைய நற்செய்தி மூலமாக நம் ஆண்டவர் இயேசு கூறுகிறார்.

இயேசுவின் தலைமைப் பொறுப்பை சுகவாழ்வு என்று எண்ணிய செபதேயுவின் மக்கள்  வலப்புறத்திலும் இடப்புறத்திலும் இடம் கேட்டனர். அவர்கள் அவ்வாறு கேட்டதை அறிந்த மற்ற சீடர்களும் செபதேயுவின் மக்கள்மேல் கோபம் கொண்டனர்.இது சுட்டிக்காட்டுவது தலைமைப் பொறுப்பைப் பற்றிய அவர்களுடைய தவறான புரிதலையே.ஆனால் இயேசு இங்கே துன்பங்கிண்ணத்தை ஏற்றுக்கொண்டு  தொண்டு ஆற்றும் மனநிலை உள்ளவனே உண்மையான தலைவன் என்பதை விளக்குகிறார்.

இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எரேமியா கடவுளிடம் தன் துன்பங்களைச் சொல்லிப் புலம்புகிறார். கடவுளுடைய வார்த்தையை அறிவிப்பதால் அவருக்கு எதிராகப் பலர் சூழ்ச்சி செய்வதை அறிந்து மனம் வெதும்புகிறார். ஆயினும் இறுதி வரை அவர் கடவுளுக்காகத் துன்பக் கிண்ணத்தை ஏற்றுக்கொண்டார்.

அன்புக்குரியவர்களே நாம் எல்லாருமே ஒருவிதத்தில் தலைமைப் பொறுப்பு வகிக்கிறோம். மற்றொரு விதத்தில் தொண்டர்களாகவும் இருக்கிறோம். எந்நிலையில் இருந்தாலும் நமக்கு சவால்களும் துன்பங்களும் வரத்தான் செய்யும். அவற்றை சரியான மனநிலையோடு கையாள நாம் இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். துன்பத்தில் "து" என்ற எழுத்தை எடுத்துவிட்டால் கிடைப்பது "ன்பம்" .ஆனால் அது துன்பத்திற்கு பின் தான் வருகிறது. எனவே துன்பக்கிண்ணத்தை துணிவுடன் ஏற்க கற்றுக்கொள்வோம். நிச்சயம் சுகவாழ்வு நம்மைத் தொடரும். 

 இறைவேண்டல்
அன்பு ஆண்டவரே!  எம் வாழ்வில் வரும் துன்பக் கிண்ணங்களைப் பருகத் தேவையான வலிமையைத் தாரும்.  ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

 

Add new comment

5 + 8 =