நமக்கு நாமே நீதிபதி ஆவோமா! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

பொதுக்காலம் 12 வாரம் திங்கள் 
I: தொநூ: 12: 1-9
II: திபா 33: 12-13. 18-19. 20,22
III:மத்: 7: 1-5

உண்மையான நீதிபதி என்பவர் தாழ்ச்சி,உண்மை, நேர்மை,பாகுபாடு காட்டாத மனநிலை போன்றவற்றை தன்னகத்தே கொண்டிருக்க வேண்டும் . இத்தகைய குணங்களை பிறரைத் தீர்ப்பிடும்போது மட்டுமல்லாமல் தன்னைத் தீர்ப்பிடும் போதும் தன்னுள்ளே கொண்டு செயல்பட வேண்டும். ஆனால் பெரும்பாலான நேரங்களில் நாம் இவ்வாறு இல்லை என்பது தான் உண்மை.ஏனெனில் நாம் பிறருக்குத் தீர்ப்பிட விரும்புகிறோமே தவிர நம்மைத் தீர்ப்பிட விரும்புவதே இல்லை.

நாம் பிறரைத் தீர்ப்பிடும் போது அதிக தவறுகளைச் செய்கிறோம்.
முதலாவதாக ஒருவருடைய பேச்சு, நடத்தை, வெளிச்செயல்பாடுகளைக் கொண்டு இவர் இப்படித்தான் என சட்டென்று முத்திரை குத்தி விடுகிறோம். 
இரண்டாவதாக ஒருவர் ஒருமுறை தவறு செய்வதை நாம் பார்த்துவிட்டால் அவர் எப்போதுமே இப்படித்தான் என்று முடிவுசெய்து விடுகிறோம்.

மூன்றாவதாக அவர் அச்செயலை செய்வதற்கான பிண்ணணி என்ன, சூழ்நிலை என்ன என்பதைப் பற்றி ஆராயாமல் ஒருவரைத் தீர்ப்பிட்டுவிட்டு அதை மற்றவருக்கும் பரப்பி அவருடைய நற்பெயரைக் கெடுத்துவிடுகிறோம்.கொலைக் குற்றம் செய்தவருக்குக் கூட உடனடித் தீர்ப்பு நீதிமன்றங்களில் வழங்கப்படுவதில்லை. தீர விசாரிக்கப்படுகிறது. ஆனால் நாம் தீர்ப்பிடும் போது விசாரணை என்ற பேச்சிற்கே இடமில்லாமல் போய்விடுகிறது.
ஆனால் இத்தகைய தவறுகள் நமக்கெதிராக இழைக்கப்பட்டால் நம்முடைய தரப்பின் நீதியை எடுத்துரைக்க பாடுபடுகிறோம் அல்லவா. பிறர் நம்மை புரிந்து கொள்ள வேண்டும் என விரும்பும் நாம் பிறரைப் புரிந்து கொள்ளாமல் அலட்சியப் படுத்தினால் நாம் நல்ல நீதிபதியா? இல்லை.

இன்றைய நற்செய்தியில் இயேசு "தீர்ப்பிடாதீர்கள். தீர்ப்பிடப்படுவீர்கள்" எனக் கூறுகிறார். மேலும்
"வெளிவேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணிலிருந்து மரக்கட்டையை எடுத்தெறியுங்கள். அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணிலிருந்து துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும்."(7:5) என்று கூறி நம்மை நாமே ஆராய்ந்து தீர்ப்பிட வேண்டும் என்று கூறுகிறார். இவ்வாறு கூறுவதால் நமக்கு நாம் தண்டனைத் தீர்ப்பு வழங்க வேண்டும் என்பது பொருளல்ல. மாறாக நமது செயல் சரியானதா? அதனால் யாரும் பாதிக்கப்படுகிறார்களா? நம்மிடம் குற்றம் எதுவும் உள்ளதா? என சோதித்து அதை சரிசெய்ய முயற்சி செய்ய வேண்டும். இதுதான் நமக்கு நாமே வழங்குகின்ற தீர்ப்பு.

மனிதராகப் பிறந்த அனைவருமே ஏதாவது ஒருவிதத்தில் பலவீனம் உடையவர்களாகத்தான் இருக்கிறோம். அனைவரும் ஒரே தவறைச் செய்வதில்லை. வேறு வேறாக தவறுகள் செய்தாலும் எல்லாருமே தவறுகிறோம் என்பது தான் உண்மை. இவ்வாறு எல்லாருமே பலவீனர்களாய் இருக்கின்ற போது தீர்ப்பிடுவது முறையற்ற செயலன்றோ. இவ்வாறு பிறரைத் தீர்ப்பிட்டு அவர்களை மனநோகச் செய்வதைத் தவிர்த்து நம்மையே நாம் சோதித்து,தீர்ப்பிட்டு நம் வாழ்வுப்பாதையை சீரமைக்க முயன்றால் எவ்வளவு நலமாயிருக்கும். நமக்கு நாமே நீதிபதி ஆவோமா?

இறைவேண்டல் 

நீதியின் இறைவா! நீர் ஒருவரே உண்மையான நீதிபதி. ஆயினும் நீர் எங்களைத் தீர்ப்பிட விரும்புவதில்லை. ஆனால் நாங்களோ எங்கள் தவறை உணராமல் பிறருக்குத் தீர்ப்பிடுகிறோம். எங்களை மன்னியும். நாங்கள் எங்களையே தீர்ப்பிட்டு தவறுகளைச் சீர்திருத்தி உமக்கேற்ற வாழ்வு வாழ அருள் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்